தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டுப்போன சுகாதார நிலையம்... புகாரின் பேரில் அமைச்சர் மா.சு திடீர் விசிட்!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புட்லூர் துணை சுகாதார நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சீர்கெட்டு மூடியே கிடப்பது குறித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அ.தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டுப்போன சுகாதார நிலையம்... புகாரின் பேரில் அமைச்சர் மா.சு திடீர் விசிட்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புட்லூர் துணை சுகாதார நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சீர்கெட்டு மூடியே கிடக்கும் அவல நிலை குறித்த புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே 800 மாணவர்களை சேர்க்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்றும் வரும் 30ஆம் தேதி சனிக்கிழமை 7வது மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புட்லூரில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் பழுதடைந்து, கட்டிடங்கள் முழுவதும் சிதிலமைடந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு வந்த தகவலை அடுத்து புட்லூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருடன் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது சுகாதார நிலையத்தின் நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மெற்கொண்டார்.

ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குத் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தின் கீழ் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இந்த கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்குள் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையும், நாமக்கல், திருப்பத்தூர், திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருக்கை போன்ற தளவாட பொருட்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் 100 மாணவர் சேர்க்கை என ஒன்றிய அரசு அனுமதித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமரிடம் இந்த ஆண்டே இந்த கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மீண்டும் நாளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும்போது இந்த ஆண்டே 800 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும்போது பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். வரும் சனிக்கிழமை 30 ஆம் தேதி தமிழகத்தில் 7 வது மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார்.

இந்த ஆய்வுகளின் போது திருவள்ளுர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.பி.ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மருத்துவத்துறை அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories