தமிழ்நாடு

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

“காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைத் நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2021) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“கோவில்களில் பெரிய கோவிலாக அமைந்திருப்பது தஞ்சையில்தான்!

பெருமை வாய்ந்த, கல்லணை இந்த தஞ்சை பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கே சோறு போடக்கூடிய நெற்களஞ்சியமாக இந்த தஞ்சை விளங்கிக் கொண்டிருக்கிறது.

சோழர்கள் ஆட்சியின் தலைநகர் இதுதான்.

காவிரி பாயும் மண்ணும் இந்த தஞ்சைதான்.

இவை அனைத்துக்கும் மேலாகத் தலைவர் கலைஞர் அவர்களுக்குப், போராட்டப் பயிற்சி கொடுத்து, அவரை உலகத் தலைவர்களில் ஒருவராக உயர்த்தியதும் இந்தத் தஞ்சைதான்.

அத்தகைய தஞ்சை மண்ணில் மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெறும் இந்த அரசு விழாவில் நானும் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை, அடிக்கல் நாட்டு விழாவை நடத்திவைக்கக்கூடிய ஒரு பெருமை, சிறப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாமன்னன் இராசராசன், தான் ஒரு மாமன்னன் என்பதன் அடையாளமாகப் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். அத்தகைய மாமன்னனுக்குப் பெருவுடையார் கோயிலில் சிலை அமைத்திட வேண்டுமென்று நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், கோயிலைக் கட்டியவர் அவர். ஆனால் அவருக்கு கோயிலில் சிலை வைக்க அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை, கோயிலின் உள்ளேதானே சிலை வைக்கக்கூடாது, நான் கோயிலுக்கு வெளியே சிலை வைக்கிறேன் என்று சொல்லி தலைவர் கலைஞர் அவர்கள் அதை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.

இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயிலின் ஆயிரமாண்டு விழாவை நடத்தியவரும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்த விழாவிற்கு இதுவரையில் யாரும் பார்த்திராத வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த விழாவின் நிகழ்ச்சிக்கு வருகிறபோது பட்டுவேட்டி கட்டிக் கொண்டு வந்தார் என்பது வரலாறு.

அந்த அளவுக்குப் பெரிய கோயிலையும், மாமன்னன் இராசராசனையும், அத்தோடு சேர்த்து, தஞ்சையையும் பெருமைப்படுத்திய அரசுதான், கலைஞர் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் பெருமையோடு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

தஞ்சை என்றாலே காவிரி பூமி! காவிரி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் பிரச்சினை வந்தபோதே - அதாவது 1970-ஆம் ஆண்டே, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாகத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் எடுத்து வைத்தார்கள். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971-ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத்தான் 1990-ஆம் ஆண்டு மத்தியில் பிரதமராக இருந்த வி.பி. சிங் அவர்களை சந்தித்து வலியுறுத்தி, வற்புறுத்தி, காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தரப்பட வேண்டும் என்ற இடைக்காலத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். இப்படி அறிவிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு ஒழுங்காக வழங்குகிறதா என்று கண்காணிப்பதற்காக, ஒரு கண்காணிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை செய்து 1997-ஆம் ஆண்டு அதைச் செய்து முடித்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அவர் பிரதமராக இருந்த போது, அது அமைய காரணமாக இருந்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்!

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

காவிரி இறுதித் தீர்ப்பும் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், 2007-ஆம் ஆண்டு நமக்குக் கிடைத்தது. வந்தது. இப்படி காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைத் நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். அத்தகைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இந்த மாபெரும் நிகழ்ச்சி இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் இதில் திரள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், இன்றைக்கு கொரோனாவின் தாக்கத்தை தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் இன்றைக்கு வேறு பெயரில் அந்தத் தொற்று வரக்கூடிய சூழலில் ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் அது பெரிய அளவிற்கு உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தாலும், நம் தமிழகத்திற்கு அதுபோன்ற நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் நான் சென்னைக்கு அழைத்து இப்போது நிகழ்ச்சி தேவையா?

அந்த நிகழ்ச்சி நடத்தும்போது அதனால் தொற்று ஏற்பட்டுவிடுமா என்று அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்குப்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் கலந்துபேசி, இந்த தஞ்சையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 22,000 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தப்போகிறோம் என்று சொன்னார்கள். அப்படியென்றால், இலட்சத்தை தாண்டக்கூடிய அளவிற்குத்தான் பொதுமக்கள் இங்கு வருவார்கள். அதற்கேற்ற வகையில்தான் பந்தலும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது தொற்று ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியுள்ளதால், தயவு கூர்ந்து நிகழ்ச்சியை ஒத்திவைக்கலாமா, இரத்து செய்யலாமா என்று யோசித்தபோது, கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க அரசு விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்கக் காத்திருக்கிறோம், எனவே, 5000 நபர்களுக்கு மட்டும்தான் வழங்கி நிகழ்ச்சியை நடத்தி முடிக்கலாம் என்று திட்டமிட்டு அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், ஏறக்குறைய 22,000 நபர்களுக்கு நாம் தகவல் சொல்லியிருக்கிறோம். அவர்கள் ஏமாற்றமடைய வேண்டாம். இங்கே 5,000 பயனாளிகளுக்குத் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. மீதமுள்ள பயனாளிகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நம்முடைய ஆட்சித் தலைவர் மூலம் நியமிக்கப்படக்கூடிய சில அதிகாரிகள் மூலம் உங்கள் வீடுதேடி வந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

அதேபோல் நேற்று மாலையில் நான் தஞ்சைக்கு வந்த பிறகு நான் தங்கியிருக்கும் இடத்திற்கு ஆட்சித் தலைவரையும், சில அதிகாரிகளையும் அழைத்து, சில விவரங்களை நான் ஆட்சித்தலைவரிடத்தில் கேட்டேன், அது என்னவென்றால், விவசாயிகளை அழைத்து பேசினீர்களா? விவசாயிகள் அழைத்து கலந்துரையாடல் நடத்தி இருக்கிறீர்களா? அப்படி நடத்துகிற நேரத்தில் அவர்கள் சொன்ன முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை உங்களிடமும் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.

1973 அதாவது 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாதனை அளவாக 1,66,135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொன்னார்.

குறுவை இலக்கு என்பது 1,06,250 ஏக்கர் தான். ஆனால் அதையும் தாண்டி மிக அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக சொன்னார்கள் என்று என்னிடத்தில் அவர் சொன்னார்.

இந்த சாதனைகளை அடைவதற்கு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் தான் காரணம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வழக்கமாக சூன் 12 ஆம் தேதி நாங்கள் மேட்டூர் அணையைத் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது நிறைவேறாத நிலையில் இருந்தது, குறித்த காலத்திற்குள் திறக்கப்பட முடியாத சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டது. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்தபிறகு, சூன் 12 ஆம் தேதி மிகச்சரியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டோம். இதில் என்ன முக்கியம் என்று கேட்டால்,

 • இப்படித் திறந்து விடுவதற்கு முன்னதாக டெல்டா பகுதியில் தூர்வாரவேண்டும் என்ற ஒரு திட்டத்தை வேகப்படுத்தி, அப்படி தூர் வாரி முடித்தால் இதனால் கடைமடை பகுதி வரைக்கும் தண்ணீர் போகும் என்று திட்டமிட்டு அந்தப் பணியை நிறைவேற்றினோம்.

 • குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவித்தோம். இதன் மூலம் மானியத்தில் உரங்கள் வழங்கினோம். நெல் விதைகளை 50 சதவிகித மானியத்தில் வழங்கினோம்.

இவை அனைத்தும் சேர்ந்து தான் நெல் சாகுபடியை அதிகப்படுத்தி, இந்த நெல் சாகுபடியை அதிகப்படுத்துவதும் - சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவதும் தான் இந்த அரசினுடைய இலக்காக அமைத்தோம்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் ஆறு மாத காலத்திலே மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக 2021 -22ஆம் ஆண்டு சம்பா / தாளடி இலக்கு என்பது 3,12,599 ஏக்கருக்கு பதிலாக 3,42,973 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேற்றைக்கு என்னிடத்தில் சொன்னார்.

நம்முடைய அரசு தமிழகத்தில் மாபெரும் வேளாண் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத அளவிற்கு நம்முடைய தமிழ்நாட்டிலே நிறைவேற்றி காட்டி இருக்கிறோம். அந்த நிதிநிலை அறிக்கை மூலமாக தமிழகத்தில் வேளாண் புரட்சியை உருவாக்குவோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

அடுத்து, தஞ்சை மாவட்டத்துக்கான அரசுப் பணிகளை, அரசுத் திட்டங்களை மக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை கவனிக்கவும், துரிதப்படுத்தவதற்கும், என்னதான் ஆட்சித் தலைவர், அதிகாரிகள் அதில் கடுமையாக அந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், ஆனால் அரசோடு அன்றைக்கு அன்றைக்கு தொடர்பு வைத்து, அந்தந்த நிமிடத்தில் தொடர்பு வைத்து பேச வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நாங்கள் நியமித்தோம்.

பொதுவாக, இன்னொரு மாவட்டத்துக்கு வந்து பணிகளைச் செய்வது என்பது சாதாரண காரியம் கிடையாது, எல்லோராலும் முடியாது. அதனால்தான் எந்த நிலத்திலும் வளரும் மரம் என்பதை நம்முடைய அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்பதை நான் இங்கே நினைவூட்ட விரும்புறேன். உள்ளபடியே அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை இந்த அரசின் சார்பில் இந்தப் பணிகளை மேற்கொண்டதில் ஓரளவிற்கு வெற்றிப் கண்டிருக்கிறார் என்பதற்காக நான் அவரைப் பாராட்ட, அவருக்கு வாழ்த்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுவும், அன்பிலார் குடும்பத்துக்கும் நம்முடைய தலைவர் குடும்பத்துக்கும் என்ன நட்பு என்பது உங்களுக்குத் தெரியும். மூன்று தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் நட்பு! தலைவர் குடும்பம் என்று சொன்னாலும், எங்கள் குடும்பம் என்று சொன்னாலும், அது தப்பு கிடையாது. தலைவர் கலைஞர் அவர்களுக்கு அன்பில் தர்மலிங்கம் எப்படி உற்ற தோழனாக இருந்தாரோ, அதுபோல அவருடைய மகன் மறைந்த அன்பில் பொய்யாமொழி அவர்கள் எனக்கு எவ்வளவு உற்ற தோழனாக இருந்தார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் இருந்து சிறப்பித்திருக்க வேண்டிய, அவர் இருந்து அமைச்சராக ஆற்ற வேண்டிய பணியை, இன்றைக்கு அவரது மகன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார், அதிலும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலமாக நம்முடைய அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை உங்கள் கரவொலியின் மூலமாக என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்பில் அழைக்கிறார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டதுண்டு. இப்பொழுது அன்பில் மகேஸ் நம்மை அழைக்கிறார் என்ற உணர்வோடு இந்த நிகழ்ச்சிக்கு நாம் வந்திருக்கிறோம் அது தான். ஆகவே, இங்கே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், தஞ்சை மாவட்டம் முழுக்க அவர் சுற்றிச் சுழன்று பொதுமக்களைச் சந்தித்து மனுக்களை எல்லாம் வாங்கி இருக்கிறார்.

மனுக்களுடைய கணக்கைப் பற்றி அவர் சொன்னார். 48 ஆயிரத்து 550 மனுக்கள் இதுவரை அவர் மூலமாக பெறப்பட்டிருக்கிறது. இதில் இந்த இரண்டு மாத காலத்தில், அதாவது 48 ஆயிரத்து 550 மனுக்களில் 50 சதவீதம் அதாவது 22 ஆயிரத்து 997 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற மனுக்கள் தகுதியானவை தானா? என்பதை தீர விசாரித்து, பரிசீலித்து நிச்சயமாக சொல்கிறேன் அதில் நியாயம் இருக்கவேண்டும் என்று சொன்னால், உறுதியாக அவைகளும் நிறைவேற்றப்படும் என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

'சொன்னதைச் செய்வோம் -செய்வதைச் சொல்வோம்' – இது தலைவர் கலைஞருடைய சொற்கள். இப்பொழுது சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதை கண்கூடாக இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய பல்வேறு பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வழங்கப்படக் கூடிய ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வற்புறுத்தி, வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் சட்டமன்றத்திலும் பேசினார். அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடத்திலும் போராடி இருக்கிறார். ஏன் என்னிடத்தில் கூட வாதாடி இருக்கிறார். ஆகவே அந்த அடிப்படையில் தான் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். தொழிலாளர்களுடைய கோரிக்கையை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய திரு.சக்கரபாணி அவர்களும் என்னிடம் தெரிவித்தார். இவற்றை பரிசீலித்து அங்கே பணிபுரியக்கூடிய பட்டியல் எழுத்தருக்கு வழங்கப்படக்கூடிய மாதாந்திர ஊதியம் ரூ.5285 ஆகவும், உதவியாளர்களுக்கு, காவலர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஊதியத்தை ரூ.5218 ஆகவும் உயர்த்தி, அகவிலைப்படித் தொகை ரூ.3499 சேர்த்து வழங்கிட ஒப்புதல் அளித்திருக்கிறேன் என்று நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், இங்கு பணிபுரியக்கூடிய சுமை தூக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடியக் கூலித் தொகையை மூட்டை ஒன்றுக்கு ரூ.3.25லிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்புதலை நான் அறிவித்திருக்கிறேன். அதுமட்டுமின்றி பருவகால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்களுக்கு போக்குவரத்துப்படியும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 83 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இப்போதுள்ள நிதி நெருக்கடியிலும், நமது நெல் கொள்முதல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் நோக்கத்தை முழுமையாக மனதிலே நிலைநிறுத்தி தங்களது உழைப்பின் பயனாக நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரக்கூடிய விவசாயிகள் எந்தவித புகார்களும் தெரிவிக்க இடமளிக்காதவாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் சேவை ஆற்றிட வேண்டுமென்று நான் இந்த தருணத்திலே வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மனுக்களின் கோரிக்கைகளை - விண்ணப்பங்களை - மனுக்களை நிறைவேற்றித் தருவதற்காகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

இன்று ஏதோ இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் - அது எங்களுக்காக அல்ல. மக்களுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. என்னென்ன திட்டங்கள் என்று பார்த்தீர்கள் என்றால்,

 • இலவச வீட்டுமனைப்பட்டாக்கள்

 • ஓய்வூதியங்கள்

 • உழவர் பாதுகாப்புத் திட்டம்

 • கருணை அடிப்படையில் வேலை

 • புதிய குடும்ப அட்டைகள்

 • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம்

 • புதிய வேலைவாய்ப்புகள்

 • ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்

 • தையல் இயந்திரங்கள்

 • பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம்

 • தேசிய வளர்ச்சி வேளாண்மைத் திட்டம்

 • மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

 • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்

 • தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

 • கூட்டுப்பண்ணைத் திட்டம்

 • நம்முடைய தலைவர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்டம்

 • தோட்டக்கலை இயக்கம்

 • நெல் அறுக்கும் இயந்திரம் வழங்குதல்

 • மரச்செக்கு வழங்குதல்

 • மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான உதவிகள்

 • கூட்டுறவுத்துறை மூலமாக பல்வேறு கடன்கள்

 • தொழிலாளர் நலத்துறை மூலமாக பல்வேறு நிதிகள் என்று மொத்தம் 44 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நலத் திட்ட உதவிகள் கொடுக்கப்படும் காட்சியை பார்க்கும் போது உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைய வழிவகை செய்துள்ளோம்.

இவை அனைத்துக்கும் ஏறத்தாழ 238 கோடி ரூபாய் இதற்கென்று நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு முடியவில்லை. இது தொடக்கம்தான். இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் நிச்சயமாக, உறுதியாக தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

வளர்ச்சியின் குறியீடு என்று சொல்லப்படுகின்ற அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவது தான் எங்களுடைய ஒரே இலக்கு. நாளைக்கே அனைத்தையும் மாற்றிவிடுவோம் என்று நான் சொல்லவில்லை. அந்த அளவுக்கு கற்பனையில் மிதப்பவன் நான் இல்லை. எந்த இலக்கையும் அடைவதற்கு முன்னால் அந்த இலக்கை மிகச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படி சரியான இலக்கை நான் தீர்மானித்துள்ளேன். வளர்ச்சியின் குறியீடான அனைத்திலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்குவதுதான் எனது இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசு செய்துதர முன்வர வேண்டும்.

“சொல்லாததையும் செய்யும் ஆட்சி இது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” : முதலமைச்சர் பேச்சு!

இந்த நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய அருமை தம்பி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும், அவருக்கு துணை நின்றிருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், உள்ளாட்சி அமைப்பில் இருக்கக்கூடிய பிரதிநிதிகளுக்கும், இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்திலே தேவையான அனைத்தையும் அரசு செய்து தர முன்வந்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே நான் தெரிவித்து, குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள், ஓய்வூதியங்கள், பட்டாக்கள் ஆகியவற்றை எதிர்நோக்கி காத்திருக்கக்கூடிய பொதுமக்கள் அத்தனை பேரும் இந்த அரசுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பை எந்த அளவுக்குத் தருகிறீர்களோ அதற்கு மேலாக உங்களுக்குப் பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்.

இதை பேசிவிட்டு ஓய்வெடுக்கப் போகிறவர்கள் நாங்கள் அல்ல. அதை சொன்னதை செய்கிற ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி. கலைஞர் அப்படிதான் நம்மை எல்லாம் உருவாக்கியிருக்கிறார். எனவே அவர் வழிநின்று என்னுடைய கடமை தொடரும், தொடரும், தொடரும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அத்தனை பேருக்கும் நான் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories