முரசொலி தலையங்கம்

ஆக்கிரமிப்பாளர் பிடியில் ஆப்கன்; அச்சுறுத்தும் தாலிபான்கள்.. என்ன செய்யப்போகிறது உலக நாடுகள்? : முரசொலி!

ஆக்கிரமிப்பாளர்கள் வசம் ஒரு நாடு போனால் என்ன ஆகும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ஆப்கானிஸ்தான் என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பாளர் பிடியில் ஆப்கன்; அச்சுறுத்தும் தாலிபான்கள்.. என்ன செய்யப்போகிறது உலக நாடுகள்? : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு:

ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் நிகழ்வுகள் அந்த நாட்டுக்கு மட்டுமல்ல; அண்டை நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன; பக்கத்து வீட்டுக்குள் ஆணி அடிக்கும் சத்தம், அக்கம் பக்கத்து வீட்டில் விரிசலை உருவாக்குவதைப் போல!

இருபதாண்டு காலமாக அமெரிக்காவின் உதவியோடு ஒரு பொம்மை அரசாங்கம் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தது. அமெரிக்காவின் படைகள் படிப்படியாக அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டு, மொத்தமாக திரும்பிய நிலையில் தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் ஜனாதிபதி அஷ்ரப் கனி, ஒரு நாள் கூட அங்கே இருக்க முடியாமல் நாட்டை விட்டு தப்பிவிட்டார்.

காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்று தெரிந்ததும் விமானங்களில் வெளிநாட்டு மக்கள் தப்பிக்கிறார்கள். ஷேர் ஆட்டோவில் ஏறுவதைப்போல விமானங்களின் பக்கவாட்டுகளில் ஏறி, பறக்கும் போது கீழே விழுந்து உயிர்விட்ட மக்களைப் பார்க்கும் போது அந்த நாட்டு மக்களுக்கு இதுவரை இருந்த அஷ்ரப் கனியும் நம்பிக்கையைத் தரவில்லை. தாலிபான்களாலும் நம்பிக்கையைத் தர முடியவில்லை. அமெரிக்காவும் அதனைத் தரவில்லை. ஐ.நா அவையாலும் அதைத் தர முடியுமா என்பது சந்தேகமே!

‘90 நாட்களில் தாலிபான்கள் கையில் காபூல் சிக்கிவிடும்’ என்று அமெரிக்க உளவு நிறுவனம் செய்தி கொடுத்தது. 90 நாட்கள் ஆகவில்லை. அதற்கு முன்னதாகவே நிலைமை மாறியது. ஆகஸ்ட் 15 அன்று காலையில் காபூல் நகருக்குள் நுழைந்துவிட்டார்கள் தாலிபான்கள். சில மணி நேரத்தில் முக்கிய இடங்கள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள்ளும் துப்பாக்கி மனிதர்கள் நுழைந்தார்கள். அங்கே இருந்த அரசாங்கத்தால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆப்கன் இராணுவத்தால் தாலிபான்களை எதுவும் செய்ய முடியவில்லை. இன்னும் சொன்னால், இராணுவம் அவர்களை எதிர்த்து சண்டையிடவில்லை; கைகட்டியே நின்றது.

ஆக்கிரமிப்பாளர்கள் வசம் ஒரு நாடு போனால் என்ன ஆகும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ஆப்கானிஸ்தான். முதலில் உள்ளே நுழைந்தது ரஷ்யா. நஜிபுல்லா தலைமையில் அது ஒரு அரசை நிறுவி வைத்திருந்தது. அந்த அரசைக் கவிழ்ப்பதற்காக இதே தாலிபான்களைப் பயன்படுத்தியது அமெரிக்கா. நஜிபுல்லா அரசு கவிழ்க்கப்பட்டது மட்டுமல்ல; அவரே கொலை செய்யப்பட்டார்.

அடுத்து அமெரிக்க ஆதரவுடன் ஒரு அரசு அமைந்தது. தாலிபான்களுக்கும், அமெரிக்காவுக்குமே மோதல் ஏற்பட்டது. இப்போது அஷ்ரப் கனி தப்பிவிட்டார். தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். அமெரிக்கா போனதும் அந்த இடத்தைப் பிடிப்பதற்கு சீனா தயாராகிக் கொண்டு இருக்கிறது. இப்படி ஆக்கிரமிப்பாளர் தேசமாக ஆப்கானிஸ்தான் மாறி வரும் சூழல்தான் அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

கிரேக்கர்கள், இந்தியர்கள், பாரசீகர்கள், ஈரானியர்கள், மங்கோலியர்கள், ரஷ்யா, அமெரிக்கா என எப்போதும் அடுத்தவர் முற்றுகைக்கு உள்ளான தேசமாகவே ஆப்கானிஸ்தான் இருந்துவந்துள்ளது. ஆசியப் பகுதியில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை உன்னிப்பாக சீனா பார்த்து வருகிறது. ஏற்கனவே இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வரும் நாடு சீனா.

அந்த வரிசையில் இனி ஆப்கானிஸ்தானும் மாறலாம். அதனால்தான் தாலிபான்கள் அமைத்துள்ள அரசாங்கத்தை ஆளுக்கு முன்னால் ஆதரித்துள்ளது சீனா. இன்று அமைந்துள்ள தாலிபான்களின் ஆட்சியை பாகிஸ்தான் எப்படி கையாளப் போகிறது என்பதும் முக்கியமானது. ஆப்கன், எந்த தளைகளில் இருந்தும் விடுபடவில்லை. அடுத்த தளையில்தான் சிக்கி இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பாளர் கவசத்தை அவர்களால் அறுத்தெறிய முடியுமா என்பதும் சந்தேகமே!

இன்றைக்கு ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள், அந்த நாட்டுமக்களுக்கு நம்பிக்கை தருபவர்களாக மாறுவார்களா என்பதே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வி. அவர்களின் கடந்த கால ஆட்சி அச்சம் தருவதாக இருந்தது. 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில் அடிப்படைவாதம் அளவற்றுத் தலைதூக்கியது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகமாகப் போடப்பட்டன. பெண் கல்வி மறுக்கப்பட்டது. மலாலா என்ற சிறுமியே இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்கு குரல் கொடுத்ததால் கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் தாலிபான்கள் 15 வயது சிறுமியாக இருந்த மலாலாமீது கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த மலாலா பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று அங்கேயே உயர் கல்வி பயின்றார். கடந்த 2014ம்ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்றவேண்டும் என்றும் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா யூசப் வேண்டுகோள்விடுத்துள்ளார். பி.பி.சி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்து தான் மிகவும் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானின் மனித ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை பாதுகாக்க வேண்டும் என்றும் மலாலா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் செயலாற்ற தற்போது அனைத்து நாடுகளுக்குமே பங்கு உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்கள் கதவுகளை திறக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்கள், சிறுபான்மையினர் உரிமைகள் அங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மலாலா சொல்லி இருக்கிறார். இது இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கம் ஆகும்.

சொந்த தேசத்து சுதந்திர அரசானது, ஆக்கிரமிப்பாளர்கள் தேசத்து அரசைவிட அக்கிரமமானதாக ஆகிவிடக் கூடாது. அதுதான் முக்கியம். யார் ஆள்கிறார்கள் என்பதற்கு இணையானது என்ன மாதிரி ஆள்கிறார்கள் என்பதாகும். ஆப்கானிஸ்தானில் எந்த வகையில் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தாக வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைந்தாக வேண்டும். அந்த அரசு, ஆக்கிரமிக்கும் நாடுகளின் தயவில் இல்லாமல் சொந்த நாட்டு மக்களுக்கான ஆட்சியாக செயல்பட வேண்டும். மனித உரிமைகள், மனிதாபிமானம் ஆகியவை அந்த நாட்டின் அரசியல் சட்டமாக அமைய வேண்டும்”

banner

Related Stories

Related Stories