தமிழ்நாடு

“வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே தொடர்கிறார்கள்” : எழுத்தாளர் வே.ஸ்ரீராம் சிறப்பு கட்டுரை!

திருவள்ளுவருக்கு துறவின் அடையாளமான காவியை அணிவிக்காமல் - அறத்தின் அடையாளமான வெண்மையை வேணுகோபால் சர்மா அணிவித்தார் என்பது?

“வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே தொடர்கிறார்கள்” : எழுத்தாளர் வே.ஸ்ரீராம் சிறப்பு கட்டுரை!
Kannan Satya
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“வெண்மை என்பது அறத்தின் அடையாளம்!” என்றார் ஊர்தேடு படலத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர்!

அன்றந்த இலங்கை வானில் வெகுண்டு பறந்த அனுமன் வீடணனைக் கண்டதும் நெகிழ்ந்து சொன்ன வரிகள்…

வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி

ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்.

அவ்வாறாகவே, அறத்தின் அடையாளமான தூய வெண்ணிற ஆடையோடு - தமிழ் மொழியின் தலைமகனாக காலம் காலமாக நம்மிடையே ஒளிர்ந்து வருகிறார் திருவள்ளுவர்!

அந்தப் பொலிவைப் பொசுக்கும் நோக்கில் திருவள்ளுவருக்கு காவி பூசி களங்கம் செய்பவர்களை “Anti Thamizhan” என அடையாளப்படுத்தினால் பொருந்தாமலா போகும்?

அவர்கள், அபாண்டமாக ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

“அன்றொரு காலத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து மத அடையாளத்தோடுதான் இருந்தார். ஆனால், திராவிட சித்தாந்த அழுத்தங்களால் வேணுகோபால் சர்மா திருவள்ளுவருக்கு வெள்ளுடை அணிவித்து தோற்றத்தை மாற்றி விட்டார்.”

ஆதாரமற்ற அபத்தப் பேச்சு இது! திருவள்ளுவர் ஒருபோதும் காவி அணிந்து வாழ்ந்திருக்க முடியாது. அதற்கான அழுத்தமான காரணத்தைப் பிறகு பார்ப்போம்.

முதலில், திருவள்ளுவர் திருவுருவத் தோற்றத்தில் திராவிடத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்னும் அபாண்டத்துக்கு இடமில்லை என்பதை ஆதாரத்தோடு நிறுவுவோம். கவனியுங்கள்.

சேலம் ஜில்லா, காமாட்சிப்பட்டியில் கம்ப ராமாயணப் பாராயணம் செய்யும் கோட்டை வீட்டுக் குடியில் பிறப்பு - பன்மொழிப் படிப்பு - இளம்பிராயத்தில் வாய்த்த மைசூர் சமஸ்தான விகடகவி வாழ்க்கை - காந்தி, ராஜாஜி தலையீடு - விடுதலை போராட்டம் - பம்பாய் தலைமறைவு வாழ்க்கை - சேலம் சித்ரகலா ஸ்டூடியோ நிர்மாணம் - திரைப்படத் தயாரிப்பு – பொருளிழப்பு - புகழ்வரவு என்றான ரங்கராட்டின வாழ்க்கை கண்ட ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா தனது பல்லாண்டுக் கால ஆராய்ச்சிக்குப் பின்பே திருவள்ளுவருக்குத் திருவுருவம் ஒன்றைக் கண்டு நிலைகொண்டார்.

திருவள்ளுவரின் திருவுருவம் ஏன் அப்படி அமைக்கப்பட்டது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கருதி அதை விளக்க நூலாகவும் வெளியிட்டார். இந்த அரும்பணிக்காக தன் வாழ்நாளின் கடைசி வரை அரசாங்கத்திடமிருந்து துண்டு நிலம்கூட அவர் பெற்றவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம், ராஜாஜி, அண்ணா, கலைஞர், பாரதிதாசன், காமராசர், டாக்டர் சுப்பராயன், நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை, டாக்டர். ரா.பி.சேதுபிள்ளை, முகவை ராஜமாணிக்கம், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, ஈ.வெ.கி சம்பத், பேராசிரியர் அன்பழகன், கண்ணதாசன், தோழர் ஜீவா, மு.வ, கி.ஆ.பெ.விசுவநாதம், எஸ்.எஸ்.வாசன், எஸ்.ஏ.பி, ம.பொ.சி, சாண்டில்யன், தமிழ்வாணன், ஓவிய மேதை மாதவன், கிருபானந்த வாரியார், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார், சி.பி.சிற்றரசு, டி.கே.சீனிவாசன் எனப் பல்துறைச் சான்றோர்களால் நேரில் கண்டு வழிமொழியப்பட்ட பின்பு, அன்றைய ஒன்றிய - மாநில காங்கிரஸ் அரசாங்கங்களால் அந்த ஓவியம் திருவள்ளுவரின் அங்கீகரிக்கப்பட்ட திருவுருவமாக அறிவிக்கப்பட்டது!

“வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே தொடர்கிறார்கள்” : எழுத்தாளர் வே.ஸ்ரீராம் சிறப்பு கட்டுரை!

ஆண்டு 1960. அது, திராவிடத்தைத் தீவிரமாக எதிர்த்த காங்கிரஸ் காலம். ஆக, திராவிடத் தலைவர்கள் தலையிட்டு திருவள்ளுவரின் கோலத்தை மாற்றினார்கள் என்னும் அபவாதம் சுத்தமாக அடிபட்டுப் போகிறது.

பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார் கே.ஆர். வேணுகோபால் சர்மா எனினும் எந்த நிலையிலும் அவர்கள் அவரது படைப்பு சுதந்திரத்தில் தலையிட்டதில்லை என்பதே உண்மை.

பின்னர், பேரறிஞர் அண்ணா காலத்தில் ‘எங்கும் திருவள்ளுவர்’ என்பதான அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் அரசுடைமை ஆக்கப்பட்டதும்தான் திருவள்ளுவர் திருவுருவம் அமைந்ததன் சுருக்கமான வரலாறு.

உண்மை இவ்வாறிருக்க, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தமாஷ் பேர்வழிகள் சிலர் வள்ளுவருக்கு காவி அடித்து ட்வீட் செய்துவிட, அந்த ட்வீட் அக்கவுன்ட் பாஜக பெயரில் இருக்க, உலகளாவிய தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

திருவள்ளுவருக்குத் திருவுருவம் கொடுத்தவரின் மகன் என்னும் முறையில் என்னிடம் கருத்து கேட்ட மீடியாக்களிடம்… “பள்ளிக் குழந்தைகள் கேளிக்கையாக செய்யும் மாறுவேடப் போட்டி போலத்தான் இதை கொள்ள வேண்டும்” என லேசுபடச் சொன்னேன்.

ஆனால், வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே எடுத்து தொடர்ந்து செய்கிறார்கள் என அறிந்தபோது அதிர்ந்தேன். ஐயகோ, இந்த மண்ணின் மேன்மையை அழிக்கப் பார்க்கிறார்களே எனத் துடித்துப் போனேன்.

அவர்களது பிடிவாதமும் செயலும் என்ன சொல்ல வருகிறது?

திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி காமத்துப் பால் எழுதிவிட்டார் என்கிறது. அதாவது, ஆசாராம் பாபுவைப் போல பிரேமானந்தாவைப் போல திருவள்ளுவரும் போலித் துறவியாய் வாழ்ந்தவர் என மறைமுகப் பரப்புரை செய்கிறது. அப்படிப் பதிய வைப்பதன் மூலம் தமிழர் மாட்சியின் மேல் இடி பாய்ச்சப் பார்க்கிறது. அப்படித்தானே அர்த்தப்படுகிறது?

அந்த அறிவுலகத்தின் ஏதிலிப் பேதைகளுக்கு ஒன்று சொல்வேன்…

1730இல் திருக்குறளுக்குப் பொழிப்புரை எழுதிய வீரமாமுனிவர் காமத்துப் பாலுக்கு மட்டும் உரை எழுதாமல் தவிர்த்து விட்டார் என்பதை அறிவீர்களா?

ஏன் தவிர்த்தார் என்பதை எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வீர்களா?

துறவுக் கோலத்தில் இருக்கும் தான் காமத்துப் பாலுக்கு உரை எழுதுவது பொருந்தாது. அது, வருங்காலத்துக்கு தவறான செய்தியை கொண்டு சேர்த்துவிடும் எனத் தயங்கினார் வீரமாமுனிவர்.

தனது எழுத்தால் தான் அணிந்திருக்கும் காவி உடைக்கு இழுக்கு ஒன்று நேர்ந்துவிடக் கூடாதே என அஞ்சினார்.

இத்தாலியில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசஃப் என்னும் வீரமாமுனிவரே துறவுக்கோலத்தில் இருந்து கொண்டு காமத்துப் பாலுக்கு உரையெழுத அச்சப்பட்டார் என்னும்போது…

துறவுக்குப் பெயர்பெற்ற இந்தப் புண்ணிய மண்ணில் மூல நூலுக்குச் சொந்தக்காரரான திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி காமத்துப் பாலை எழுதினார் எனப் பதிய வைப்பதன் மூலம் நீங்கள் யாரைக் கேவலப்படுத்த முனைகிறீர்கள்?

“வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே தொடர்கிறார்கள்” : எழுத்தாளர் வே.ஸ்ரீராம் சிறப்பு கட்டுரை!
Kannan Satya

இப்போது புரிகிறதா… ஏன் திருவள்ளுவருக்கு துறவின் அடையாளமான காவியை அணிவிக்காமல் - அறத்தின் அடையாளமான வெண்மையை வேணுகோபால் சர்மா அணிவித்தார் என்பது?

முப்பாலையும் எடுத்துச் சொல்ல வல்ல திருவுருவம் இதுதான் என அன்று வாழ்ந்த கற்றறிந்த மேலோர்கள் ஏற்றுக்கொண்டதன் அகண்ட நியாயம் இப்போதாவது விளங்குகிறதா?

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து அறிவுகளைக் கடந்தது ஆறாம் அறிவான பகுத்தறிவு. அந்த ஆறாம் அறிவையும் கடந்து ஏழாம் அறிவாக குறிப்பறிவு உண்டு. அது கடந்தது மெய்யறிவு. அதை ஊடாடிப் போவது நுண்ணறிவு. அதற்கும் மேம்பட்ட அறிவு நிலைக்குப் பெயர் வாலறிவன் என்பது! அந்த பத்தாம் நிலையினை எட்டியவர் திருவள்ளுவர்.

சிற்றின்ப வாழ்வில் ஈடுபடும் சாதாரண மனிதர்களுக்கு நிலையாமையை எடுத்துச் சொல்லத்தான் நெற்றியில் திருநீறு பூசுச் சொல்கிறது சைவ தத்துவம். திருவள்ளுவர் சகலமும் கடந்தவர்.

நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

என நிலையாமைக்கு அதிகாரம் கண்ட திருவள்ளுவருக்கு திருநீறு பூசுவது அபத்தம் அல்லவா!

உங்கள் பிடிவாதத்துக்கு வடமொழியிலேயே காரணம் சொல்லவா?

‘காமாத் க்ரோதோ அபிஜாயதே…” என்கிறது பகவத் கீதை.

அதாவது, “ஒன்றின் மீது ஆசை வைப்பவன் அது கிடைக்கவில்லை என்றதும் மனதுக்குள் குரோதம் வளர்த்துக் கொள்கிறான். குரோதம் என்னும் அந்த ஆத்திரம் அவனது அறிவை மங்கச் செய்து விடுகிறது…” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். புரிகின்றதா?

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையை சுடும்

என்கிறார் அறத்தின் சாட்சியாக வெள்ளுடை தரித்த திருவள்ளுவர்!

ஒருபுறம் பாரதப் பிரதமர் மோடி திருக்குறளைப் பேசிப் பேசி மக்களை நெருங்கப் பார்க்கிறார். மறுபுறம் இங்கிருக்கும் தற்குறிப் பூசாரிகள் திருவள்ளுவரின் மேன்மையை காவி பூசிக் கேவலப்படுத்துவதன் மூலம் மக்களின் கோபத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தி மோடியை தமிழ் மண்ணுக்கு ஓயாமல் அந்நியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஒன்று படிப்பறிவு வேண்டும் அல்லது பட்டறிவு வேண்டும். இரண்டுமின்றி, தான்தோன்றித்தனமாகக் காலாட்டிப் பிழைக்கும் மனிதர்களை வடமொழியில் ‘அனுகூல சத்ருக்கள்’ என்பார்கள்.

ஆம், அனுகூல சத்ருக்கள் இருக்கும் வரை சாண் ஏறினால் முழம் மட்டும் அல்ல முற்றும் சறுக்கிக் கொண்டேதான் போகும். போகட்டும். அது அவர்கள் பாடு…

நம்மிடம் ஏன் மூளை வீக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதே கேள்வி? ரங்கராஜ் பாண்டே போன்ற எனது நட்புக்கினியவர்கள் கூட இந்த அனுகூல சத்ருக்களிடம் சிக்கிக் கொள்வதா என்பதே ஆதங்கம்!

கேளுங்கள்…

இந்தியம், தேசியம் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தத் தற்குறிகள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவத்தை ஏற்க மாட்டார்களாம்.

இந்திய இறையாண்மையை அதன் சட்டத்தைக் கிள்ளுக்கீரையாக்கும் இந்த ஆணவக்காரர்கள் ‘ஒன்றியம்’ என்றால் மட்டும் அனலில் அகப்பட்ட வரிக் கத்திரிக்காய் போல முகத்தை வைத்துக் கொள்வார்களாம்.

“வீரமாமுனிவர் இத்தாலியக் கிறிஸ்துவர். அவருக்கு திருக்குறளோடு என்ன வேலை…’ என சம்பந்தா சம்பந்தமில்லாமல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்வார்களாம்.

வசதிக்கேற்றபடி வக்கணை பேசுபவர்கள், ஊர் ஊராகப் பிச்சையெடுத்து திருவள்ளுவருக்கு கோயிலல்ல, கோட்டமல்ல, ஒரு கூடாரமாவது கட்டித் தருவார்களா என்றால் மாட்டார்கள். கைப்பொருள் கரையாதபடிக்கு கவனமாகக் கண்ணீர் சிந்துவார்கள்.

தேசியமே… தமிழே… எனப் போலி விசுவாசத்தில் புரண்டெழுண்டு காட்டுவார்கள்.

குமாஸ்தா மூளையை வைத்துக் கொண்டு - கோடிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு கொட்டமடிப்பார்கள். அரசல் புரசலான அரைகுறை ஞானத்தை அவரசப்பட்டு கடைவிரிப்பார்கள். அதற்கு கூச்சமேயில்லாமல் கோபுர விலை சொல்வார்கள்.

தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டு கூகுளில் காவி வள்ளுவரைத் திணித்து அங்கீகரிக்கப்பட்ட வெள்ளுடை வள்ளுவரை பின்னுக்குத் தள்ளிக் கொக்கரிப்பார்கள். நியாயங்களைக் காதுகொடுத்துக் கேட்க மறுப்பார்கள்.

எங்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. அமித் ஷா இருக்கிறார் என்றெல்லாம் அவர்களே பரப்பி விடுவதாகத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படியான அற்ப வேலைகளில் ஒருபோதும் இறங்காது எனப் பரிபூரணமாக நம்புகிறேன்.

வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது நாடெங்கும் அலையலையாக இறங்கி மக்களை மீட்கும் அர்ப்பணிப்புக் குணம் கொண்ட அந்த அமைப்புக்கு இது பொருந்தாக் கூற்று என்கிறேன்.

ஒருபடி தாண்டி அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைக்கிறேன்.

தமிழின் மீது தமிழாசான் மீது கறையடிக்கப் பார்க்கும் எவரையும் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

கவனியுங்கள்…

‘ஒன்றியம்’ எனக் காரணப் பெயர் கொண்டு அழைத்தாலும்கூட “தேசியம்” எனும்போது மூவர்ணக் கொடியின் அடியில் கண்ணீர் மல்க நிற்பவர்கள் நாங்கள். அன்றந்த கார்கில் போரின்போது தெருத்தெருவாக அலைந்து பெற்ற பொருட்களை ரயில் கொள்ளாத அளவுக்கு நிரப்பி அனுப்பியவர்கள் நாங்கள்.

அன்னை பாரதத்தை விட்டுக்கொடுக்காத எழுச்சியாளர்கள் தமிழர்கள்!

குறித்துக் கொள்ளுங்கள்…

இந்திய தேசிய கீதத்தில் “திராவிட உத்கல பங்கா” மற்றும் “பாரத பாக்ய விதாதா” ஆகிய இரண்டு வரிகள் மட்டும்தான் ஒரே ஸ்வர வரிசைகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டு வரிகளுக்குமிடையே இயற்கையாக அமைந்துவிட்ட உயர்ந்த மங்கலப் பொருளை விளக்கிச் சொன்னால் அதை திராவிடச் செருக்கு என்பார்கள் என்பதால் அமைகிறேன்.

‘திராவிட உத்கல பங்கா’ என்னும் வரிகளுக்கான ஸ்வர ஸ்தானங்கள் ‘மா… மா.…மா…’ எனத் துவங்கி திராவிடத்தின் தாய்மண் பற்றை இயல்பாகவே பறை சாற்றுகின்றதே!

ஆம், திராவிடத்தின் தேசிய குணம் இயற்கையானது. எல்லை காப்பது!

நீங்களும், தமிழின் தலைமகனாம் திருவள்ளுவரை தேசிய அடையாளமாக கருதுவீர்களேயானால் அவரது மேன்மையை சிதைக்கப் பார்ப்பவர்களை - காவி பூசியபடி காமம் எழுதினார் என அவதூறு செய்பவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டும் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

குறித்துக் கொள்ளுங்கள்...

திருவள்ளுவரைப் போன்றதோர் பேராசானை மனித குலம் இதுகாறும் கண்டதில்லை. இனிக் காணப்போவதும் இல்லை. இந்த மண்ணுக்கு அழியாப் புகழை அள்ளிக் கொடுத்தவர் திருவள்ளுவர்.

அவருக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும், அது எமனாக இருந்தாலும் நாங்கள் முழு மூச்சாக எதிர்க்கத்தான் செய்வோம்!

அப்படிப்பட்டவர்களை அருகே வைத்துக்கொள்வது ஆபத்து என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது நலம்.

வடமொழியில் சொல்வதானால்…

“அற்ப சகவாசம்; ப்ராண சங்கடம்.”

“வள்ளுவருக்கு காவி பூசுவதை ஒரு வேலைத்திட்டமாகவே தொடர்கிறார்கள்” : எழுத்தாளர் வே.ஸ்ரீராம் சிறப்பு கட்டுரை!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

நன்றி : மின்னம்பலம் இணையதளம்.

Related Stories

Related Stories