தமிழ்நாடு

“நம்ம சாதனையைப் பார்த்து அசந்துபோன மகாராஷ்டிரா குழுவினர்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

“தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதை கேட்டு மகாராஷ்ராவிலிருந்து வந்துள்ள குழுவினர் பிரம்மித்தனர்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

“நம்ம சாதனையைப் பார்த்து அசந்துபோன மகாராஷ்டிரா குழுவினர்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவக் கட்டமைப்பு, கொரானா தொற்றை கையாண்ட விதம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட, மஹாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தலைமையில், அம்மாநில சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து பேசினர்.

இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், “தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு குறித்து ஆராய மஹாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மஹாராஷ்டிராவில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் தன்னைக் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தியதை கேட்டு மகாராஷ்ராவிலிருந்து வந்துள்ள குழுவினர் பிரம்மித்தனர்” எனத் தெரிவித்தார்.

ஆ.ராசா பேசிய ஆடியோ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வை பொறுத்தவரை அதில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தி.மு.கவின் பிரதான கொள்கை. நிச்சயம் குடியரசுத் தலைவர் இதனை புறந்தள்ள வாய்ப்பு இல்லை. நிச்சயம் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு ஒன்றிய அரசு இறங்கி வரும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக மக்கள் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு நேற்று தடுப்பூசி செலுத்தினர். கூடுதலாக நம்மிடம் தடுப்பூசி இருந்திருந்தால் 50 லட்சம் பேருக்கு கூட போட்டிருக்கலாம். நம்மிடம் தடுப்பூசி இருந்தால் தினமும் கூட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடலாம். தடுப்பூசி கேட்டு மீண்டும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி தடுப்பூசி வந்தால் மீண்டும் ஒரு மெகா முகாம் நடத்துவோம்.

நீட் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஆளுநருக்கு அனுப்புவோம், அதை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார். குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பது யார் என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், “தமிழகத்தில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. பலவற்றை நாங்கள் இங்கிருந்து கற்றிருக்கிறோம். குறிப்பாக மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் 'தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்' எங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து நாங்களும் கற்றிருக்கிறோம்.

எங்கள் மாநிலத்திலும் கூடுதல் மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தனித்துவம்மிக்க பல பணிகளை செய்து வருகிறது” எனப் பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories