தமிழ்நாடு

“எம்.ஜி.ஆர் காலத்திலேயே தமிழகத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன” : அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

கேரளா, கர்நாடகாவில் தமிழகத்தின் நீராதாரத்தை பாதிக்கும் எந்தவொரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“எம்.ஜி.ஆர் காலத்திலேயே தமிழகத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன” : அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கேரளா, கர்நாடகாவில் தமிழகத்தின் நீராதாரத்தை பாதிக்கும் எந்தவொரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41வது ஆண்டாக நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 13ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது.

இதையடுத்து 16 கண் மதகு, அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் இன்று காலை மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கடந்த அ.தி.மு.க அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அவசர கதியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து நிறைவேற்றுவோம். முதல் கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுப் படுத்தப்படும். கேரளா, கர்நாடகத்தில் தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எந்தவொரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்.ஜி.ஆர் காலத்திலேயே உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த தி.மு.கதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது” எனத் தெரிவித்தார்.

“எம்.ஜி.ஆர் காலத்திலேயே தமிழகத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன” : அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்றுவரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து காவிரியில் நீர் வரும் பாதையை பார்வையிட்டு நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “காவிரியாற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் அணைகள் கட்டுவது தொடர்பான முயற்சி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த அணைகளைக் கட்டுவதில் சில பிரச்சினைகளும் உள்ளன.

அந்தத் தடைகளைக் களைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில், காவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சி தொடர்பாக நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் எனக் கர்நாடக மாநில அரசு கூறுகிறது.

ஒரு பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்பவர்கள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றே நம்புவர். அந்தக் கருத்தையே வெளிப்படுத்துவர். அவர்கள் பாணியிலேயே நானும் சொல்கிறேன். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாகவும் கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசு தமிழகம் தொடர்பான விஷயங்களில் எதில்தான் மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறது?

கனமழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரைத் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து நீரேற்றும் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிறைத்து, பாசனத் தேவைக்கு வழங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய ஆய்வுக்குப் பின், அந்தத் திட்டத்தை ஏன் நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் வீணாகும் காவிரி நீரை, தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் தொடர்பாகத் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்படும். அந்த ஆய்வறிக்கையைப் பெற்ற பின்னர் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories