தமிழ்நாடு

பெட்ரோல் விலை குறைந்ததுகூட தெரியவில்லை.. நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பீர்கள்?

பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை குறைந்ததுகூட தெரியவில்லை.. நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பீர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது தி.மு.க அரசு.

பெட்ரோல் விலை குறைந்ததுகூட தெரியவில்லை.. நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பீர்கள்?

மேலும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், “பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கவேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பெட்ரோல் மீதான வரியில் ரூ. 3 குறைக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த விலை குறைப்பு பெரும் நிவாரணமாக அமையும்.

பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,160 கோடி இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாது, ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் பெற்றதால் பெட்ரோல் விலை உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா மீண்டும் அதிகரிக்கும் வேளையில், ‘மக்கள் ஆசி யாத்திரை’ என்ற பெயரில், யாத்திரை ஒன்றை பா.ஜ.க கும்பல் மேற்கொண்டு வருகிறது. இந்த யாத்திரை கும்பலுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமைத் தாங்கி நடத்தி வருகிறார். கொரோனா விதிமுறைகளை மீறி பல இடங்களில் கூட்டம் கூடும் பா.ஜ.கவின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றனர்.

இந்த சூழலில், செய்தியாளார்களை சந்தித்த எல்.முருகனிடம், தி.மு.க ஆட்சியில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அப்போது அதற்கு பதில் அளித்த எல்.முருகன், பெட்ரோல் விலையை தமிழ்நாடு அரசாங்கம் குறைந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் குறைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அறிவித்த பெட்ரோல் விலைகுறைப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என அறிவித்த மறுநாளே பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட விவரம் கூட தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெட்ரோல் விலை குறைந்ததுகூட தெரியவில்லை. நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பீர்கள் முருகன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories