தமிழ்நாடு

மோடி அரசுக்கு பாடம்புகட்ட கைகோர்த்த 19 எதிர்க்கட்சிகள்.. செப். 20 - 30 வரை நாடு தழுவிய போராட்டம்!

ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மோடி அரசுக்கு பாடம்புகட்ட கைகோர்த்த 19 எதிர்க்கட்சிகள்..  செப். 20 - 30 வரை நாடு தழுவிய போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது. 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின், இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் விபரம் வருமாறு :- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையில், நேற்று மாலை, காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள், காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றன.

இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வரும் - கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மோடி அரசுக்கு பாடம்புகட்ட கைகோர்த்த 19 எதிர்க்கட்சிகள்..  செப். 20 - 30 வரை நாடு தழுவிய போராட்டம்!

கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் வலியுறுத்தியதால், ஒன்றிய அரசு விவாதிக்க மறுத்ததையும், அதனால் அவை முடங்கியதையும் குறிப்பிட்டார். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சட்ட மசோதாவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதையும் சோனியாகாந்தி நினைவு கூர்ந்தார். அதுபோல், வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு எதிர்க் கட்சிகள் ஒற்றுமையுடன் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் கூட்டத்தில் சோனியாகாந்தி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற 19 கட்சிகளின் சார்பில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் - ஒன்றிய பா.ஜ.க அரசை வலியுறுத்தும் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் வருமாறு :

1. தடுப்பூசி மருந்து தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள அனைத்துச் சக்தியையும் ஒன்றுபடுத்த வேண்டும். உலக நாடுகளிடமிருந்தும் தடுப்பூசி வாங்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாகச் செலுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தக்க இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நமது மருத்துவ உள்கட்டமைப்பு பெருமளவில் விரிவாக்கப்பட வேண்டும்.

2. வருமான வரி செலுத்தாத அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.7500 வழங்கப்பட வேண்டும். தேவை உள்ள எளிய மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களும், அன்றாடம் தேவைப்படும் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

3. பெட்ரோல் - டீசல் பொருட்களின் மீதுவிதிக்கப்பட்டிருக்கும் அதீத சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். எரிவாயு, சமையல் எண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவேண்டும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

4. மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும்.

5. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் புதிய தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வுக்கும் கோரிக்கைகளுக்கும் குரல் கொடுக்கும் உரிமைகள் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசுக்கு பாடம்புகட்ட கைகோர்த்த 19 எதிர்க்கட்சிகள்..  செப். 20 - 30 வரை நாடு தழுவிய போராட்டம்!

6. சிறு - குறு தொழில்களுக்குப் பொருளாதார ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியது கடனல்ல. பொருளாதார சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு முதலீடு செய்ய வேண்டும். இதனால் வேலை வாய்ப்பும் உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிக்கும். அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பவேண்டும்.

7. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும். அதைப்போலவே ஒரு நகர்ப்புற வேலைத்திட்டத்தை உருவாக்கி, அதைச் சட்டமாக்க வேண்டும்.

8. கல்வி நிலையங்களை விரைவில் திறப்பதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

9. பெகாசஸ் செயலி முலம் பொதுமக்களை உளவு பார்த்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் ஒரு உயர்மட்ட நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ரபேல் விமானங்களை வாங்கியதையும் ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். முந்தைய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

10. பீமா கொரேகான் வழக்கிலும் - குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதும் வன்கொடுமைமிக்க UAPA சட்டம் ஏவப்பட்டு போராளிகள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். மக்களின் ஜனநாயகஉரிமைக்கு எதிராகத் தேசத்துரோக/NASA சட்டங்களை ஏவுவதை நிறுத்த வேண்டும். அடிப்படை உரிமைகளை நிலை நாட்டுவதற்காகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களை விடுவிக்க வேண்டும்.

11. ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அங்கு ஒரு முறையான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இவ்வாறு அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒன்றிய பா.ஜ.க.அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories