தமிழ்நாடு

“சொன்னீங்களே... செஞ்சீங்களா?” : வாக்குறுதிகளை பட்டியலிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் பதிலடி!

தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சொன்னீங்களே... செஞ்சீங்களா?” : வாக்குறுதிகளை பட்டியலிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். பின், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஸ்டேன் சுவாமி, இளங்குமரனார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என இருந்தாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது குறித்து வெள்ளை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கணக்கு போட்டு பார்த்தாலும், அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றை சரிசெய்து தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என உறுதி அளிக்கிறேன்.

அ.தி.மு.க ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இலவச செல்போன் தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் ரூ.25 என சொன்னீர்கள், கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கொடுப்போம் என சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையில் அவசியமான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டதா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை என்னவானது? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்பட்டதா?

பண்ணை மகளிர் குழுக்களை அமைத்தீர்களா? அனைத்து பழங்களுக்கான சிறப்பு வணிக வளாகங்களை அமைத்தீர்களா? அனைத்து பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றீர்கள். எங்காவது ஒரு இடம் காட்டுங்கள். டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் அமைத்தீர்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை எங்காவது உருவாக்கினீர்களா? இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது.

பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் எங்கெங்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் அத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எடுத்துச் சொல்வார்.

அ.தி.மு.க வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் சொல்வதற்கு, எங்கள் ஆட்சியில் நாங்களும் செய்யமாட்டோம் என சொல்வதற்காக அல்ல. உறுதியாக முறைகேடுகளை களைந்து, நிதிப் பற்றாக்குறையை சரிசெய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம், பணி. அதனால் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.” எனப் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories