தமிழ்நாடு

“கொடநாடு கொள்ளைக்காக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தகிடுதத்தங்கள்” : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொன்தோஸ்!

கொடநாடு கொலை-கொள்ளை குறித்து கொடநாடு பகுதியைச் சேர்ந்த,பொன்தோஸ் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.

“கொடநாடு கொள்ளைக்காக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தகிடுதத்தங்கள்” : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொன்தோஸ்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் கொடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அப்போது கொள்ளையர்களால் கொள்ளையடிக்க முடியாததால் தப்பி ஓடியதாகவும் இதுகுறித்து சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அப்போது காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்யவில்லை என கொடநாடு பகுதியை சேர்ந்த, அப்போதைய கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கொள்ளை போயின.

கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி மனைவி, மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கொடநாடு காவலாளி கொலை வழக்கு 10 பேர் மீது பதிவு செய்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் எந்தவித நகர்வும் இல்லாத நிலையில், கடந்த 13ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக வாதிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கு விசாரணையின்போது, சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த காவல்துறை உதவி வேண்டும் என்றும், 173/8 குற்றவியல் விசாரணை முறை சட்டப்படி கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த காவல்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயானிடம் விசாரணை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர். அவருடன், டி.எஸ்.பி., சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளரான வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 3 மணி நேர விசாரணையில், சயானிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே நேற்று இரண்டாம் தேதி வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு வழக்கறிஞர்கள் இவ்வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் மனு தாக்கல் செய்தார், இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நான்கு வார காலத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சுதந்திரமாக விசாரணை மேற்கொள்ளவும் அனுமதியளித்தார். இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளை போன பொருட்கள் மற்றும் கோப்புகள் குறித்து காவல்துறையினர் கேட்டனர். அதற்கு எஸ்டேட் மேலாளர் நடராஜன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், விசாரணையில் திருப்தியடையாத காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் வரவேண்டுமென கூறி நடராஜனை அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இன்று பிற்பகல் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் மைத்துனர் தினேஷ் ஆகியோரை கோவையில் ரகசிய இடத்தில் வைத்து சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

“கொடநாடு கொள்ளைக்காக அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தகிடுதத்தங்கள்” : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொன்தோஸ்!

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவின் பங்களாவில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஒரு நாள் இரவு பங்களாவிற்குள் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்போது கொடநாடு எஸ்டேட்டில் தேயிலை தொழிற்சாலை இரவு இயங்கி கொண்டிருந்த நிலையில், சில பணியாளர்கள் எஸ்டேட் பகுதிக்குச் சென்றபோது கொள்ளையர்களை பார்த்து விரட்டி அடித்துள்ளனர். இதை அப்போது காவல்துறையிடம் தெரிவித்தும், அதுகுறித்து சோலூர்மட்டம் போலிஸார் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் மூடி மறைத்துள்ளனர்.

அத்துடன் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 21ஆம் தேதி கோடநாடு பகுதிக்கு போடப்பட்டிருந்த காவல்துறையினரின் பாதுகாப்பை, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில் சோலூர்மட்டம் போலிஸார் விலக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும் கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் பகலில் 15 பேர், இரவுக் காவலர்கள் 15 பேர் தொடர்ந்து காவல் பணியை மேற்கொள்ளும் நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேர் மட்டுமே கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் இரவு காவல் பணியை மேற்கொண்டது எப்படி என்று சந்தேகம் வலுத்து வருவதால், இவ்வழக்கு விசாரணையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன், கோவை மண்டல ஐ.ஜி ,சோலூர்மட்டம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தினால் பல உண்மை சம்பவங்கள் வெளிவரும் என முன்னாள் கொடநாடு ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான கொடநாடு பகுதியை சேர்ந்த பொன்தோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொலை கொள்ளை சம்பவத்தில் போலிஸார் 4 கைகடிகாரம் ஒரு கிறிஸ்டல் கரடி பொம்மை மட்டுமே திருட்டுப் போனதாக வழக்குப் பதிவு செய்ததையும், ஆனால் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், தாங்கள் பல்வேறு ஆவணங்களை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அப்போதைய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மிக முக்கிய பிரமுகரை இவ்வழக்கில் இருந்து தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும் எனவே கட்டாயம் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நடத்தும் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories