தமிழ்நாடு

“தமிழக அரசியலின் இயக்கமாக இருப்பவர் கலைஞர்” : தினகரன் தலையங்கம் புகழாரம்!

“தமிழக அரசியலின் இயக்கமாக இருப்பவர் கலைஞர். அத்தகைய பெருமை மிக்கவருக்கு நினைவிடம் அமைக்கும் பேறு, அவரது மகனும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வாய்த்தது எத்தனை பெருமை”

“தமிழக அரசியலின் இயக்கமாக இருப்பவர் கலைஞர்” : தினகரன் தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தமிழக அரசியலின் இயக்கமாக இருப்பவர் கலைஞர். அத்தகைய பெருமை மிக்கவருக்கு நினைவிடம் அமைக்கும் வாய்ப்பு, பேறு, அவரது மகனும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வாய்த்தது எத்தனை பெருமை” எனக் குறிப்பிட்டு தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தினகரன் நாளேட்டின் 26-08-2021 தலையங்கம் வருமாறு:

80 ஆண்டு பொதுவாழ்க்கையில், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட 13 தேர்தலிலும் வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர், 50 ஆண்டு காலம் மாபெரும் அரசியல் இயக்கத்தை கட்டிக்காத்த தனிப்பெரும் தலைவர், தமிழகத்தின் முதல்வராக 5 முறை ஆட்சி செய்த வித்தகர், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை 110 வது விதியின் கீழ் தனது முதல் அறிவிப்பாக வெளியிட்டு பெருமை சேர்த்து இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதைவிட பெரும் பேறு என்ன வேண்டும். வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் நலனுக்காக உழைத்தவர். தமிழகத்தின் முதல் உரிமைக்குரல். தமிழர்களுக்கு, தமிழுக்கு ஏதாவது ஒரு குறை என்றால் என்றும், எப்போதும், முதல் குரல் அவர் இருக்கும் வரை கலைஞருடையதாகத்தான் இருந்தது. மிகப்பெரிய போராளி. திருக்குவளையில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது போராட்டமான வாழ்க்கை மூலம் தனக்கான இடத்தை, அங்கீகாரத்தை பெற்றவர். கடைசி வரை அவர் எளிய மக்கள் உரிமை பெற போராடியவர். அவர்களுக்காக உழைத்தவர். திட்டங்களை தீட்டியவர். தான் ஆட்சி கட்டிலில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி தமிழக மக்களின் நலனுக்கான தனது போராட்டத்தை அவர் நிறுத்திக்கொண்டதும் இல்லை.

நிரந்தர ஓய்வுக்குச் செல்லும் வரை தனது போராட்ட வாழ்வில் இருந்து அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதும் இல்லை. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று தனது நினைவிடத்தில் எழுதச்சொன்னவர், தனது மூச்சுக்காற்றில் எப்போதும் கலந்து இருந்த அண்ணாவின் அருகில் நிரந்தர ஓய்வு எடுப்பதற்கான இடத்தையும் கூட போராடித்தான் பெற்றார் என்றால் கலைஞரின் போராட்ட வாழ்வின் பெருமையின் புகழ் வெளிச்சம் அனைவருக்கும் தெரியும். கலைஞர் ஒரு வரலாறு. எந்தநாளும் நிலைத்து நிற்கும் அவரது புகழ். இனிவரும் சந்ததிகள் கூட அவரது எழுச்சி மிக்க, பெருமை மிக்க வாழ்வின் வெற்றியை அறிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் எல்லைகளை கடந்து என்றும், எப்போதும் அனைத்து கட்சியினரும் மதிக்கத்தக்க பண்பாளர். மாற்று கட்சியினர் கருத்தையும் செயல்படுத்தும் நாணயம் மிக்கவர். துடிப்பான பத்திரிகையாளர். எழுத்தும், அவரும் என்றும் சோர்ந்தது இல்லை. பத்திரிகை ஆசிரியர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர். நிறையாக இருந்தாலும், குறையாக இருந்தாலும் அவர்களிடம் எடுத்துச்சொல்லும் உரிமை மிக்கவர். கலைஞர் இல்லாமல் தமிழக அரசியல் நகர்ந்தது இல்லை. அவர் இன்று இல்லை. ஆனாலும் தமிழக அரசியலின் இயக்கமாக இருப்பவர் கலைஞர். சூரியனின் ஒளியை யாராலும் மறைக்க முடியாது. அத்தகைய புகழ் மிக்கவருக்கு, பெருமை மிக்கவருக்கு நினைவிடம் அமைக்கும் வாய்ப்பு, பேறு, அவரது மகனும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வாய்த்து இருக்கிறது. இது எத்தனை பெருமை.

banner

Related Stories

Related Stories