தமிழ்நாடு

#INDvNZ : போராடி ட்ரா செய்த நியுசிலாந்து.. ஏமாற்றத்தில் இந்தியா! - எப்படியிருந்தது முதல் டெஸ்ட்?

ஒரு விக்கெட் எடுத்தால் வென்றிருக்கலாம் என்ற நிலையில் இந்திய அணி ஏமாற்றத்துடன் போட்டியை ட்ரா செய்திருக்கிறது.

#INDvNZ : போராடி ட்ரா செய்த நியுசிலாந்து.. ஏமாற்றத்தில் இந்தியா! - எப்படியிருந்தது முதல் டெஸ்ட்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கான்பூரில் நடைபெற்று வந்த இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிந்திருக்கிறது. இந்த போட்டியை நியுசிலாந்து அணி போராடி ட்ரா செய்துள்ளது. இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் வென்றிருக்கலாம் என்ற நிலையில் இந்திய அணி ஏமாற்றத்துடன் போட்டியை ட்ரா செய்திருக்கிறது.

நியுசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 280 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. நேற்று 4 ஓவர்களை மட்டுமே நியுசிலாந்து அணி பிடித்திருந்தது. அதிலேயே ஓப்பனரான வில் யங்கின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்திவிட்டார். கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. கடைசி நாளில் சேஸ் செய்வது கடினம் என்பதால் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு.

நைட் வாட்ச்மேனாக களமிறங்கியிருந்த சோமர்வில் டாம் லேதமுடன் இணைந்து ஆட்டத்தையே மாற்றிவிட்டார். இன்று முதல் செஷன் முழுவதும் விக்கெட்டே விடாமல் இந்த கூட்டணி அமர்க்களப்படுத்தியது. இந்திய அணியின் அத்தனை பௌலர்களும் எவ்வளவோ முயன்று இந்த கூட்டணியை பிரிக்கவே முடியவில்லை. 110 பந்துகளை சந்தித்தும் விக்கெட்டை விடாமல் விடாப்பிடியாக சோமர்வில் க்ரீஸில் நின்றார். முதல் செஷன் முழுவதும் நியுசிலாந்துக்கு சாதகமாகவே அமைந்தது.

இதனால் இந்தியாவிற்கு கொஞ்சன் நெருக்கடி கூடியது. அடுத்த இரண்டு செஷன்களில் வேகமெடுத்து நியுசிலாந்து ஸ்கோரை சேஸ் செய்ய முனையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாவது செஷனின் முதல் பந்திலேயே உமேஷ் யாதவ் வீசிய ஒரு ஷார்ட் பாலில் சோமர்வில் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார். இதன்பிறகே இந்தியா கொஞ்சம் பிடியை இறுக்க ஆரம்பித்தது. நியுசிலாந்தும் தற்காப்பு ஆட்டமே ஆடியது. ஆனாலும் இந்தியாவிற்கு விக்கெட் மட்டும் கிடைக்கவில்லை. இரண்டாவது செஷன் முடிவில் நியுசிலாந்து அணி 108-2 என்ற நிலையில் இருந்தது.

#INDvNZ : போராடி ட்ரா செய்த நியுசிலாந்து.. ஏமாற்றத்தில் இந்தியா! - எப்படியிருந்தது முதல் டெஸ்ட்?

நியுசிலாந்து வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் இந்தியாவின் வெற்றி தட்டிப்பறிக்கப்படும் என்ற சூழலே இருந்தது. இந்த போட்டியின் கடைசி செஷன்கள் அத்தனையிலும் பெரிதாக விக்கெட் எதுவும் விழுந்திருக்கவில்லை என்பதால் நியுசிலாந்து நினைக்கும் ரிசல்ட்டே சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மீண்டும் ட்விஸ்ட் நடந்தது. ஜடேஜா மற்றும் அஷ்வின் இருவரும் வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து மீது அழுத்தத்தை ஏற்படுத்தினர். ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் நியுசிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட வேண்டியிருந்தது.

நியுசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா ஒரு எண்ட்டில் நின்று பொறுமையாக நிதானமாக ஆடி இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்தார். மெய்டன் ஓவராக வந்து கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவிற்கு தேவைப்பட்ட அந்த கடைசி ஒரு விக்கெட் மட்டும் கிடைக்கவே இல்லை.

ஜடேஜாவும் அஷ்வினும் கடுமையாக முயன்று பார்த்தார்கள். ஆனால், எதுவும் வேலைக்காகவில்லை. நியுசிலாந்து 98 ஓவர்களில் 165-9 என்ற நிலையில் இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் அத்தோடு நிறுத்தப்பட்டு ட்ராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சியிருந்த சில ஓவர்கள் வீசப்பட்டிருந்தால் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருந்திருக்கும்.

இந்திய அணி இந்த போட்டியை தோற்கவில்லை என மகிழ்வுற்றாலும் ட்ரா செய்ததே இந்தியாவிற்கு கொஞ்சம் பின்னடைவுதான். இப்போது நடைபெறும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியே. இதில் பெறும் புள்ளிகளை வைத்துதான் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் அணிகள் தீர்மானிக்கப்படும். எனவே, வெல்ல வேண்டிய போட்டி ட்ரா ஆவது இந்தியாவிற்கு பின்னடைவே!

banner

Related Stories

Related Stories