தமிழ்நாடு

“இன்னொரு காவலாளியை நேபாளத்துக்கு அனுப்பி வைத்ததே போலிஸ்தான்” - மறு புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சோலூர்மட்டம் காவல்துறையினர் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோர் மிரட்டியதால் கொடநாடு எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபா நேபாளம் சென்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

“இன்னொரு காவலாளியை நேபாளத்துக்கு அனுப்பி வைத்ததே போலிஸ்தான்” - மறு புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சோலூர்மட்டம் காவல்துறையினர் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோர் மிரட்டியதால் கொடநாடு எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபா நேபாளம் சென்றதாக தனிப்படை போலிஸாரின் மறுபுலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மறு விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் மறு புலன் விசாரணையில் சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , தனிப்படை போலிஸார் ஐந்து குழுக்களாகப் பிரிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி நள்ளிரவு கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட நிலையில் மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபாவை அப்போதைய போலிஸார் மிரட்டி அவரை நேபாளத்துக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் தற்போது நடத்தப்பட்டு வரும் மறு விசாரணையில் வெளியாகி உள்ளது.

அத்துடன் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த இரண்டு நபர்களை அப்போது பணியில் இருந்த சோலூர்மட்டம் ஆய்வாளர் பாலசுந்தரம் அசாம் மாநிலம் வரை அழைத்துச் சென்று அவர்களை மீண்டும் கொடநாடு பகுதிக்கு வரக்கூடாது எனக் கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.

தற்போது நடைபெறும் விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவர்களை தனிப்படை போலிஸார் அசாம் மாநிலத்தில் இருந்து உதகைக்கு அழைத்து வர உள்ளனர்.

இதனிடையே கொடநாடு கொலை கொள்ளை குற்றச்செயலில் ஈடுபட்ட தீபு மற்றும் ஜித்தன் ஜாய் ஆகியோரிடம் இன்று உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனிப்படை போலிஸார் நடத்தும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் மற்றொரு தேதியில் விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது குற்றவாளியான வாளையார் மனோஜ், குன்னூர் சிறையில் உள்ள நிலையில் அவரது ஜாமின் உத்தரவில் உள்ள நிபந்தனைகளை மீண்டும் தளர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர் முனிரத்தினம் தாக்கல் செய்த மனு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கொலை, கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த மிகமுக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவை போலிஸார் மிரட்டி நேபாளத்திற்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் சந்தேகத்தை கிளப்பி நிலையில், அவரை அழைத்து வந்து மீண்டும் விசாரணை நடத்தினால் பல உண்மைச் சம்பவங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories