தமிழ்நாடு

ஒரே போட்டியில் அடுத்தடுத்த இரண்டு பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் அசத்தும் இந்தியா!

இந்திய அணி இதுவரை இல்லாத அளவாக பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை மொத்தமாக 15 பதக்கங்களை வென்றுள்ளது.

ஒரே போட்டியில் அடுத்தடுத்த இரண்டு பதக்கங்கள்.. பாராலிம்பிக்கில் அசத்தும் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இதுவரை இல்லாத அளவாக பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை மொத்தமாக 15 பதக்கங்களை வென்றுள்ளது.

நேற்று காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் 2.07 மீட்டர் உயரத்தை தாண்டி இந்திய பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். அதன்பிறகு, நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 50 மீ 3 P பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலம் வென்றிருந்தார். இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் அவனி லெகாரா வென்ற இரண்டாவது பதக்கம் இது. இதற்கு முன்னரே இன்னொரு பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை எனும் பெருமையை பெற்றார்.

நேற்று மாலை வில்வித்தை ரீகர்வ் பிரிவு வெண்கல பதக்க போட்டியில் ஹர்வீந்தர் சிங் பங்கேற்றிருந்தார். கொரிய வீரருக்கு எதிராக இவர் மோதியிருந்தார். டேபிள் டென்னீஸில் சீனர்களை வீழ்த்துவது எவ்வளவு கடினமோ அதே அளவுக்கு வில்வித்தையில் கொரிய வீரர்களை வெல்வது கடினம். ஆனால், இந்திய வீரர் ஹர்வீந்தர் அந்த கடினமான விஷயத்தில் போராடி வென்றார். போட்டி டை ஆகி சூட் அவுட் வரை சென்றிருந்தது. சூட் அவுட்டில் கொரிய வீரரே 8 புள்ளிக்கான வட்டத்தை துளைக்க ஹர்வீந்தர் இலக்கின் மையத்தை துளைத்து 10 புள்ளிகளை பெற்றார். இதன்மூலம் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார்.

இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 50 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் மனீஷ் நார்வல் மற்றும் சிங்ராஜ் இருவரும் பங்கேற்றிருந்தனர். முதலில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் சிங்ராஜ் நான்காவது இடத்தையும் மனீஷ் நார்வல் ஏழாவது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப்போட்டியில் இருவருமே தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டனர். 218.2 புள்ளிகளை பெற்று மனிஷ் நார்வல் தங்கப்பதக்கத்தையும் 216.7 புள்ளிகளை பெற்று சிங்ராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

சிங்ராஜ் ஏற்கனவே 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவிலும் வெண்கலம் வென்றிருந்தார். இது அவர் வெல்லும் இரண்டாவது பதக்கம். ஒட்டுமொத்தமாக துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர்/வீராங்கனைகள் 5 பதக்கங்களை வென்றிருக்கின்றனர். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது.

பேட்மிண்டனிலும் இந்திய வீரர் வீராங்க்னைகள் 6 பேர் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். அவர்களும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இந்தியா 20 பதக்கங்களுக்கு மேல் வெல்லும். ஒலிம்பிக்/பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை பெற்றிடாத வெற்றியாக இது அமையும். இந்தியா பாரா வீரர்/வீராங்கனைகள் ஒரு புதிய வரலாறையே எழுதியிருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories