தமிழ்நாடு

“நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்” : கிராம சபையில் முதல்வர் உரை!

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக நம்முடைய கழக அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்” : கிராம சபையில் முதல்வர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தமர் காந்தியடிகளின் 153-வது பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆற்றிய உரை பின்வருமாறு :

உங்கள் அனைவருக்கும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு எல்லோரும் பேசுவதற்கு நேரமில்லை, வாய்ப்பும் இல்லை. ஆனால், அனைவருடைய கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து ஆண்கள் பகுதியில் மூன்று பேரும், பெண்கள் பகுதியில் மூன்று பேரும் இன்றைக்கு பேசியிருக்கிறீர்கள்.

பேசியவர்கள் அனைவரும் என்ன சொன்னார்களென்றால், நீங்கள் வந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை நீங்கள் சிறப்பாக வெளியிட்டீர்கள். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், உங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட மகிழ்ச்சியோடு, பெருமையோடு உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்றிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப.,, தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய ஊராட்சித் தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் திருமதி லட்சுமி, ஊராட்சியின் செயலாளர் தங்கபாண்டி, அதேபோல், ஏற்கனவே இந்த மாவட்டத்தில் ஆட்சியராக இருந்து உங்களுடைய உள்ளங்களை கவர்ந்திருக்கக்கூடிய உதயசந்திரன், இ.ஆ.ப., அவர்கள்.

“நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்” : கிராம சபையில் முதல்வர் உரை!

உங்களால் மதிக்கப்பட்ட, கவரப்பட்ட , உங்களால் பெயர்பெற்ற, உங்களால் சிறப்புக்குரியவராக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய உதயசந்திரன், இ.ஆ.ப. இன்றைக்கு எனக்கு தனிச் செயலாளர் பொறுப்பை ஏற்று, அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்.

அதேபோல், மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், இந்த பாப்பாப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அருமை பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், நண்பர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தினுடைய தலைப்பு "கிராம சபை". இந்த கிராமசபைக் கூட்டத்தை ஒரு ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்த வேண்டும் என்ற மரபை வைத்துக்கொண்டு நாம் அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இடையில் கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் நம்மை சுற்றி சூழ்ந்து அடித்துக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால், நாம் இதை கடந்த இரண்டாண்டு காலமாக முறையாக நடத்த முடியாத ஒரு நிலை. ஆனால், இப்போது இன்றைக்கு காந்தி ஜெயந்தியையொட்டி, காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பாப்பாப்பட்டிக்கு வந்து இங்கு நடக்கக்கூடிய கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது.

இந்த நாட்டையே கிராம ராஜ்யம் ஆக்க வேண்டும் என்று விரும்பியவர் மகாத்மாக காந்தி அவர்கள். கிராமம் தான் இந்தியா - உண்மையான இந்தியா என்றால் அது கிராமத்திலிருந்துதான் உருவாகிறது - இதைச் சொன்னவர் காந்தி அவர்கள். அத்தகைய கிராமப் பகுதிக்கு நான் இன்றைக்கு வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மதுரை மண் மகாத்மா காந்தி அவர்களுக்கு மறக்கமுடியாத மண் ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் கோட் சூட் மாட்டிக் கொண்டு ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் மகாத்மா காந்தி அவர்கள். இந்த மதுரை மண்ணுக்கு வந்தபோதுதான் அவர் அரையாடை அணிந்த அண்ணலாக மாறினார். மதுரைக்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு குக்கிராமம். அந்த குக்கிராமத்தின் வழியாக மகாத்மா காந்தி அவர்கள் பயணம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு அழுக்கு உடையோடு, அழுக்குத் துணியோடு மட்டும் சில மக்கள் அங்கே அலைந்து கொண்டிருந்தார்கள். பலபேர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை மகாத்மா காந்தி அவர்கள் பக்கத்தில் அழைத்து பேசினார். 'எதற்கு இவ்வளவு அழுக்கான துணியை அணிந்துள்ளீர்கள்? ஏன் நல்ல துணி இல்லையா, இவ்வளவு அழுக்காக இருக்கிறதே, இதைப்போய் அணிந்திருக்கிறீர்களே" என்று மகாத்மா காந்தி அவர்கள் அவர்களிடத்தில் கேட்டார். அப்போது அவர் சொன்னார், "அய்யா என்னிடம் இருப்பது ஒரே ஒரு வேட்டி தான், அதை துவைத்து காய்ப் போடக் கூட கையில் காசு கிடையாது, சோப்பு வாங்க முடியவில்லை, மாற்றுத் துணியும் இல்லை, அதனால்தானே அதையே நான் கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதுதான் மகாத்மா காந்தி அவர்களின் மனதையே மாற்றியது.

ஏழைகள் மாற்றுத் துணி இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், நாம் எதற்காக இதுபோன்ற ஆடம்பர உடையை அணிய வேண்டும் என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு அன்றைக்கே கோட்டை கழட்டி போட்டுவிட்டார். அதிலிருந்து அரையாடையோடு தான் மகாத்மா காந்தி அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. காந்தி அடிகளையே மாற்றிய பகுதிதான் இந்த மதுரை பகுதி என்பது பெருமைக்குரியது.

ஆகவே, இந்த மதுரை மண்ணில், இந்த பாப்பாபட்டி பகுதியில் நடக்கக்கூடிய கிராமசபைக் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கே கூட சொன்னீர்கள், எங்கள் கிராமம், எங்கள் கிராமம் என்று சொன்னீர்கள், இது உங்கள் கிராமம் மட்டுமல்ல, நம் கிராமம். எல்லா கிராமமும் நம் கிராமம் தான், எல்லா ஊரும் நம் ஊர்தான், எல்லா மக்களும் நம் மக்கள் தான்.

அதனால்தான், நான் ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னேன், இது என்னுடைய ஆட்சி அல்ல, நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி, உங்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி. இன்றைக்கு கிராமசபைக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் இந்த பாப்பாபட்டியில் நடக்கிற இந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்வது உள்ளபடியே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் முதலமைச்சராகி எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன், எல்லா நிகழ்ச்சிகளையும்விட மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவென்று கேட்டால், இந்த பாப்பாபட்டி பகுதியில் நடக்கிற இந்த நிகழ்ச்சியாகத்தான் அமையும்.

“நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்” : கிராம சபையில் முதல்வர் உரை!

2006-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஊராட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை இருந்து. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் இங்கே சுட்டிக் காட்டினீர்கள். மதுரை மாவட்டத்தில் சில கிராமப்பகுதிகளில் தேர்தல் நடத்த முடியாத ஒரு சமூகச் சூழல் இருந்தது. அதில் குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு கிராமங்களில் தேர்தலே நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது, யாரால் ஏற்பட்டது என்கிற விவகாரத்தில் நான் செல்ல விரும்பவில்லை, அது தேவையில்லை.

ஆனால் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால், தேர்தல் நடத்தியாக வேண்டும். மிகமிக அடிப்படையானது என்பதால் இந்தத் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் என்று அன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்தார், அவருடைய அமைச்சரவையில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது என்னுடைய துறையில் உள்ளாட்சித் துறைச் செயலாளராக இருந்தவர்தான் அசோக் வரதன் ஷெட்டி அவர்கள். அப்போது மதுரை மாவட்டக் கலெக்டராக இருந்தவர் இப்போது என்னுடைய முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் உதயச்சந்திரன் அவர்கள். அசோக் வரதன் ஷெட்டி அவர்களும், உதயசந்திரன் அவர்களும் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இந்தத் தேர்தலை எப்படியாவது நடத்தவேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து, அதற்காக பல சிரமங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு, அதற்கு நீங்களும் பல வகையில் ஒத்துழைப்பு தந்து, தேர்தலை நடத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, தேர்தலை நடத்திக் கொடுத்தீர்கள்.

இந்த செய்தியை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் நாங்கள் சொன்னோம். அதைச் சொன்னபோது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்ல, இந்தப் பகுதியில், இந்த ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஊராட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு வாருங்கள், நான் அவர்களிடம் பேசவேண்டும், அவர்களைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும் என்று கலைஞர் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அதற்குப் பிறகு சென்னைக்கு அழைத்து வந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு பாராட்டு விழாவே நடத்தினோம். கலைஞர் அவர்களே அந்த விழாவில் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினார். அந்த விழாவிற்கு சமத்துவப் பெருவிழா என்றும் பெயர் சூட்டி அந்த விழாவை நடத்தினோம். அந்த விழாவுக்கு நான்தான் முன்னிலை வகித்தேன். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசும்போது சொன்னார், தலைவர் கலைஞர் அவர்களைப் பாராட்டி பேசிவிட்டு, இந்தத் தேர்தலை நடத்தியதற்காக நன்றி கூறிவிட்டு, சமத்துவப் பெரியார் கலைஞர் என்று பட்டத்தைக் கொடுத்தார். அதற்குப் பிறகு இந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக 80 லட்சம் ரூபாயை வழங்கிய அரசு தான் அன்றைய திமுக அரசு. அது மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறோம். அந்த நிதியைக் கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்தப் பகுதிக்கு நாம் ஆற்றியிருக்கிறோம்.

அப்படிப்பட்ட பாப்பாபட்டிக்குத் தான் நான் இப்போது வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும் பாப்பாபட்டியைத் தேடி நான் வந்திருப்பதற்குக் இதுதான் முக்கியமான காரணம் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் முன்னின்று நடத்திய சமத்துவப் பெருவிழாவில் பேசும் போது சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை என்று பேசினார். ஒற்றுமை இல்லாத சமூகத்தில் வளர்ச்சி இருக்காது. அத்தகைய ஒற்றுமை உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டம் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. கிராமங்களில் இருந்து தான் ஜனநாயகம் மலர்ந்தது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் குடத்தை வைத்துக்கொண்டு, அதில் போட்டியிடும் ஆட்களின் பெயரை எழுதிப் போடுவார்கள், அதற்குப் பிறகு, அதைக் குலுக்கி, குடத்தில் போட்டிருக்கும் ஓலைச்சுவடியை எடுப்பார்கள். யார் பெயர் வருகிறதோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். அதற்கு குடவோலை முறை என்று பெயர். அந்தக் குடவோலை முறை தான் இன்று வோட்டிங் மிஷின் ஆக மாறியிருக்கிறது.

'ஒரு நல்ல ஜனநாயகம் என்றால் அது கடைக்கோடி மனிதனின் குரலைக் கேட்பதாக இருக்க வேண்டும்' என்று மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். கடைக்கோடி மனிதனின் குரலைக் கேட்பதற்காகத் தான் நான் வந்திருக்கிறேன். இதுதான் காந்தியார் காண விரும்பிய கிராம ராஜ்ஜியம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

அதேபோல, கிராம மறுமலர்ச்சிக்கு திட்டங்களை ஏராளமாக உருவாக்கித் தந்தது, ஏராளமாக ஏற்படுத்தித் தந்தது திமுக ஆட்சி தான். இப்போதும், நாம் தேர்தலுக்கு முன்னர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம், மக்களுக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்று மேடையில் பேசிவிட்டு சென்றுவிடவில்லை அல்லது துண்டுப் பிரசுரம் அச்சிட்டு மக்களுக்குக் கொடுத்து அதோடு கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவில்லை. ஒரு புத்தகமாகவே அச்சிட்டுக் கொடுத்தோம். 505 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றிருந்தன. அந்த 505 வாக்குறுதிகளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை இதுவரையில் நாம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். அதில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளும் இருக்கிறது, சொல்லாததும் இருக்கிறது. மீதமுள்ள வாக்குறுதிகளை மட்டுமல்ல, இன்னும் என்னென்ன தேவைப்படுகிறதோ, அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது, அதை நிறைவேற்றியே தீருவோம், அதில் எந்த மாற்றமும் கிடையாது.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்,

* மக்களை தேடி மருத்துவம் திட்டமானாலும் -

* நமக்கு நாமே திட்டமானாலும் -

* அண்ணா மறுமலர்ச்சி திட்டமானாலும் -

* சமத்துவ புரங்களானாலும் -

அனைத்தும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்ததக்கூடிய திட்டங்களாக நம்முடைய கழக அரசு அமைத்து வருகிறது. இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். அதனால் தான் உழவர்களுடைய கருத்தைக் கேட்டு, விவசாயிகளின் எண்ணங்களை, உணர்வுகளையெல்லாம் கேட்டு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே தி.மு.க ஆட்சியில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

“நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்” : கிராம சபையில் முதல்வர் உரை!

எனவே, மீண்டும் சொல்கிறேன். இது எனது அரசு அல்ல; நமது அரசு. உங்களுடைய விருப்பங்களோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவிருக்கக்கூடிய அரசு. இந்த அரசு இருக்கவேண்டுமென்று நினைக்கிற வகையில், அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை - பணக்காரர் கிராமம் - நகரம் - பெரிய தொழில் - சிறிய தொழில் வட மாவட்டம் - தென்மாவட்டம் என்ற எந்த வேற்றுமையும் நாங்கள் பார்க்கப் போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழ்நாட்டை அமைப்பதற்கு நாங்கள் பாடுபடப் போகிறோம், அதற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நான் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, இங்கே பேசிய நண்பர்கள், சகோதரிகள் சில கோரிக்கைகளை எடுத்துச் சொன்னீர்கள். அவைகளை நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த நம்பிகைக்கையை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். அதுமட்டுமல்லாமல், இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளையும் வெளியிடப்போகிறேன்.

அறிவிப்புகள்

> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பாப்பாபட்டி கிராமத்தில் ரூபாய் 23 இலட்சத்து 57 ஆயிரம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும்.

> பாகதேவன்பட்டி கிராமத்தில் சுமார் 10 இலட்சத்து 93 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடம் உருவாக்கப்படும்.

> பாப்பாபட்டி கிராமத்தில் ரூபாய் 14 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டித் தரப்படும். பாப்பாபட்டி, மகாதேவன்பட்டி, பேயம்பட்டி மற்றும் கரையாம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மயானங்களில் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

> கரையாம்பட்டி கிராமத்தில் ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்படும்.

> கல்லுப்பட்டி காலனியில் புதிய தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பாகதேவன்பட்டி, பேயம்பட்டி ஆகிய கிராமங்கள் கூடுதல் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும், இவை ரூபாய் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் செலவில் நிறைவேற்றப்படும்.

> பாப்பாபட்டி கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். மேலும், பாப்பாபட்டி மற்றும் கல்லுப்பட்டி காலனிக்கு புதிய ஆழ்குழாய் அமைக்கப்படும். இதற்கான மதிப்பீடு ரூபாய் 25 இலட்சத்து ஆறாயிரம் ஆகும்.

இப்படி பல திட்டங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டங்களெல்லாம், நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே, இந்தப் பணிகள் எல்லாம், அதேபோல், நீங்கள் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய கோரிக்கைகளையெல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்படுகிறது என்பதை வாரத்திற்கு ஒருமுறை நானே நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அல்லது காணொலிக் காட்சி மூலமாக அழைத்து என்ன நிலை என்பதை நிச்சயமாக கேட்பேன்.

அவையெல்லாம் விரைவில் முடித்துத் தரப்படும் என்ற நம்பிக்கையை எடுத்துச் சொல்லி, உள்ளபடியே இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்களும் வந்திருக்கிறீர்கள். ஆக, பெண்களுடைய முன்னேற்றத்திற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த கிராமசபைக் கூட்டம், ஒரு கிராமசபைக் கூட்டம் போன்று இல்லை, ஒரு பொதுக் கூட்டம் போன்று இருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய சப்தம் கூட இல்லை, அதுவும் பெண்கள் உட்கார்ந்திருந்த பகுதியில் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்த ஆட்சிக்கு, இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு மக்கள் ஆர்வமாக, இவ்வளவு அமைதியாக வந்து நீங்கள் கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நிச்சயம் நாம் முன்னேறுவோம், நம்முடைய தமிழ்நாடு பல முன்னேற்றத்தை காண இருக்கிறது.

கடந்த சில நாட்களாக, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களையெல்லாம் ஒப்பிட்டு, ஒரு சிறந்த முதலமைச்சர், நம்பர் 1 முதலமைச்சர் என்று எனக்கு பெயர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ளபடியே எனக்கு பெருமை இல்லை. எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும், வரப்போகிறது, வரும், அதற்கு நீங்களெல்லாம் துணை நிற்க வேண்டும், அதில் பாப்பாபட்டி ஊராட்சியும் பங்குபெறப் போகிறது, இடம்பெறப் போகிறது என்ற நம்பிக்கையை எடுத்துச்சொல்லி, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன்.

Related Stories

Related Stories