தமிழ்நாடு

“2 மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“2 மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு நேற்று எழுதிய கடிதம் வருமாறு:

நம் இரு மாநில மக்களுக்கிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர்பு இருப்பதும் அது மேலும் வலுவடைய வேண்டும் என்கிற உணர்வுகளை வெளிப்படுத்தி 24.10.2021 அன்று நீங்கள் எழுதிய கடிதத்திற்காக நான் என்று வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 நாட்களாக கேரளாவில் கடும் மழை பெய்து அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கேரள மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருவதற்காக தமிழக அரசும், எங்கள் மக்களும் பெருத்த வருத்தம் அடைகின்றனர்.

கடுமையான காலத்தில் உங்கள் பக்கத்தில் இருப்போம்!

இப்படிப்பட்ட கடுமையான காலங்களில் நாங்கள் எப்போதும், உங்கள் பக்கத்தில் இருப்போம் என்கிற உறுதியை நான் தருவதோடு, கேரள மக்களின் துயர்துடைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக கேரள மக்களுக்கு தேவைப்படும் வெள்ள நிவாரண பணிகளையும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எங்கள் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில் எங்களது அதிகாரிகள் அதன் தண்ணீர் மட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்பதோடு உங்கள் அதிகாரிகள் குழுவினரோடு அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள். இன்று (27.10.2021) காலை அணையின் நீர்மட்டம் 137.60 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 2,300 கன அடியாகவும் உள்ளது.

உங்கள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளபடி நாங்கள் ஏற்கனவே வைகை அணை கால்வாய் மூலம் அதிகபட்ச நீரை எடுத்துக் கொண்டு வருகிறோம். இன்று காலை 8 மணி முதல் 2,300 கன அடி நீரை வைகை கால்வாய் மூலம் நாங்கள் பெற்று வருகிறோம்.

மத்திய நீர்க்குழுவின் ஒப்புதல்!

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அனுமதித்துள்ள படியும், மத்திய நீர்க்குழு (CWC) ஒப்புதல் அளித்தபடியும், தற்போதைய அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. அணையின் நீர் குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் நான் விவாதித்துள்ளேன். அணையின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருமாறு உத்தரவிட்டுள்ளதோடு அணையில் வெளியேற்றப்படும் நீரை முறையாக ஒழுங்குப்படுத்த மாறும், அவர்களுக்கு தெரிவித்துள்ளேன்.

இதுவும் தவிர அணையின் நீர்மட்டம், அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்குமாறு அவர்களுக்கு தெரிவித்துள்ளேன். அணையில் இருந்து நீரை வெளியேற்றுவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் அரசு மேற்கொள்வதற்கு இது வாய்ப்பாக இருக்கும். என்னுடைய அரசு இரு மாநிலங்கள் மற்றும் அவைகளின் மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை நான் மீண்டும் உங்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories