தமிழ்நாடு

‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!

சண்முகநாதன். அரைநூற்றாண்டு காலமாக தமிழ்நாடு அறிந்து வைத்திருந்த பெயர். முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வரலாற்று பதிவேடாகவே மாறிப்போன ஒப்பற்ற சீடர் சண்முகநாதன்.

‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஒரு தலைவரின் பேச்சை குறிப்பெடுக்கும் சுருக்கெழுத்துக்காரராக சுருங்காமல் தமிழ்நாட்டின் பொன்னேட்டுக்களில் பதிக்கப்படும் திராவிட ஆட்சியின் மேன்மைக்கு உழைத்த முத்தமிழறிஞரின் முதன்மை தொண்டராக உயர்ந்தவர்.

50 ஆண்டுகாலம் ஒரு தலைவரின் நிழலாக ஒருவர் பின்தொடர முடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் சண்முகநாதன்.

தமிழ்நாடு காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணிபுரிந்துவந்தவர் சண்முகநாதன். எதிர்கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவதுதான் சண்முகநாதனின் பணி.

1969 ஆம் ஆண்டில் திடீரென ஒருநாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரிடமிருந்து சண்முகநாதனுக்கு அழைப்பு வருகிறது. எதற்காக தெரியுமா?

பொதுப்பணித்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக சண்முகநாதன் சேரவேண்டும் என்பதற்காக.

ஆம். சண்முகநாதனின் ஆற்றலும், அறிவுகூர்மையும் முத்தமிழறிஞரை கவர்ந்தது. சண்முகநாதன் தனக்கு எப்படி உதவியாளராக மாறினார் என்பது குறித்து முத்தமிழறிஞர் கலைஞரே 2014 ஆம் ஆண்டு சண்முகநாதன் இல்லத் திருமண விழாவில் மனம் திறந்திருக்கிறார்.

‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!

அப்போது மேடையில் பேசிய அவர், சண்முகநாதனுக்கும், தனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை வெளியிட்டார். அந்த விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் பேசும்போது “ முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர்.

அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கும் போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்தும் போனேன்.

என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ’

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்ட நேரத்தில், ‘மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்’ என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது.

யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன்.

சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்” என்று உருக்கமாக கூறினார்.

‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!

கோபாலபுரம் தொடங்கி முரசொலி அலுவலகம், அறிவாலயம், தலைமைச்செயலகம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் செல்லுமிடம் எல்லாம் நிழலாக பின்தொடர்ந்தவர் சண்முகநாதன். மிசா நெருக்கடி காலத்தில் சண்முகநாதனையும் அதிகாரத்தின் பிடி துரத்தியது. தலைவரின் உரையை மறைந்து, ஒளிந்து பதிவு செய்து செய்தித்தாள்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அளித்து வந்தார் சண்முகநாதன். இந்த அரும்பணியை தூக்கம் தொலைத்து தொய்வில்லாமல் செய்து திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம் தொடர்ந்து இயங்க பெரும்பணியாற்றியவர் அவர்.

மிசா நெருக்கடி காலத்தில் தனது பணி குறித்து, ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்த சண்முகம் நாதன், ‘’மிசா நெருக்கடி நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் வழக்கத்தைவிட தீவிரமாக பணியாற்றினார். அப்போது தளபதி ஸ்டாலின், அண்ணன் முரசொலி மாறன் உள்பட கழகத்தின் முன்னணியினரை சிறையில் அடைத்தனர். அப்போது சில நாட்கள் நான் தலைவரிடம் பணிக்குச் செல்லவில்லை. அந்தசமயத்தில் யோகலட்சுமி திருமண மண்டபத்தில் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தலைவரின் உரையை எழுதக் காத்திருந்தேன். மேடையில் இருந்த தலைவர் என்னைப் பார்த்து விட்டார். ‘யாருக்கும் தெரியாமல் சென்று தலைவரின் காருக்குள் அமரவும்’ என்று எனக்கு செய்தி வந்தது. பிறகு வந்தவர், என்னைப்பற்றி விசாரித்துவிட்டு, ‘இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நாளையில் இருந்து பணிக்கு வரலாம்’ என்றார்’’ என்று தனது மிசா கால நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் அரை நூற்றாண்டு காலம் ஒரு தலைவனின் அணுக்கத் தொண்டனாக பணியாற்றியுள்ளார்.

முத்தமிழறிஞர் குறித்து சண்முகநாதனின் கருத்து என்னவாக இருக்கும்?. இதோ.. தனது தலைவனைப்பற்றி சிலாகிக்கும் அவர்,

‘’கிட்டத்தட்ட இந்த அரைநூற்றாண்டு காலத்தில் தலைவரிடம் நான் பெற்ற அனுபவம், என் பெற்றோர் செய்த நல்வினைகளின் பயனாக எனக்குக் கிடைத்தது. இந்த 48 ஆண்டுகள் நான் உதவியாளனாக ஊழியம் செய்தேன் என்பதைவிட, தலைவரிடம் சீடனாகக் கற்றுக் கொண்டவை ஏராளம், ஏராளம். உலககில் வேறு யாரையும்விட, அதிகப் பக்கங்கள் கைப்பட எழுதி எழுதியே இமயம் அளவுக்கு குவித்துப் படிப்படியாக புகழேணியின் உச்சத்திற்கு சென்றவர் ஒருவர் உண்டென்றால், அது தலைவர் கலைஞர் ஒருவராகத்தான் இருக்க முடியும். கலைஞர் உடல் நலத்தோடு இருந்தவரை அவர் எழுதாத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். என்றாவது ஒருநாள் எழுதமுடியாமல் போனால், ‘இன்னைக்கு வீண் பொழுதாப் போயிடுச்சே’ என்று வேதனைகொள்வார் என்று தலைவனின் பெருமையை பறைசாற்றியுள்ளார் சண்முகநாதன் எனும் ஒப்பற்றச் சீடர்.

முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டதைப் போன்று சண்முகநாதன் அரை நூற்றாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வினையூக்கியாக முத்தமிழறிஞரின் இதயத்தில் வாசம் செய்தவர்.

இன்று அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் சிந்தித்த போதெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையும், தி.மு.க எனும் பேரியக்கத்தையுமே தன் உணர்வாக்கி உலவினார்.

சண்முகநாதன் ஒரு சகாப்தம். அவர், முத்தமிழறிஞர் கலைஞர் கண்டெடுத்த புதையல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று பெட்டகம்.

ஓங்குக சண்முநாதன் புகழ்!.

- பி.என்.எஸ்.பாண்டியன்.

banner

Related Stories

Related Stories