
கணவன், மனைவி இருவருமே மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவருமே வேலைக்குச் சென்று தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வீட்டில் வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணின் மூன்று சக்கர வாகனம் அண்மையில் திருடுபோய் விட்டது.
இதனால் அவர் வேலைக்குச் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்க அவரது நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து மூன்று சக்கர வண்டி வாங்கக் குறைந்தபட்சம் ரூபாய் 65 ஆயிரம் வரை தேவைப்படும் என்பதால் பல இடங்களில் முயற்சி செய்துள்ளனர்.
இந்த தகவல் நண்பர் ஒருவரின் மூலம் நடிகர் கார்த்திக்கு கிடைத்துள்ளது. உடனே அந்த நண்பரிடம் ரூபாய் 35 ஆயிரம் தருவதாகக் கூறி, உடனே அந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வங்கிக் கணக்கிற்கும் பணத்தை அனுப்பியுள்ளார்.

மேலும் மற்ற சிலரும் சிறு சிறு பண உதவிகளைச் செய்துள்ளனர். பின்னர் ரூபாய் 65 ஆயிரம் கிடைத்த உடன் மாற்றுத்திறனாளி பெண் மூன்று சக்கர வாகனத்தை வாங்கி மீண்டும் அந்த வாகனத்தில் மகிழ்ச்சியுடன் வேலைக்கு சென்று வருகிறார். வாகனம் வாங்க நிதி உதவி செய்த நடிகர் கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சத்தமே இல்லாமல் நடிகர் கார்த்தி செய்த இந்த உதவியை அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் இணையத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.








