தமிழ்நாடு

“10 ஆண்டு கால ஆட்சியும் ஊழல் மயம்... கைது பயத்தில் முன்னாள் அமைச்சர்கள்” : தினகரன் தலையங்கம் தாக்கு!

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டிய சூழலில், பொதுமக்களும் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடு பட்டியலை உன்னிப்பாக கவனித்து வருவதாக தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“10 ஆண்டு கால ஆட்சியும் ஊழல் மயம்... கைது பயத்தில் முன்னாள் அமைச்சர்கள்” : தினகரன் தலையங்கம் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தினகரன் நாளேட்டின் இன்றைய (23-08-2021) தலையங்கம் வருமாறு:

அ.தி.மு.கவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை எனலாம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு ஒருமுறை கூறியதுபோல, ‘‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்’’ ஆகிய மூன்றையும் மையமாக கொண்டே அ.தி.மு.க ஆட்சி காலம் கடத்தியது. கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் திருட்டு, மின்சாரம் கொள்முதலில் ஊழல், மதுபான விற்பனையில் முறைகேடுகள் என கடந்த 2015ம் ஆண்டே அ.தி.மு.க மீது 18 ஊழல் குற்றச்சாட்டுக்களை பாமக முன்வைத்திருந்தது. அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடுகள் இப்போது ஒவ்வொன்றாய் வெட்டவெளிச்சமாகி வருகின்றன. அ.தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் சமீபகாலமாக நடத்தப்படும் ரெய்டுகளில் ஊழல்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 52 இடங்களில் சோதனை நடந்தது. அரசு கட்டுமான பணிகளில் ஊழல், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வேலுமணி இன்னமும் விசாரணை வளையத்தில் உள்ளார். சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் மட்டுமே ரூ.464 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. தற்போது சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதில் முறைகேடுகள் காரணமாக இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராமாபுரத்திலும், பெரம்பலூரிலும் இத்தகைய ஊழல்கள் நடந்தேறியுள்ளன. குடிசை மாற்று வாரியத்தை கவனித்து வந்த முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சிற்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்பதால் அவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான விவகாரத்தில் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணியும் விரைவில் சிக்க உள்ளார். அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் கிலியில் உள்ளனர். தங்கள் துறை சார்ந்த ஏதேனும் விசாரணை நடந்தால் நமது மெகா ஊழல் வெளியாகுமே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகியோர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் விவகாரங்களால் இன்று சட்டசபை கூட்டத்தில் அனல் வீசக்கூடும் எனத் தெரிகிறது. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வெளியானவுடன், அ.தி.மு.கவினர் சட்டசபையில் அமளி நடத்தியதோடு, கவர்னரை சந்தித்து மனுவும் அளித்தனர். இன்று சட்டசபையில் அ.தி.மு.கவின் ஊழல் முறைகேடுகள் குறித்து விவாதம் சூடு பறக்கும் எனத் தெரிகிறது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டிய சூழலில், பொதுமக்களும் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடு பட்டியலை உன்னிப்பாக கவனித்த வண்ணம் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories