தமிழ்நாடு

சிறந்த இதழியலாளர்களுக்குக் 'கலைஞர் எழுதுகோல்' விருது: பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!

சிறந்த இதழியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சிறந்த இதழியலாளர்களுக்குக் 'கலைஞர் எழுதுகோல்' விருது: பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள், அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

சிறந்த இதழியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிகையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற அரசு நிதியுதவி வழங்கப்படும். அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களைப் பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்.

அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புனரமைக்கப்படும்.

சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளத் தூத்துக்குடியில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச்சிலை. மருது சகோதரர்களுக்குச் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories