தமிழ்நாடு

“மக்கள் வரிப்பணத்தை அபகரிக்க சொல்றாரா ஓ.பி.எஸ்?” : புள்ளிவிவரங்களோடு பதிலடி கொடுத்த அமைச்சர் இ.பெரியசாமி!

அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நகைக்கடன் மோசடிகளை விவரித்துள்ளார் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி.

“மக்கள் வரிப்பணத்தை அபகரிக்க சொல்றாரா ஓ.பி.எஸ்?” : புள்ளிவிவரங்களோடு பதிலடி கொடுத்த அமைச்சர் இ.பெரியசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்கிற நகை அடகுக் கடைக்காரர் 672 நகைக்கடன் வாங்கியிருக்கிறார்" என அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நகைக்கடன் மோசடிகளை விவரித்துள்ளார் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். “ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை, சில தகுதிகளின்கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.” என அறிவித்தார்.

அதன்படி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள், நகைக்கடன் தொகை முழுமையாகச் செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் கடன் பெற்ற குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற நபர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், குடும்ப அட்டை எண் ஆதார் அட்டை எண் வழங்காதவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடைமுறையை அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திரித்து, மக்களை அரசு ஏமாற்றுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி புள்ளிவிவரங்களோடு எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, “முந்தைய ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளன.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் குறுக்குவழியில் நகைக்கடன் பெற்றுள்ளனர். இதை யார் வாங்கியிருக்கிறார்கள், தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்கிற நகை அடகுக் கடைக்காரர் 672 நகைக்கடன் வாங்கியிருக்கிறார். எல்லாமே 5 பவுனுக்கும் கீழ். அவருக்கு தள்ளுபடி கொடுத்துவிடலாமா? அரசின் மக்களின் வரிப்பணத்தை அபகரிப்பது அல்லவா, இது? இதை தரலாம் என்கிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

இதேபோல, நகையே இல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் 223 பொட்டலங்களுக்கும் மேலாக 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கவரிங் நகைகளை வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள்.

பல்வேறு வகைகளில் கூட்டுறவுக் கடன் தள்ளுபடியைப் பெறவேண்டும் என்பதற்காக ஆதாயத்தைப் பெற உள்நோக்கத்தோடு செயல்பட்டதை எப்படி தள்ளுபடி செய்யமுடியும்?

மொத்தம் 48 லட்சம் நகைக்கடன்களை ஆய்வுசெய்ததில், 5 பவுனுக்கு மேல் உள்ள 35 லட்சம் பேர் வருகிறார்கள். 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி அளித்திருக்கிறோம்.

ஒரு பைசாகூட மக்களின் பணத்தை வீணாக்காமல் மக்களிடம் சென்றுசேர்க்க வேண்டும். ஒரே ஆதார் அட்டையில் நூற்றுக்கணக்கான கடன்களை வாங்கியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் தள்ளுபடி செய்யவில்லை. இதில் எந்தவித தவறும் இல்லை.

நிச்சயம் நம் கட்சி ஆட்சிக்கு வராது எனத் தெரிந்தே இப்படிச் செய்திருக்கிறார்கள். அப்போது யார் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழுவில் இருந்தது? தருமபுரி, சேலம் என மாவட்டமுறைகேடுகளை ஆதாரமாகத் தரத் தயாராக இருக்கிறோம்“ என புள்ளிவிவரங்களோடு விளக்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories