தமிழ்நாடு

“பேராசிரியர் பெயரை சூட்டியதற்கு எரிச்சல் படுகிறீர்களே.. உண்மை தெரியுமா?” : EPS, OPS-க்கு அமைச்சர் பதிலடி!

“பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

“பேராசிரியர் பெயரை சூட்டியதற்கு எரிச்சல் படுகிறீர்களே.. உண்மை தெரியுமா?” : EPS, OPS-க்கு அமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவராகவும், தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், இரு முறை நிதி அமைச்சராகவும் செயல்பட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கமாக, அன்னாரின் நினைவையும், சமூகச் சீர்திருத்தத்திற்கான அவரது பங்களிப்பையும் போற்றும் விதமாக, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத “கல் மனம்” படைத்தவர்களாக அ.தி.மு.க எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமியும், எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது.

சட்டமன்றத்தில்- கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முறைப்படி நிதியமைச்சர் அவர்கள் மூலம் அறிவித்து- அதை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியிருப்பதற்குத் கண்டனத்தைத் தெரிவிக்கிறார்கள் என்றால்- அவர்கள் மனதில் திராவிட இயக்க சிந்தனைகள் அறவே நீர்த்துப் போய்விட்டன என்பதை மீண்டும் ஒரு முறை இப்போது தெளிவுபடுத்தி விட்டது.

“பேராசிரியர் பெயரை சூட்டியதற்கு எரிச்சல் படுகிறீர்களே.. உண்மை தெரியுமா?” : EPS, OPS-க்கு அமைச்சர் பதிலடி!

பத்தாண்டு காலம் பதவி சுகம் அனுபவித்து- இன்றைக்கு ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இவர்களால் திராவிட இயக்கத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பேராசிரியர் அவர்களுக்கு பெயர் சூட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் படுகிறார்கள். ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து அறிக்கை விடத் துடிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

ஆனால் பேராசிரியர் பெயரில் அந்த மாளிகைக்கு பெயர் சூட்டப்பட்டதில் உள்ள உண்மை தகவல்களைக் கூட அறியாமல்- அதுவும் நிதியமைச்சராக இருந்த ஒருவரும், முதலமைச்சராக இருந்த இன்னொருவரும் அறிக்கை விட்டிருப்பதால் உண்மையை விளக்க- அவர்களுக்கு ஒரு விளக்கத்தை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சென்னை நந்தனத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள 'அம்மா வளாகத்தில்' உள்ள ஒரு கட்டிடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்திற்குத்தான் “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது பெயரிடப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரையோ, அதற்குரிய அரசாணையையோ மாற்றவில்லை- அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அ.தி.மு.க ஆட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் கட்சிய புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது போல் செய்து நாங்கள் செய்து விடவில்லை. அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எங்கள் தளபதி- முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பின், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு முந்தைய அரசின் திட்டங்களையோ, பெயர்களையோ மாற்றவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எதுவுமே தெரியாதது போல் அறிக்கை விட வேண்டும் என்று நினைக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும், எதிர்கட்சி துணை தலைவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் அவர்கள் வெற்று அறிக்கைகள்- வீண் புரளிகள்- பொய்க்குற்றச்சாட்டுகளை வைத்தே கடந்த ஆறு மாதமாக அரசியல் நடத்தி வருகிறார்கள். ஆக்க பூர்வமான அரசியல் என்பதன் அரிச்சுவடியே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கழக ஆட்சியில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்திகு “கலைஞர் மாளிகை” என பெயரிடப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன் காழ்ப்புணர்ச்சியோடு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை அ.தி.மு.க ஆட்சி அடியோடு அகற்றிவிட்டதை வசதியாக மறந்து விட்டு இன்றைக்கு நடைபெறாத ஒன்றிற்காக அறிக்கை விட்டு இருப்பது வெட்கக்கேடாகும்.

பொதுவாக நிறையக் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு ஒரு பெயரும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்குத் தனித்தனிப் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். உதாரணமாக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதே போல, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்வித்துறை வளாகமான டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்திற்கு ஈவிகே சம்பத் மாளிகை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்திற்கு அம்மா மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் கூட ஆட்சியிலிருந்த அவர்கள் உணரத் தயாராக இல்லை. அந்த அளவிற்கு திராவிட இயக்க வெறுப்பு அவர்கள் உடம்பெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் ஊறிப் போய் விட்டது.

ஆகவே பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்கட்சித் தலைவரும், எதிர்கட்சி துணை தலைவரும்- இது போன்ற அறிக்கைகள் வெளியிடும்போது குறைந்தபட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல்லாண்டுகால அரசியல் அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது என்று மேடைகளில் பேசினால் போதாது. செயல்களிடும்- தங்களின் அறிக்கைகளிலும் அது தலை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

    banner

    Related Stories

    Related Stories