தமிழ்நாடு

”பண்டிகைகளை கொண்டாட தடையில்லை; ஆனால்...” : பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவுரை!

தடுப்பூசிகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

”பண்டிகைகளை கொண்டாட தடையில்லை; ஆனால்...” : பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் கோவிட் மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு செய்தார். உடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இருந்தார்.

அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது,

தமிழகத்தில் 12 வகையான நோய்களை தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பாக செலுத்தப்பட்டு வருகிறது. எல்லா வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளது. 9.42 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.43 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு போடப்படவேண்டிய தடுப்பூசிகளை சரிவர செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 5 கோடி 68 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 44 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 6 மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு 1 கோடி 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை 7வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 மையங்களில் நடத்தப்படும். வார நாட்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளவும். 2 லட்சத்திற்கும் கீழானவர்கள் தான் இரண்டாவது தவணை கோவாக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது. நாளை காலை நானும் துறையின் செயலாளர் அவர்களும் டெல்லிக்கு செல்கிறோம். இந்தியாவிலே தடுப்பூசிகள் போடும் பணி 100 கோடியை எட்டியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறோம்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி நாளை மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். தற்போது வரை 850 மாணவர் சேர்க்கைக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1650 மாணவர்களை அனுமதிக்கலாம். மீதமுள்ள மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும். 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை முன்பு ஆய்வு செய்த மத்திய ஆய்வு குழுவினர் 4 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சில பணி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்கள்.

அந்த 4 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையும் தற்போது virtual verification முறையில் காணொளி வாயிலாகவே பார்த்து குறைகள் சரி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்கள். மேலும் தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டி உள்ளது. அதற்கு 950 கோடி நிதி வேண்டும். அது குறித்தும் நாளை கோரிக்கை வைக்கப்படும்.

கடந்த ஆட்சியில் முதல் அலையின் போது பயன்படுத்திய கோவிட் மருத்துவ உபகரணங்களை பத்திரப்படுத்தாமல், தயார் நிலையில் வைக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததால்தான் இரண்டாவது அலையில் தாக்கம் அதிகமாக இருந்தது. அது போல இல்லாமல் இரண்டாவது அலையின் போது நாம் பயன்படுத்திய உபகரணங்களை தயார் நிலையில் பத்திரமாக வைத்துள்ளோம். 3வது அலை என்று ஒன்று வந்தால் அதை சமாளிக்க அந்த உபகரணங்கள் தேவை என்றார்.

பண்டிகை நாட்களாக இருப்பதால் வரும் சனிக்கிழமை 7வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். பண்டிகைகளை கொண்டாடுவதற்கு தடை இல்லை. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் வைத்தார்.

banner

Related Stories

Related Stories