தமிழ்நாடு

"சகோதரனாக உங்கள் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன்” : மாணவ மாணவிகளிடம் முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்!

“உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"சகோதரனாக உங்கள் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன்” : மாணவ மாணவிகளிடம் முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி நீட் தேர்வைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார். தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்த கனிமொழி, மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை ஒருவர் செய்துகொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தி.மு.க சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இந்நிலையில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்விதச் சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவனத் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, “நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories