தமிழ்நாடு

“அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்களையும் நீங்கள் அழைப்பது இருதரப்பிலும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள உதவும். இதனால் சமுதாயம் பயன்பெறும்.

“அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் உங்கள் பணிகள் அமைய வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோயம்புத்தூரில் இன்று (19.11.2021) நடைபெற்ற இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு :-

அனைவருக்கும் வணக்கம்.

தென்மண்டல கவுன்சிலின் 70-ஆவது ஆண்டில் நடைபெறும் உங்களது 53-ஆவது மண்டலக் கருத்தரங்கில் ஒரு அங்கமாகக் கலந்துகொள்வது பல வகைகளிலும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததற்காக முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்தியாவின் உயரிய அறிஞர்கள் கலந்துகொண்டுள்ள இந்தக் கருத்தரங்கைத் துவக்கி வைப்பதை எனக்குக் கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.

தென்மண்டல கவுன்சில் வரலாற்றில் முதன்முறையாக, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்காக இது அமைந்துள்ளது என்று அறிந்து நான் வியப்படைந்தேன். இதனைத் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடத்திக் காட்டிய ஜலபதி அவர்களுக்கு எனது பாராட்டுகள். நேரில் வந்து உங்களிடையே உரையாற்ற வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். இருப்பினும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், காணொலிக் காட்சி வாயிலாக உங்களிடையே நான் உரையாற்றுகிறேன்.

இதுபோன்ற கருத்தரங்குகளின் முதன்மையான நோக்கம் அவரவர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி அறிந்துகொள்வதும் அதற்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்வதும்தான். இக்கருத்தரங்கமும் அந்த நோக்கத்தைச் சீரிய முறையில் நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளபடியே மகிழ்ச்சி அடைந்தேன்.

உங்கள் தென்மண்டலக் கவுன்சிலின் வரலாற்றைப் படிக்கையில், 1998-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் பொன்விழாவை எங்கள் தலைவரும் அன்றைய முதலமைச்சருமான தலைவர் கலைஞர்தான் தொடங்கி வைத்தார் என்று அறிந்து மகிழ்ந்தேன். மேலும், இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக உள்ள உங்கள் முன்னாள் தலைவர் ஜி. ராமசாமி அவர்களும் அன்றைய பொன்விழாவில் துணைத் தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களுடன் மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் தங்களது தென்மண்டல கவுன்சிலின் எழுபதாம் ஆண்டில் நடைபெறும் இக்கருத்தரங்கில் நான் கலந்துகொள்வதில் மனநிறைவடைகிறேன்.

இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் சென்னை அலுவலகத்துக்கு வருகை புரிந்த ஒரே முதலமைச்சர் எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதை இங்கு நான் பதிவுசெய்தாக வேண்டும். 1969-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது அவர் கலந்துக் கொண்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தென்மண்டல கவுன்சிலில் சென்னையில் ஆராய்ச்சிக்கு என தனியாக ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு பெரும் உதவி புரிந்துள்ளது என்ற செய்தியும் என்னை மேலும் உவகை கொள்ளச் செய்கிறது.

பட்டயக் கணக்கறிஞர்களான உங்கள் மீது எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு. உங்கள் கவுன்சிலின் உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய வி.ஜெகதீசன் தலைவர் கலைஞர் அவர்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவுடன் இருந்தார் என்பதையும் நான் இவ்வேளையில் நினைவுகூர விரும்புகிறேன்.

தடுப்பூசி முகாம்கள் நடத்தியது, நாட்டில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் பிரதமர் மற்றும் தொடர்புடைய மாநில முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியளிப்பது எனச் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்களாக பட்டயக் கணக்கறிஞர்கள் கழகமும் அதன் அங்கமான நீங்களும் இருந்து வருகிறீர்கள். அதேபோல, கொரோனா இன்னும் முழுவதுமாக ஓயாத நிலையில், பெரும்பாலானோர் இணையவழியில் கலந்துகொள்ளும் வகையில் இக்கருத்தரங்கை நீங்கள் நடத்துவதற்கு என்னுடைய பாராட்டுகள்.

பட்டயக் கணக்கறிஞர்களான உங்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் துணையாக உள்ளது.

நிதித்துறை, கார்ப்பரேட் நிர்வாகம், கணக்குத் தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு உங்கள் பணி நின்றுவிடுவதில்லை. அவை சார்ந்த சட்டங்களை இயற்றுவதிலும்; வேளாண் வளர்ச்சி செயல்பாடுகளிலும், நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள். ஆகையால் உங்களை ‘நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள்’ என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். உலக அளவில் நம் நாடு முன்னணியில் இருக்கவேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும் ஒழுங்குமுறைகளும் தேவை. அதற்கான யோசனைகளை வழங்குவதில் உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பட்டயக் கணக்கறிஞர்களான நீங்கள் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பதை என்னால் ஐயமின்றிக் கூற முடியும். இந்த நற்பெயர் எப்போதும் நிலைத்துநிற்கும் வகையிலும் அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும் உங்கள் பணிகள் அமைய வேண்டும்.

கற்றல் - காலத்துக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாள்தோறும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அறிஞர்கள் உங்கள் துறையிலும் அதிகம் உள்ளனர் என்பது சிறப்புக்குரியது.

இதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்களையும் நீங்கள் அழைப்பது இருதரப்பிலும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள உதவும். இதனால் சமுதாயம் பயன்பெறும்.

அரசின் உயர்பதவிகளில் உங்கள் துறையைச் சேர்ந்த பலர் உள்ளனர். அரசு அமைக்கும் முக்கியக் குழுக்களிலும் இடம்பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை சொல்ல விரும்புகிறேன். பொருளாதாரக் குற்றப் பிரிவிலும், ஊழல் தடுப்புப் பிரிவிலும், நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு புதிய தணிக்கைப் பிரிவுகளை இப்போது தொடங்கியுள்ளது என்பதையும் இந்நிகழ்வில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நிதிநிலையைச் சீராக்குவதிலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு அரசுக்கு தேவையான பரிந்துரைகளை நீங்கள் தெரிவித்தால் உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதையும் இந்த நிகழ்வின் வாயிலாக உங்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பட்டயக் கணக்கறிஞர்களைக் கண்காணிப்பவர்களாக மட்டுமே பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் பொருளாதாரத்தின் பாதுகாவலர்களாகத் தங்களின் அயராத முயற்சிகளின் மூலம் இன்று உயர்ந்துள்ளீர்கள். உங்கள் நற்பணிகளை, சமுதாயத்திற்கு நிதி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள், தமிழ்நாடு அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்கத் தயராக இருக்கிறது என்ற உறுதியை வழங்கி, இந்த இனிய வாய்ப்புக்கு என்னுடைய நன்றியை கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories