தமிழ்நாடு

சிங்க முக மாஸ்க், விக்... CCTV-யில் பதிவான காட்சி : நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கும் தனிப்படை போலிஸார்!

வேலூரில் பிரபல நகைக்கடையில் 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கொள்ளையர்கள் சிங்க முகமூடி அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிங்க முக மாஸ்க், விக்... CCTV-யில் பதிவான காட்சி : நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கும் தனிப்படை போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வேலூரில் பிரபல நகைக்கடையில் 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கொள்ளையர்கள் சிங்கத் தலை முகமூடி அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வேலூரில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையின் கிளையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து, ஊழியர்கள் வழக்கம்போல் கடையைப் பூட்டிச் சென்றனர்.

நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்த பகுதிகளில் சுமார் 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3.50 கோடி எனக் கூறப்படுகிறது.

கடையின் மேல் தளத்தில் உள்ள சுவரில் துளை போடப்பட்டு, மேல்தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு நடுவே உள்ள சிமென்ட் தளத்தை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளயடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கடையின் உள்ளே அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில், வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த தளத்துக்குள் சிங்கத்தலை போன்ற முகமூடி அணிந்து நுழையும் ஒரு நபர் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அந்த கண்காணிப்பு கேமராவில் எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை.

அதேபோல, அங்குள்ள மேலும் சில கேமராக்கள் மீது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நகைக்கடையின் சுவர் ஓரத்தில் ஒரு விக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் அணிந்து வந்ததா எனவும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், "தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பட்டியலை எடுத்துள்ளோம். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

தனிப்படை நடத்திய விசாரணையில் ஒரு துப்பு கிடைத்துள்ளது. விரைவில் நகைக்கடை திருட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories