தமிழ்நாடு

"தமிழ்நாடு அரசின் ஆணை ஓர் அருட்கொடை" : முதலமைச்சருக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் ஆணை ஓர் அருட்கொடை என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு அரசின் ஆணை ஓர் அருட்கொடை" : முதலமைச்சருக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் பணியில் சேருவதற்கான தேர்வில் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் ஆணை வரவேற்கத்தக்கது- ஓர் அருட்கொடையே என்றும், தமிழில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை பெரியார் திடலில் விரைவில் தொடங்கப்படும் என்றும், இதனைத் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு இளைஞர்களில் படித்துப் பட்டங்களும், பட்டயங்களும் பெற்றும், வேலை கிட்டாத வேதனையில் அவதியுறுவதோடு, ‘எத்தனை காலத்திற்கு நாம் நமது பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாய் இருந்து வாழ்வது’ என்ற மன அழுத்தமும், வேதனையும் அவர்களில் சிலரை தவறான தற்கொலை சிந்தனைக்குக்கூட விரட்டிடும் நிலை நாளும் பெருகிடும் நிலையில், நேற்று தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆணை அவர்களது நெஞ்சத்தில் பால்வார்த்ததுபோல் ஆறுதலாக நம்பிக்கை முனைக்கு அவர்களை அழைத்துச் செல்வதாக இருக்கிறது!

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர தமிழ் கட்டாயம்

‘’தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாடு இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளில் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதி தேர்வாகக் கட்டாயமாக்கப்படும்.’’

இதில் ‘கட்டாயம்‘ என்பதற்குப் பொருள் - ‘காலத்தின் கட்டாயம்‘ என்பதாகவே கொள்ளவேண்டும். ‘திணிப்பு’ என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

காரணம், தமிழ்நாட்டின் நகரம், கிராமங்கள், பட்டிதொட்டிகளில் பணியாற்றி, கடமையாற்ற வேண்டியவர்கள் அந்த மக்களின் மொழி தெரிந்திருந்தால், அவர்களது மனக்குறையைப் புரிந்து, நிவாரண உதவிகளைச் செய்து, தங்களின் சேவையைச் சிறப்பாக செய்ய முடியும்.

கிராமத்தவர்களுக்கு ஓர் அருட்கொடை

கிராமத்திலிருந்து படித்து வந்தவர்களுக்கு - அரசுப் பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரும் அருட்கொடையை கருணையோடு வழங்கி, அவர்களது எதிர்காலத்தில் ஒளிவீசச் செய்வதாக ஆவது உறுதி!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தற்போது காலியாக உள்ள அத்துணை லட்சம் வேலை வாய்ப்புகளை உடனடியாக நிரப்புவதற்குத் தற்போதுள்ள நிதிப்பற்றாக்குறை இடந்தராத நிலையில் (விரைவில் அது சரிப்படுத்தப்படக் கூடும் என்றாலும்) இப்போது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை இன்றி உள்ள வேலை கிட்டாதவர்களைக் காப்பாற்றவே இந்த ஆணை என்பதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த சிறப்பான ஆணையை நிதியமைச்சர் - தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மூலம் நிறைவேற்றியுள்ள முதலமைச்சரின் முயற்சிக்கு அனைத்துக் கல்வி அமைப்புகளும், வேலைவாய்ப்புக்கு உதவிடும் அமைப்புகளும் துணை நிற்பது இன்றியமையாதது ஆகும்!

சென்னை பெரியார் திடலில் வேலை வாய்ப்புக்கான பெரியார் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள்

நமது இளைஞர்களுக்கு அப்போட்டித் தேர்வுகளில், நல்ல முறையில் வெற்றி பெற்று தேர்வு பெற உதவிடும் வகையில், சென்னை பெரியார் திடலில், ‘’வேலை வாய்ப்புக்கான பெரியார் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள்’’ தொடங்கி, இதில் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளித்து நடத்திட திட்டமிட்டு, விரைவில் அதனைத் தொடங்க உள்ளோம்.

பயிற்சி விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரங்கள் பின்னர்.

அது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான முழு விவரங்களை ‘விடுதலை’ நாளேடு மூலம் அவ்வப்போது அறிந்து பயன்பெறவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories