தமிழ்நாடு

”இது தமிழுக்கும், தமிழருக்குமான ஆட்சி” - தி.மு.க அரசுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் புகழாரம்!

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது தமிழுக்கு செய்யும் மரியாதை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

”இது தமிழுக்கும், தமிழருக்குமான ஆட்சி” - தி.மு.க அரசுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் மற்றும் தமிழருக்கான ஆட்சி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கிறார்கள் என நடிகர் ஆரி அர்ஜுனன் தி.மு.க. அரசை புகழ்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கைகான தகவல்கள் அடங்கிய தமிழ் மொழி செயலியை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

தமிழ் ஆர்வலரும் விஜிபி குழுமத்தின் தலைவருமான விஜி சந்தோசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயலியை தொடங்கி வைத்தார்.

இதில் நடிகர் ஆரி அர்ஜுனன், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இந்த செயலி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மொழியின் சிறப்புகள் அடங்கிய இணைய தமிழ் நூலகம், தமிழ் நாட்காட்டி குறிப்புகள், தமிழ் எழுத்து வரைவுகள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் மிக எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் ஆரி :-

ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக இல்லை. தமிழ் தமிழருக்கான ஆட்சி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கிறார்கள் என்றும் தமிழ் மொழி படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை என்ற அறிவிப்பு மூலம் தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை திமுக ஆட்சி முன்னெடுத்துள்ளது என்றார்.

மேலும் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 1 லட்சம் ரூபாய் அளிக்கிறேன் என்றும் தாய் மொழி அவமானம் இல்லை. நம் அடையாளம். மொழி சார்ந்த, கலை சார்ந்த அடையாளங்களை அரசு ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் :-

ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தமிழ் செயலி ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

தாய்மொழி தமிழை தாயாக பாவித்து வாழ்த்தும் பாடல் பாடும் போது எழுந்து நிற்பது நமது பண்பாடு. தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது தமிழுக்கு செய்யும் மரியாதை என்றார்.

மேலும், சட்டமன்றம் தற்போது தற்காலிக இடத்தில் உள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது குறித்து முதல்வர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார்கள் என்றார்.

banner

Related Stories

Related Stories