தமிழ்நாடு

கலைஞர் நினைவு நூலகம், மேம்பால பணிகள்.. மதுரையில் சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்!

மதுரையில் நடைபெற்று வரும் பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகள், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலைஞர் நினைவு நூலகம், மேம்பால பணிகள்.. மதுரையில் சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரையில் நடைபெற்று வரும் பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகள், தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகள், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணிகள் மற்றும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை, தொண்டி சாலையில் கட்டப்பட்டு வரும் பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகள், ஓபுளாபடித்துறை மற்றும் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதிகளில் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகள், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணிகள் மற்றும் கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை, தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பில் 53 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வழிச்சாலை மேம்பாலப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பாலத்தின் மொத்த நீளம் 760 மீட்டர் நான்கு வழிப்பாதைக்கு ஏற்றவாறு சாலை ஓடுதளம் 22 மீட்டர் அகலத்திற்கு இரட்டை பாலமாக கட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 28 மேல்தளங்களில் 26 முடிவுற்றுள்ளன. திருச்சிராப்பள்ளி பக்கம் அணுகுசாலை அமைக்கும் பணியும் முடிவுற்றுள்ளது. தூத்துக்குடி பக்கம் அணுகுசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலப் பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை 23 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உயர்மட்ட பாலத்தின் நீளம் 200 மீட்டர், மொத்த அகலம் 17.70 மீட்டர் ஆகும். இப்பாலப் பணிகளை விரைந்து முடித்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

கலைஞர் நினைவு நூலகம், மேம்பால பணிகள்.. மதுரையில் சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்!

பின்னர், ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள தரைப்பாலத்தினை 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், நகரின் மையப் பகுதிக்குள் வெளியூர் செல்லும் பேருந்துகள் அதிக அளவில் வந்து செல்வதால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையிலும் இந்த தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட பாலத்தின் நீளம் 223 மீட்டர், மொத்த அகலம் 17.50 மீட்டர் ஆகும். இப்பாலப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 84 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் மரக்கன்றினை நட்டுவைத்து சிறப்பித்தார்.

மதுரை மாநகர் பகுதியில் ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்று கரையின் இரு புறங்களிலும், கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அழகான நடைபாதை மற்றும் சாலை, இரண்டு இடங்களில் பூங்காக்கள், கழிப்பறை, அலங்கார விளக்குகள் ஆகியவை அமைப்படவுள்ளன. மேலும், பல்பாலம் பகுதி மேம்படுத்தப்பட்டு சங்கத்தமிழ் பாடல்களை நினைவூட்டும் வகையிலான ஓவியங்கள், கல்பாலம் முதல் ஓபுளாபாலம் வரை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும் மிதிவண்டிக்ளுக்கும் பாதை அமைக்கப்படவுள்ளது. வைகையாற்றின் கரையோரப் பகுதிகளில் 5.80 கி.மீ. நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முடிவடைந்து, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ஜனவரி 2022-க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை, புது நத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ள இடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories