தமிழ்நாடு

“தலைதீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண் பரிதாப பலி” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் தலைதீபாவளிக்கு வந்த கர்ப்பிணி பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தலைதீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண் பரிதாப பலி” : சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று மாலையும் கனமழை கொட்டியது. இந்த மழையினால் களக்காட்டில் ஓடும் கால்வாய் மற்றும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்த முருகன் தனது மகள் லேகா (23), அவரது கணவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் சூரங்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமேஸ்வரன் ஆகியோரை தலை தீபாவளி கொண்டாட ஊருக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். பாலத்தின் மீது வெள்ளம் சென்றதால் ஆட்டோ செல்ல முடியாத நிலை நிலவியது.

வெள்ளத்தின் வேகம் தெரியாமல் முருகன், லேகா, பரமேஸ்வரன், முருகன் மகன் பாரத் ஆகியோர் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பாலத்தை கடக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக திடீர் என வெள்ளம் நால்வரையும் இழுத்து சென்றது. முருகன், பாரத், பரமேஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் நீந்தி கரை சேர்ந்தனர். லேகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சிதம்பரபுரம் இளைஞர்கள், நாங்குநேரி தீ அணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் போலிஸார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லேகாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு என்பதாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததாலும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சிந்து, நாங்குநேரி தாசில்தார் கனகராஜ், ஏ.எஸ்.பி. ரஜத் சதுர்வேதி மற்றும் வருவாய்துறையினர், போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து இரவில் கால்வாயில் ஒரு மரத்தில் சிக்கியிருந்த லேகாவின் சடலம் மீட்கப்பட்டது. லேகாவிற்கும், பரமேஸ்வரனுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. தற்போது லேகா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். தலை தீபாவாளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கர்ப்பிணி பெண், தந்தை, கணவர், தம்பி கண் எதிரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories