தமிழ்நாடு

"வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்த ராஜேந்திர பாலாஜி" : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலம்!

ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73% அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

"வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்த ராஜேந்திர பாலாஜி" : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், மேல் விசாரணை நடந்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்கு பதிவு செய்யவேண்டும் என நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லை என கூறி நீதிபதி ஹேமலதா வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன்வைத்தார்.

அப்போது அவர், ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்கை கைவிடுவதை பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவித்த அவர், தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட, மேல் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த வாதத்திற்கு பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

banner

Related Stories

Related Stories