தமிழ்நாடு

“பண்டிகை காலங்களில் கூட்டம் கூடக் கூடாது”: பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய வேண்டுகோள்!

பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பண்டிகை காலங்களில் கூட்டம் கூடக் கூடாது”: பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று (24.12.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களான உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் மனோஜ் முர்ஹேக்கர், துணை இயக்குநர் மருத்துவர் பிரதீப் கவுர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜே.வி.பீட்டர், உலக சுகாதார மையத்தின் தென் மண்டலக் குழுத் தலைவர் மருத்துவர் கே.என்.அருண்குமார், இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நகர சுகாதார அலுவலர் மருத்துவர் பி.குகானந்தம், அப்போலோ மருத்துவனையின் தொற்றுநோய் வல்லுநர் மருத்துவர் வி.இராமசுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

  • பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

  • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

  • மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

  • அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories