தமிழ்நாடு

கொடநாடு மர்மம்: சயான் வாக்குமூலத்தை வைத்து போலிஸ் கிடுக்குப்பிடி; விசாரணை வளையத்தில் சிக்கிய அதிமுகவினர்!

சயானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன், சகோதரர் சுனில் ஆகியோரை விசாரணைக்கு அழைக்க கோத்தகிரி போலிஸார் முடிவு.

கொடநாடு மர்மம்: சயான் வாக்குமூலத்தை வைத்து போலிஸ் கிடுக்குப்பிடி; விசாரணை வளையத்தில் சிக்கிய அதிமுகவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொடநாடு கொள்ளை, கொலை நடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுகவின் மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான கூடலூர் மர வியாபாரி சஜீவனின் சகோதரர் சுனில், சயான் உட்பட குற்றவாளிகளை பாதுகாப்பாக கேரளாவுக்கு அனுப்பி வைத்ததாக சயான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள சொகுசு பங்களாவில் அதிமுக மற்றும் அரசியல் சார்ந்த மிக முக்கிய பல்வேறு கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கொடநாடு தேயிலை தோட்டம் சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றார்.

இந்நிலையில் ஏப்ரல் 24ம் தேதி கொடநாட்டில் பங்களாவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில் பங்களாவில் இருந்த பல அதிமுக கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போதைய அரசியல் சூழலில் கொடநாடு பங்களாவிலிருந்து இரண்டு பொம்மைகள் மட்டுமே திருட்டுப் போனதாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

கொடநாடு மர்மம்: சயான் வாக்குமூலத்தை வைத்து போலிஸ் கிடுக்குப்பிடி; விசாரணை வளையத்தில் சிக்கிய அதிமுகவினர்!

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரும் , எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ் , கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சாயனின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர் .

இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த 5 மரணங்கள் இவ்வழக்கில் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பிய நிலையில் சயான் , மனோஜ் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட போது காவல்துறை மற்றும் நீதிபதிகளிடம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜிவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை , கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் காவல்துறையினர் அப்போது வழக்கை வேறு திசைக்கு கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் . இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார் .

சஜீவன்
சஜீவன்

இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவுத் , குன்னூர் டிஎஸ்பி சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அவருக்கு பல்வேறு வசதிகளை கூடலூரில் சேர்ந்த அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் செய்து தந்ததாகவும் சயான் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், சாயன் அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்து அதன் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டுவதற்காக குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரோஷ் தலைமையில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் இரண்டு உதவி ஆய்வாளர்கள் நான்கு காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டும் பணி தொடங்கியது.

இதனிடையே குன்னூர் சிறையிலுள்ள மற்றொரு குற்றவாளியான மனோஜிடம் விசாரணை நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த 17ம் தேதி மாலை காவல்துறையினர் சாயனிடம் நடத்தப்பட்ட மறு விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுகவின் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் என்பவர் கொள்ளை சம்பவத்திற்கு உதவியாக இருந்ததாக சயான் கூறியுள்ளார். அத்துடன் கொள்ளை கொலை சம்பவம் நடந்த அன்று அதிகாலை தாங்கள் சென்ற வாகனத்தை காவல்துறையினர் தடுக்காத வகையில் கொடநாடு முதல் தமிழ்நாடு எல்லை வரை சஜீவனின் அண்ணன் சுனில் போலி எண்களைக் கொண்ட வாகனம் மூலம் கேரளாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக சாயன் கூறியிருப்பதால், அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சுனில் ஆகியோருடனும் விசாரணை நடத்த ஓரிரு நாட்களில் சம்மன் அளிக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories