தமிழ்நாடு

“உங்க ஆட்சியை மனசுல வச்சிக்கிட்டு அறிக்கை விடுங்க” : ஓ.பன்னீர்செல்வத்துக்கு செந்தில்பாலாஜி பதிலடி!

மின்வாரியத்தில் கடந்த ஆட்சி காலத்தில் என்ன வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை மனதில் வைத்து அறிக்கை வெளியிட வேண்டும் எனஅமைச்சர் செந்தில்பாலாஜி ஓ.பன்னீர்செல்வத்தை சாடியுள்ளார்.

“உங்க ஆட்சியை மனசுல வச்சிக்கிட்டு அறிக்கை விடுங்க” : ஓ.பன்னீர்செல்வத்துக்கு செந்தில்பாலாஜி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மின்வாரியத்தில் கடந்த ஆட்சி காலத்தில் என்ன வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை மனதில் வைத்து ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட வேண்டும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த 4.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி என்பது 53 சதவீதம் மட்டுமே. விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவது 2017ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. இப்போதுதான் புதிதாக மீட்டர் பொருத்தப்படுவது போல ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 17 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துச் செல்லும்போது இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றிகளில் டி.பி மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அதற்கான அறிவிப்பு இந்த கூட்டத்தொடரில் வரும்.

மின் வாரியத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. மாதாந்திர கணக்கெடுப்புக்கு இரண்டு பங்கு ஊழியர்கள் தேவை. சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின்பாதை அதிகரிக்கப்பட்ட பிறகு மற்ற மாநகராட்சிக்கு முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.

விவசாய நிலங்களுக்கு மேல் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் போராடி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு இழப்பீடு பெறாத விவசாயிகள் பட்டியல் அளித்தால், ஒரு மாத காலத்துக்குள் இழப்பீடு வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories