தமிழ்நாடு

“மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு வித்திடும் மறுமலர்ச்சித் திட்டம்”: முதல்வருக்கு தினத்தந்தி நாளேடு பாராட்டு!

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு வித்திடும் திட்டம் என தினத்தந்தி ஆளேடு தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

“மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு வித்திடும் மறுமலர்ச்சித் திட்டம்”: முதல்வருக்கு தினத்தந்தி நாளேடு பாராட்டு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு வித்திடும் திட்டம் என தினத்தந்தி ஆளேடு தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி நாளேட்டின் நவ.,1ஆம் நாள் தலையங்கம் வருமாறு:

கடந்த 19 மாதங்களாக தமிழ்நாட்டையே முடக்கிப்போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புவதற்கான வழிமுறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனாவால் எல்லோருமே அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்றாலும், மிகமிக அதிகமாக பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இப்போது முதலில் கல்லூரிகளும், தொடர்ந்து 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளும் திறக்கப்பட்டன. தற்போது 1 முதல் 8-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

19 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கல்விச் சாலைகளின் கதவுகளை நோக்கிவரும் மாணவச் செல்வங்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களையும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும், தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34 லட்சத்து 5 ஆயிரத்து 856 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் 1 முதல் 8-ம் வகுப்புவரை கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கொரோனா காலத்தில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் இதுவரை கல்வி கற்று கொடுத்தாலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை - எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியில்லை. இந்த பிஞ்சு வயதில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் திறனும் இல்லை என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த 19 மாதங்களில் அவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் நேரடியாக கற்றுக்கொடுக்காததால் பாடங்கள் எல்லாம் மறந்திருக்கும். என்னதான் ஆன்லைன் மூலம் கல்வி என்றாலும், நேரடி கல்விக்கு அது நிச்சயமாக ஈடாகாது.

எனவே, “இல்லம் தேடி கல்வி” என்ற ஒரு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பத்தில் கடந்த வாரம் தொடங்கிவைத்தார். அவர் கூறியதுபோல, இல்லம் தேடி கல்வி என்பது சாதாரண திட்டம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் வாழ்வில் ஒளியேற்றப்போகிறது. மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

“மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு வித்திடும் மறுமலர்ச்சித் திட்டம்”: முதல்வருக்கு தினத்தந்தி நாளேடு பாராட்டு!
Admin

இந்த திட்டத்தின் மூலம், எப்படி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி படிப்பாற்றல் அதிகரிக்கப்படுகிறதோ, அதுபோல ஒவ்வொரு நாளும் மாலையில், குறைந்தது ஒரு மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை, சூழ்நிலைக்கு ஏற்ப தன்னார்வலர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மனிதநேயம் கொண்ட இளைஞர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் அந்த குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட இருக்கிறது.

1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவோருக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க குறைந்தபட்ச கல்வியாக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்பின் கீழ் ரூ.200 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இன்று முதல் விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களிலும், 15-ந் தேதிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் படிப்படியாகவும், தொடர் பணியாகவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

மாணவர்களுக்கு இந்த திட்டம் மிக இனிமையான திட்டம், பயனளிக்கும் திட்டம், முடங்கிப்போன கல்வியை வேகமாக முன்னெடுத்து செல்லும் திட்டம் என்றவகையில், இது மிகமிக பாராட்டுக்குரிய, பயனுள்ள திட்டம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories