தமிழ்நாடு

“அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?” : பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி!

அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசு ஏற்காதா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

“அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?” : பிரதமர் மோடிக்கு   டி.ஆர்.பாலு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணுஉலை களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகவுள்ள அணுக்கழிவுகளை சேகரித்து வைக்க அணுமின் நிலைய வளாகத்திலேயே , ஆனால் அணுஉலைக்கு வெளியே பயன்பாடு முடிந்த ஆனாலும் கதிரியக்கம் கொண்ட கழிவுகள் இருப்பிடம் அமைக்க ஒன்றிய அரசின் இந்திய அணுமின் கழகம் தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுக்காற்று முறை வாரியம் சென்ற 23.07.2021 அன்று வழங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச் சூழல் அமைப்புகளும் தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இருப்பினும், அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன் புதிதாக மேலும் நான்கு அணு உலைகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து புதிய உலைகள் 3,4 ,5 மற்றும் 6 ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் இந்திய அணுமின் கழகத்தால் துவக்கப்பட்டு விட்டன.

முதல் இரு உலைகளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்க அனுமதி பெற்ற போது இங்கு உருவாகும் கதிர் வீச்சு அடங்காத உலைகளின் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் , ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் உருவாக்கப் பட்டதால், திரும்பவும் அந்நாட்டுக்கே அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே இதற்கான சேகரிப்பு கிடங்கு ஒன்றை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

“அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?” : பிரதமர் மோடிக்கு   டி.ஆர்.பாலு கேள்வி!

இந்த முடிவுக்கு அப்பகுதி மக்களும் "பூவுலகின் நண்பர்கள் " சூற்றுச் சூழல் அமைப்பும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது உள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும் இதனை கண்டித்ததோடு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், இந்த அணுக்கழிவு கிடங்கினால் கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பல லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இந்த அணுக்கழிவுகளை தமிழ் நாட்டுக்கு வெளியே கைவிடப் பட்ட கோலார் சுரங்கம் போன்ற எங்காவது வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்ற வாரம் கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் குறித்த முழுவிவரங்களையும் கேட்டறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். அதன் பின் இந்திய பிரதமரும் அணுசக்தி அமைச்சருமான மோடி அவர்களின் கவனத்திற்கு இந்த முக்கிய பிரச்சினையை கொண்டு சென்று அணுமின் நிலையக் கழிவுகள் இருப்பிடத்தை கூடங்குளம் வளாகத்தில் அமைப்பதைக் கைவிடவும் தமிழகத்துக்கு வெளியே தக்க இடத்தில் அமைத்திடவும் உரிய முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி இன்று ( 07.10 .2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

சென்ற 23.07.2021 அன்று , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளின் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு ஒன்றினை அணுஉலைக்கு வெளியே அமைப்பதற்கு தேவையான அனுமதி இசைவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்திய அனுசக்தி கழகத்திற்கு வழங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தெரிவித்துள்ள தகவல் படி, இந்த பயன்படுத்தப்பட்ட கழிவுக்கிடங்கு 128 கழிவுகளை உள்ளடக்கிய உறைகளையும் 4328 கழிவுத் தொகுப்புகளையும் வைக்க தேவையான கொள்ளளவு கொண்டது. இதன் வாழ்நாள் காலம் 75 ஆண்டுகள். இத்திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

“அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?” : பிரதமர் மோடிக்கு   டி.ஆர்.பாலு கேள்வி!

பயன்பாடு முடிந்த அணுஉலை கழிவுகளை மின்நிலையம் அமைந்துள்ள இடத்திலேயே சேகரித்து வைப்பதால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், பூவுலகின் நண்பர்கள் சார்பாக ஜி.சுந்தர் ராஜன் இந்திய ஒன்றியத்துக்கு எதிராக 2013 ஆம் ஆண்டில்தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ( எண் 4440) தீர்ப்பு அளிக்கையில் கூறியுள்ளதாவது, “அணுமின்நிலைய வளாகத்திலேயே கழிவுகளை வைப்பதால் மக்கள் நல்வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையானநெடுங்கால அபாயம் ஏற்படுத்தும். ஒன்றிய அரசும் இந்திய அணுமின் சக்தி கழகமும் இதனால் விளையக்கூடிய பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்ய கடமைப் பட்டுள்ளன. ஆனால், எதிர் காலத்தில் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப்படும் என்று சொல்வதை தவிர உருப்படியான தொலைநோக்கு திட்டம் எதுவும் இந்திய அணுசக்தி கழகத்திடம் இல்லை .

அணுசக்தி சட்டம் பிரிவு 17 ல், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்தும் சுற்றுப்புறம் வாழ் மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெளிவாக உறுதிபடக் கூறியுள்ளது. எனவே ஒன்றிய அரசும் அணுசக்தி கழகமும் உறுதியான நோக்குடன் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கை அமைத்திட உடனே திட்டமிட வேண்டும். மேலும், தற்போது மட்டுமல்லாமல் வருங்காலங்களிலும் கதிர் வீச்சு அபாயத்தில் இருந்து மக்களையும் சுற்றுச்சூழல் நலத்தையும் பாதுகாப்பதை உறுதி செய்ய அணுஉலைக் கழிவுகளை உரிய முறையில் கையாளவும் கண்காணிக்கவும் போதிய செயல் திட்டங்களை செயல் படுத்த வேண்டும் .

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 மக்களுக்கு வழங்கியுள்ள உயிர் பாதுகாப்பு உரிமையை தூர வீசிவிட முடியாது என்பதால் ஐந்து ஆண்டுகளுக்குள் நிரந்தர நிலத்தடி சேமிப்பு கிடங்கு வெகுவிரைவில் அமைக்கப் பட வேண்டும் என்றும் அங்கே அணுஉலை கழிவுகள் எடுத்து செல்லப்பட்டு பாதுகாகப்பாக வைக்க பட வேண்டும் எனவும் கூடங்களம் பகுதி மக்களின் அச்சத்துக்கு தீர்வு காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை தாமதம் இன்றி செய்யுமாறும் ஒன்றிய அரசு, இந்திய அணுசக்தி கழகம். அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் , அணுசக்தி ஆணையம், அணுசக்தி அமைச்சகம் ஆகிய அனைத்து அரசுத் துறைகட்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

பின்னர் மீண்டும் பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் தொடுத்த சிறப்பு மனுவின் மீது 8.5.2014 அன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு தேசியக் கொள்கை உருவாக்கி அதன் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் பல வருடங்கள் உருண்டோடி ய பிறகும் ஒன்றிய அரசு இது தொடர்பாக திட்டம் உருவாக்கவோ அதனை நடைமுறைப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக அணுஉலை கழிவுகளை சேமிக்க கூடாது என்று உத்திரவிட்டும் அங்கே இத்தகைய கிடங்கை ஏற்படுத்தும் திட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இசைவு அளித்திருப்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும்.

நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு இல்லாத நிலையில் கூடங்குளம் வளாகத்திலேயே தற்போது அமைக்கப் பட உள்ள கிடங்கு காலப்போக்கில் நிரந்தர கிடங்காக உருவெடுத்து விடும். மேலும், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளம் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் அலகுகள் வெளியேற்றும் அணுக்கழிவுகளையும் அமைய உள்ள புதிய கிடங்கில் வைக்கவும் அனுமதி தந்துள்ளது. இங்கே, ஐந்து மற்றும் ஆறாம் அணுமின் அலகுகளின் கட்டுமானப் பணிகளும் விரைவில் துவங்க உள்ளதால் கூடங்குளம் நிலையத்தில் மொத்தம் ஆறு அணுமின் அலகுகளும் மூன்று அணுஉலை கழிவுகள் சேமிப்பு கிடங்குகளும் இறுதியாக அமைந்திருக்கும். இதனால் கதிர் வீச்சு விளைவாக பேராபத்து நேரிடும் வாய்ப்பும் மக்களிடையே உயிர் பாதுகாப்பு அச்சமும் பலமடங்கு அதிகரிக்கும்.

File Image
File Image

முதல் இரண்டு அலகுகளின் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருள் கழிவுகள் ரஷ்யாவுக்கு திரும்ப அனுப்பி வைக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கே தங்கள் கவனத்திற்கு சுட்டிக் காட்டவிரும்புகிறேன். அதனால்தான் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கூடங்குளம் வளாகத்தில் உலைக் கழிவு கிடங்கு பரிசீலிக்கப் படவில்லை . ஆனால், ரஷ்யாவில் ஏற்கனவே அவர்களது அணுக் கழிவுகள் பிரச்சினைகள் கடுமையான நிலையில் கூடங்குளம் கழிவுகளை ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த சேமிப்பு கிடங்கு இங்கேயே அமைக்கப் படுகிறது.ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா மற்றும் ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்துக்குகளுக்கு பிறகு உலகின் மூன்றாவது பெரிய விபத்து ரஷ்யாவின் மாயக் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் அமைக்க பட்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஃபுக்குஷிமா விபத்து பற்றி தீவிர விசாரணை நடத்தியபின், அங்கே அணுமின் நிலைய வளாகத்திலேயே அமைக்க பட்டிருந்த கழிவுகள் கிடங்கின் காரணமாகவே விபத்து பன்மடங்கு கடுமையான அழிவை ஏற்படுத்தியது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதைப் போலவ , அமெரிக்காவும் மற்ற சில நாடுகளும் மேற்கொண்ட ஆய்வுகளும் இதே முடிவுக்கு த்தான் வந்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், கூடங்குளம் அணு உலை கழிவுகள் கிடங்கு தொடர்பான வழக்கில் இதுபோன்ற ரஷ்யத் தொழில்நுட்ப வகை அழுத்தம் ஊட்டப்பட்ட கனநீர அணுஉலை எரிபொருள் சார்ந்த அணுமின் நிலையங்களில், நெடுங்கால உலைக்கழிவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்கு வசதிகள் விஷயத்தில் இந்தியாவுக்கு முன்அனுபவம் ஏதும் இல்லை என்று இந்திய அணுசக்தி கழகம் 6.12.2017 அன்று சமர்ப்பித்த தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

எனவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க ஒன்றிய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாக பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப் பட வேண்டும். இந்த நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்படவேண்டும். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து பிரதமர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு எழுதிய நீண்ட விவரங்கள் அடங்கிய தனது கடிதத்தில் திரு.டி.ஆர்.பாலு எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

Related Stories