தமிழ்நாடு

“ஊழல் சேர்மன்” : சொந்தக்கட்சி உறுப்பினரே புகார்.. கட்டிப்புரண்டு சண்டை போட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள்!

காளையார்கோவில் ஒன்றியக் குழு கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தாக்கிக்கொண்டதில் கவுன்சிலர் காயமடைந்துள்ளார்.

“ஊழல் சேர்மன்” : சொந்தக்கட்சி உறுப்பினரே புகார்.. கட்டிப்புரண்டு சண்டை போட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாறி, மாறி இருக்கைகளை வீசி தாக்கிக் கொண்டதில் கவுன்சிலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க) தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் 13-வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன் (அ.தி.மு.க), “பிளீச்சிங் பவுடர், முகக்கவசங்கள் வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றியத் தலைவரிடம் பேச முடியவில்லை. மொபைலில் அழைத்தாலும் அவரது கணவரே எடுக்கிறார்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளை மதிப்பதில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஒன்றியக்குழு தலைவரும் சிலரும் மட்டும் பேசிக்கொண்டு பணிகளை செயல்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? எங்களுக்கு தெரியாமல் பணிகள் நடத்துவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16-வது வார்டு கவுன்சிலர் மனோகரன் (அ.தி.மு.க), மகேஸ்வரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சேர்களை தூக்கி எறிந்தனர். இதில் மகேஸ்வரன் காயமடைந்தார்.

பின்னர் மற்ற உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். தொடர்ந்து மகேஸ்வரன், முறைகேடு குறித்த தனது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை எனக் கூறி சேர்மன் இருக்கையின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories