தமிழ்நாடு

"ஜல்லிக்கட்டில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி கட்டாயம்" : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

300 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

"ஜல்லிக்கட்டில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி கட்டாயம்" : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

300 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCT Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர்கள் (RT-PCR Test Result) மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும். பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வெளியூரில் வசிப்பவர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories