தமிழ்நாடு

”தரமில்லாமல் ஜவ்வரிசி உட்பட உணவுப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை பாயும்” -தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தரமில்லாமல் ஜவ்வரிசி உட்பட உணவுப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை பாயும்” -தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோருக்கு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதாக கூறி, தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்து 2016 ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தாத அதிகாரிகள், ஈரப்பதத்துடன் கூடிய மரவள்ளி கிழங்கு மாவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் ஈரமான கிழங்கு மாவை கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஈரப்பதத்துடன் கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட ஜவ்வரிசி சந்தைகளில் விற்கப்படுவதாகவும், தடை உத்தரவை அமல்படுத்தும் வகையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடைகளில் விற்கப்படும் ஜவ்வரிசியின் மூன்று மாதிரிகளை வரவழைத்து, அவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மூன்று மாதிரிகளை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையில், இரு மாதிரிகள் தரமானதாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாதிரி மட்டும் சற்று வித்தியாசம் உள்ளதாகவும், அதுவும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுசம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாகவும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகிலன் உறுதி தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, தடையை மீறி ஈரமான ஜவ்வரிசி விற்கப்படுவதாக இருந்தால், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories