முரசொலி தலையங்கம்

“தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன் முழுப்பாடலும் இல்லை தெரியுமா?” : முரசொலி தலையங்கம் விளக்கம்!

"இது தமிழ் மொழி - தமிழ் இன - தமிழ்நாட்டு உரிமை வேட்கை கொண்ட ஒருவரால் எழுதப்பட்டு இம்மூன்றும் கொண்ட முதலமைச்சரால் வழிமொழியப்பட்டுள்ளது."

“தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன் முழுப்பாடலும் இல்லை தெரியுமா?” : முரசொலி தலையங்கம் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேடு இன்று (டிச., 20, 2021) வெளியிட்டுள்ள சிறப்புத் தலையங்கம் வருமாறு:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே -உன்

சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!

- மனோன்மணீயம் தீட்டிய சுந்தரனார் (1855-1897) எழுதிய பாடல்.

1891ஆம் ஆண்டு எழுதிய பாடல் இது. இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அரைநூற்றாண்டுக்கு முன் தமிழ்நாடு அரசால் அறிவிக்க வைத்து தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அந்தப் பாடலை தமிழ்நாட்டு மாநிலப் பாடலாக அறிவித்திருப்பதன் மூலமாக தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலை பெற இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

தமிழ்த்தாயை வாழ்த்துவது என்பது ஒரு சடங்கு - சம்பிரதாயமாக அல்ல உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டியது என்று நினைத்து இந்த அரசாணையை வெளியிட்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த அரசாணை வெளிவருவதற்கு முன்னதாக இன்னொரு அரசாணையை முதலமைச்சர் வெளியிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தட்டு மூலமாக ஒலிப்பதைவிட - உரிய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதன் மூலமாக தமிழ்த்தாய் வாழ்த்து மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சமெல்லாம் குடியேறப்போகிறது. இப்போது மாநில மொழிப்பாடலாக அறிவித்திருப்பதன் மூலமாக மாபெரும் மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய தமிழ்வேள் உமாமகேசுவரனார் (நீதிக்கட்சியை தஞ்சை மாவட்டத்தில் வளர்த்த தீரர்கள் இருவரில் ஒருவர் இவர்! மற்றொருவர்தான் சர் ஏ.டி. பன்னீர் செல்வம்!) கண்ட கனவுதான் இது. கரந்தை தமிழ்ச்சங்க விழாக்களிலும், அதை ஒட்டி உருவான தமிழ் அமைப்புகளிலும் இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டது. தமிழகப் புலவர் குழுவும் இதனை வலியுறுத்தியது. இதனைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் வழிமொழிந்தார்கள்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில், “ ‘நீராருங் கடலுடுத்த' என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ் மொழிப் பற்றுடையவர் அனைவருக்கும் கரும்பாக இனிக்கிறது”என்றார்.

இலக்கிய மொழியல் அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் வெளியிட்ட அறிக்கையில், “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்” என்று வழி மொழிந்தார்.

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணிய வணக்கப் பாடலையே பாட வேண்டுமென்ற கருத்து பலஆண்டுகளுக்கு முன்பே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது ஆகும். அந்த வாழ்த்துப் பாடலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அது அவர் கலைப்பண்புக்கு தமிழன்புக்கு சீரியசான்றாகும்” என்று பட்டயம் போட்டுத் தந்தார். அவர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய முதலமைச்சரை வாழ்த்துவார்கள்!

இதனை முழுமையாகப் பாட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களுக்கு முழுப்பாடல் தெரியுமா எனத் தெரியவில்லை.

“பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்

எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்

உன் உதிரத்து, உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்

ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”- என்பதாகும்.

ஒரு மொழியை வாழ்த்தும் பாடலில் பிறமொழிப் பழிப்பு வேண்டாம் என்ற நெறிப்படி அவ்வரிகள் நீக்கப்பட்டதாக அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டது. முழுப்பாடலும் சுந்தரனாரின் சிந்தனையை மொத்தமாகச் சொல்லும்.

மனோன்மணீயம் நாடகக் காப்பியம் 1891இல் வெளியானது. தமிழ் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது இந்தப் பாடல்!

1892ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர், சுந்தரனாரைச் சந்தித்து பேசி இருக்கிறார். சுந்தரனாரின் வீட்டில் விருந்துண்டுள்ளார் விவேகானந்தர். அப்படி வந்தபோது, ‘உங்கள் கோத்திரம் என்ன?” என்று கேட்டுள்ளார் விவேகானந்தர். சுந்தரனார் எழுதுகிறார்: “வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்' என ஆத்திரமின்றி கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்” என்று தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். (மனோன்மணீயம் சுந்தரம், ந.வேலுசாமி, சாகித்ய அகாதமி, பக்கம் 116)

பெ.சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தில் நூல் பாயிரத்தில் உள்ள பாடல் இது. அவரே அதற்கு ‘தமிழ்த் தெய்வ வணக்கம்' என்று தான் தலைப்பிட்டுள்ளார். எனவே, இது தமிழ் மொழி - தமிழ் இன - தமிழ்நாட்டு உரிமை வேட்கை கொண்ட ஒருவரால் எழுதப்பட்டு இம்மூன்றும் கொண்ட முதலமைச்சரால் வழிமொழியப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories