தமிழ்நாடு

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் எம்.எம்.அப்துல்லா... தி.மு.க-வின் பலம் 8ஆக அதிகரிப்பு!

தி.மு.க-வின் எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் எம்.எம்.அப்துல்லா... தி.மு.க-வின் பலம் 8ஆக அதிகரிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க-வின் எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக அ.தி.மு.க சார்பில் தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி காலமானதால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்கு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க சார்பில் தி.மு.க வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தி.மு.க பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்நிலையில், எம்.எம்.அப்துல்லாவின் மனு செப்டம்பர் 1ஆம் தேதி ஏற்கப்பட்டது. 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்று தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலருமான சீனிவாசனிடம், எம்.எம்.அப்துல்லா பெற்றுக்கொண்டார் . இந்த நிகழ்வில் மூத்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க வெளிநாடுவாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளரான எம்.எம்.அப்துல்லா (46) புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 1993-ல் புதுக்கோட்டை நகர தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளரான அவர், நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் என்று தி.மு.கவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

மாநிலங்களவைக்கு எம்.எம்.அப்துல்லா தேர்வாகியுள்ளதால் மாநிலங்களவையில் தி.மு.கவின் பலம் தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories