தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி, கொலை மிரட்டல் புகார்.. கேரள பெண் ஷர்மிளா நெல்லை DGPயிடம் மனு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளிக்க தமிழ்நாடு வரவுள்ளதால், தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஷர்மிளா என்ற பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் மனு அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி, கொலை மிரட்டல் புகார்.. கேரள பெண் ஷர்மிளா நெல்லை DGPயிடம் மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளாவும், அவரின் கணவர் ராஜீவும் தொழிலதிபர்கள். கடந்த 2020, ஜூலை மாதம் ஷர்மிளா அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி பேசிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஷர்மிளா பேசிய வீடியோவில் அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டு, “ஹைகமாண்ட் பெயரைச் சொல்லி அவர் முடித்துக் கொண்ட காரியங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அப்போது ஆளும் கட்சி என்பதால் இந்த விவகாரங்களை மூடி மறைக்கும் வேலையும் விஜயபாஸ்கர் தரப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, சென்னை அயன்புரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். 2020, அக்டோபர் 15-ம் தேதி பதியப்பட்டுள்ள அந்தப்புகாரில், ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் 25 லட்சம் ரூபாயை ஷர்மிளாகுமாரியும் அவர் கணவர் ராஜீவும் மோசடி செய்துவிட்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி, கொலை மிரட்டல் புகார்.. கேரள பெண் ஷர்மிளா நெல்லை DGPயிடம் மனு!

இதனையடுத்து புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரில், ஆஜராகும்படி ஷர்மிளாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா இதுதொடர்பாக தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், “இந்தப் புகாரே விஜயபாஸ்கரின் திட்டமிட்ட நாடகம். என்மீது புகார் அளித்திருக்கும் நபரை நான் சந்தித்ததே இல்லை. மேலும், அவரை மிரட்டி பணம் பறிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

கடந்த 2017, பிப்ரவரியில் என்னைத் தொடர்புகொண்ட விஜயபாஸ்கர், ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, ‘ஹை கமாண்ட் பணம் இது, இந்தப் பணத்துக்கு தங்கக்கட்டிகளை மாற்றித்தாருங்கள்’ என்றார். அவரை நம்பி தங்கக்கட்டிகளாக மாற்றிக் கொடுத்தேன். நான் கொடுத்த அந்தத் தங்கம்தான் கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லி என்னிடம் பலகாரியங்களை அவர் சாதித்துக்கொண்டார். 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விஜயபாஸ்கரிடம் கொடுத்தேன். அதற்கான வங்கிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் எல்லாமே என்னிடம் இருக்கின்றன. இன்றுவரை அதற்கான பணம் எனக்கு வரவில்லை. அதற்காகத்தான் போராடுகிறேன்.

சேலத்திலிருக்கும் மருத்துவர் ஒருவர் என்னைச் சந்தித்து, ‘அமைச்சர் உங்களுக்கு விரைவில் செட்டில் செய்துவிடுவார்’ என்று சொல்லி, விஜயபாஸ்கருக்கும் எனக்கும் நட்புரீதியாக மட்டுமே தொடர்பு இருப்பதாக என்னைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்து, வீடியோவும் எடுத்துக் கொண்டார். அதை வைத்துத்தான் எங்களுக்கு இடையே செட்டில்மென்ட் முடிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். எனக்கு என் பணம் வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும், தனக்கும் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருதாகவும் ஷர்மிளா புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக நெல்லையில் உள்ள வழக்கறிஞரை சந்திக்கவும், சென்னை காவல்துறை இயக்குனரிடம் புகார் அளிக்க செல்லும் வகையில் தமிழக எல்லைக்குள் வரும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி ஷர்மிளா நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் மேலும் ஒருவழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories