
5 ஆண்டுகள் பணியில் இருப்பதற்கான ஒரு அவசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்து நிறைவேற்றினால், சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் மோடியின் கைபாவையாக தான் இருப்பார்கள் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி கொண்டுவந்த 3 விவசாய விரோத சட்டங்களை நாட்டில் உள்ள விவசாயிகள் எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.
இப்போது பஞ்சாப், உத்தரபிரசேதம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால், இதில் உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, 3 விவசாய விரோத கருப்பு சட்டங்களை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப பெறுவதாகவும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகளிடம், மக்களிடமும் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சட்டங்களை பிரதமர் திரும்ப பெற்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரதமர், விவசாயிகளிடம் சரணாகதி அடைந்துள்ளார் என்றும், இது விவசாயிகளுக்கும், எதிர்க்கட்சிகளும் கிடைத்த வெற்றி என்றும், பிரதமரை போல் புதுச்சேரி பா.ஜ.க.,வினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சி,பி,ஐ இயக்குநர், அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட மீண்டும் 5 ஆண்டுகள் பணியில் இருப்பதற்கான ஒரு அவசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளதாகவும், இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி விட்டால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் மோடியின் கைபாவையாக தான் இருப்பார்கள். நியாயமான முறையில் செயல்படமாட்டார்கள். ஆகவே, இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளர்.








