தமிழ்நாடு

மழைநீர் தேங்காத சுரங்கப்பாதை, பூங்கா என கண்ணைக் கவரும் கத்திப்பாரா சதுக்கத்தின் சிறப்புகள் என்னென்ன?

மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகவுள்ள சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மழைநீர் தேங்காத சுரங்கப்பாதை, பூங்கா என கண்ணைக் கவரும் கத்திப்பாரா சதுக்கத்தின் சிறப்புகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில், 14.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள "கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்" மக்கள் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேம்பாலம் ஜி.எஸ்.டி சாலை, பூந்தமல்லி சாலை, அண்ணா சாலை மற்றும் கோயம்பேடு சாலையை ஆகிய 4 சாலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள்து.

மக்கள் பயன்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் விதமாக கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள 5.38 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தில் 14.50 கோடி ரூபாய் செலவில் 2018 ஆம் ஆண்டு முதல் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைப்பதற்க்கான பணிகள் துவங்கப்பட்டது.

இந்த பூங்காவில் ஒரே நேரத்தில், 25 பேருந்துகளை நிறுத்தும் வகையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் மினி பேருந்துகளும், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளும் இங்கு நின்று செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கத்திப்பாரா சதுக்கத்தில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சுரங்கப்பாதைகளில் பாதசாரிகள் மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் இவ்விரண்டு சுரங்கப் பாதைகளும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது.

இச்சதுக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் நீளத்திலும் 6 அடி அகலத்திலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடை பாதைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆங்காங்கே கண்களை கவரும் வகையில் பச்சைப்பசேலென்ற புல்வெளிகள் மற்றும் மரங்கள் அமைக்கப்பட்டு அதனை சுற்றி வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சதுக்கம் முழுவதும், 27 வகையான, 7,069 செடிகள் நடப்பட்டுள்ளன.

இப்பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் மேம்பால தூண்கள் மற்றும் கட்டட சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்தும் குழந்தைகள் விளையாடுவதற்க்கான விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவின் சாலை ஓரமாக தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் தமிழ் எழுத்து வடிவங்களை கொண்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஒளிரூட்டப்படுகிறது.

இங்கு வணிகத்திற்காக 56 கடைகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளும், 200 முதல் 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் சாப்பிட வசதியாக திறந்தவெளியில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று இடங்களில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என தனித்தனி நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு வசதி கருதி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories