தமிழ்நாடு

“IPL கோப்பை யாருக்கு..? - யாரு ஜெயிப்பா..?” : சமபலம் வாய்ந்த சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

“IPL கோப்பை யாருக்கு..? - யாரு ஜெயிப்பா..?” : சமபலம் வாய்ந்த சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை வெல்லும் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும். இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டி பயங்கர விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணிக்கு கடந்த சீசன் ஒரு கெட்ட கனவாக அமைந்திருந்தது. எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றிருந்த அந்த அணி கடந்த சீசனில் முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறாமல் வெளியேறியது. உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான தோனியாலயே சென்னை அணியை கரை சேர்த்திருக்க முடியவில்லை. 'Too many wholes in the ship' என தோனியே கலங்கி போய் நின்றார்.

ஆனால், இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. சி.எஸ்.கே மீண்டும் பழைய எனர்ஜியோடு மிரட்ட தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே சீராக பெர்ஃபார்ம் செய்து தொடர் வெற்றிகளை குவித்தது. இதன்மூலம், முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றது. ப்ளே ஆஃப்ஸில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டியிலும் காலடி எடுத்து வைத்தது.

கடந்த சீசனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்தே நடைபெற்றிருந்தது. சென்னை அணி எங்கே மோசமான தோல்வியை சந்தித்து வீழ்ந்து போனதோ அங்கேயே மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இறுதிப்போட்டியில் கோப்பையையும் வென்றுவிட்டால் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆகச்சிறந்த கம்பேக்களில் இதுவும் ஒன்றாக அமையும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரைக்கும் 2012, 2014 சீசன்களில் கோப்பையை வென்று அசத்தியிருந்தது. ஆனால், அதன்பிறகு பெரிய வெற்றிகளை அவர்களால் குவிக்க முடியவில்லை. இந்த சீசனிலும் முதல் பாதியில் ரொம்பவே சுமாராகவே ஆடியிருந்தனர். 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வென்றிருந்தனர். ஆனால், இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்தனர். 7 போட்டிகளில் 5 இல் வென்று ப்ளே ஆஃப்ஸுக்கு முன்னேறினர். ப்ளே ஆஃப்ஸில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அதிரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

செய் அல்லது செத்துமடி என தீர்க்கமான மனநிலையுடன் களமிறங்கும் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறது. மேலும், இதற்கு முன்னர் 2012 இல் சென்னையும் கொல்கத்தாவும் இறுதிப்போட்டியில் மோதிய போது கொல்கத்தாவே கோப்பையை வென்றிருக்கிறது. அந்த வரலாறும் அவர்களுக்கு தெம்பை கொடுத்திருக்கிறது.

இரண்டு அணிகளுக்குமே அதன் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் மிகப்பெரிய பலமே. சென்னை அணியில் டூ ப்ளெஸ்சிஸ் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் இருவரும் ஓப்பனிங்கில் கலக்கி வருகின்றனர். ஒன் டவுனில் ராபின் உத்தப்பாவும் நல்ல ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். இந்த மூன்று பேரும் தான் பேட்டிங் பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆடிக்கொடுத்து வருகின்றனர்.

அதேமாதிரி கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி என டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரும் பட்டையை கிளப்புகின்றனர். இரண்டு அணிகளின் மிடில் ஆர்டருமே நிலையில்லா தன்மையுடனே இருக்கிறது. இன்னிங்ஸை ஃபினிஷ் செய்து கொடுப்பதற்கு ஜடேஜா மாதிரியான தீர்க்கமான வீரர் இருப்பது சென்னைக்கு பலம். தோனியுமே இப்போது கொஞ்சம் ஃபார்முக்கு திரும்பியிருப்பது சாதகமான விஷயம்.

பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப்-அல்-ஹசன் என மூன்று முக்கிய ஸ்பின்னர்களை கொல்கத்தா வைத்திருக்கிறது. மூன்று பேருமே மேட்ச் வின்னர்கள். ஃபெர்ச்குசன், சிவம் மவி இருவரும் வேகத்தில் மிரட்டுவார்கள். இவர்களை சமாளிப்பது சென்னை அணிக்கு கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கலாம். ஆனால், ருத்துராஜ், ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பது சாதகமான விஷயமாக இருக்கிறது.

கொல்கத்தா அணியின் பலமே அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் என்கிறபட்சத்தில் சென்னை அணியின் தீபக் சஹார் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியே ஆக வேண்டும். ஹேசல்வுட் நன்றாக வீசிக்கொண்டிருக்கிறார் அவருடன் தீபக் சஹாரும் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசினால் கொல்கத்தாவை கட்டுப்படுத்தி விடலாம். நல்ல ஃபார்மில் இருக்கும் ஷர்துல் தாகூர் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துவிடுவார். டெத் ஓவர்களில் ப்ராவோ சிறப்பாக வீசியாக வேண்டும். குறிப்பாக, சென்னை ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் பட்சத்தில் ப்ராவோ மிகச்சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.

இரண்டு அணிகளுமே சமபலத்துடனும் பலவீனத்துடனும் களமிறங்குகின்றனர். இரண்டு அணிகளுமே கம்பேக் கொடுக்கும் உறுதியுடனே இருக்கின்றனர். அதனாலயே இந்த போட்டி ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற செய்யும் என்னும் எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories