தமிழ்நாடு

சாதி பெயர்கள் நீக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆரவாரமற்ற அமைதிப் புரட்சி - கி.வீரமணி புகழாரம்

பள்ளி பாடத் திட்டத்தில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ஜாதி’ நீக்கப்படுவது போற்றி வரவேற்கத்தக்கது! தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நடக்கும் அமைதிப் புரட்சி!

சாதி பெயர்கள் நீக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆரவாரமற்ற அமைதிப் புரட்சி - கி.வீரமணி புகழாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஜாதி ஒட்டு நீக்கப்படுவது போற்றி வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

"தமிழ்நாடு பாடப் புத்தகங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் உள்ள தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களின் பின்னால் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கம் வரவேற்கத்தக்கது.

1929-லேயே தந்தை பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே (செங்கற்பட்டில்) பெயருக்குப் பின் ‘ஜாதிப் பட்டம்‘ போடுவதை தமிழ்நாட்டு மக்கள் கைவிடவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அம்மேடையிலேயே தலைவர்கள் பெயருக்குப் பின்னால் இருந்து ஜாதிப் பட்டங்கள் அகன்றன.

இந்தியாவில் இதர மாநிலங்களில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்கள்!

இந்தியாவின் இதர மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் பெயர்களில்கூட ஜாதி பின்னொட்டுகள் போடப்பட்டே வருகின்றன இன்றும்கூட!

ஆனால், தமிழ்நாட்டில் ஜாதிக்கட்சிகள் என்று சொல்லப்படுகிற பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளில்கூட தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ளாதது தந்தை பெரியாருக்கும், அவர்தம் இயக்கத்திற்கும் கிடைத்த பெருவெற்றியாகும்!

‘ஜாதிப்பட்டத்தை நீக்கினால் ஜாதி உணர்வு நீங்கி விடுமா?’ என்று குதர்க்கக் கேள்வி கேட்கக் கூடாது. அது ஒரு வெளிப்படையான, ஜாதி ஒழிப்பின் முதல் அம்சம். நல்ல தொடக்கம். முடிவு அல்ல!

பெரியார் நூற்றாண்டு விழாவின்போது எம்.ஜி.ஆர். ஆட்சியில் தெருக்களில் ஜாதி பெயர் ஒழித்த ஆணை!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஒன்றிய அரசு (ஆர்.எஸ்.எஸ்., ஜனசங், ஜனதா என்ற கூட்டு அரசில்) சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டு பெருமைப்படுத்தியபோது, வைக்கம் போராட்டம், அவரது ஜாதி ஒழிப்புப் பணிபற்றி விளக்கம் தனியே அச்சிடப்பட்ட மடலில் குறிப்பிடப்பட்டது!

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி (அ.தி.மு.க.) நடத்தியபோது, மாநில அரசின் சார்பில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஓராண்டு கொண்டாடியபோது, தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை அமலாக்கம் செய்யும் வகையில் (அடுத்தகட்டமாக) தமிழ்நாட்டு ஊர்களின், தெருக்கள் பெயர்களில் ஜாதிப் பட்டங்கள் நீக்கப்பட அரசு ஆணையே பிறப்பித்தார் - செயலுக்கும் வந்தது!

(இன்று சில தலைவர்கள் பெயர்களில் ஜாதி குறிப்பிடப்படுவதும், சென்ற அ.தி.மு.க. அரசு தெருக்களின் பெயர்களில் ஜாதிகுறித்து பெயர்ப் பலகை வைத்ததும் - எம்.ஜி.ஆர். செய்ததற்கே முரணான செயல் ஆகும்!)

பாடத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்களில் ஜாதிப் பட்டம் நீக்குவது பாராட்டத்தக்கது!

தமிழ்நாடுப் பாட நூல் நிறுவனம் சார்பில் பாடப் புத்தகங்களில் பிரபலமானவர் பெயர்களில் உள்ள ஜாதிப் பட்டத்தை அகற்றுவதினால் அவர்களது அடையாளமோ, பெருமையோ, புகழோ ஒருபோதும் மங்காது; மறையாது, ஒளிரும்!

எடுத்துக்காட்டாக உ.வே.சாமிநாதய்யர் என்பதை பாட நூலில் உ.வே.சாமிநாதர் என்றும், உ.வே.சா.வின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்றும் மாற்றப்பட்டுள்ளது!

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை என்பதை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல, ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று பேசப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, வெகு காலத்திற்குமுன்பே திராவிட இயக்கத்தவரால் ‘செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார்’ என்றே அழைக்கப்பட்டு நிலைத்துள்ளது.

‘இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று அழைக்கப்படும் சிந்தனைச் சிற்பி மா.சிங்காரவேலர் அவர்களைக்கூட, பல கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் - பழைய பழக்க தோஷம் காரணமாகவோ என்னவோ - ‘சிங்காரவேலுச் செட்டியார்’ என்று குறிப்பிடும்போது, நாம் மிகவும் வேதனைப்பட்டதுண்டு - அவரே ஜாதி, மத ஒழிப்பு வீரர்.

இயக்குநர் இமயம் நண்பர் பாரதிராஜா அவர்கள் எடுத்து வெற்றிகரமாக ஓடிய ‘வேதம் புதிது’ என்ற திரைப்படத்தில், ‘பாலுத் தேவர்’ பாத்திரமான சத்தியராஜ் அவர்கள், ஒரு பார்ப்பனச் சிறுவனை தோளில் அமர வைத்து, ஆற்றைக் கடப்பார். அந்தப் பார்ப்பன சிறுவன், ‘‘பாலுத் தேவர் என்ற உங்கள் பெயரில், பாலு என்பது உங்கள் பெயர், தேவர் என்பது நீங்கள் (படித்து) வாங்கிய பட்டமா?’’ என்று பொறி தட்டும் கேள்வியைக் கேட்கும் காட்சியை வைத்துப் பாடம் புகட்டியுள்ளார்.

ஜாதி - 5000 ஆண்டு பிற்போக்குப் பாசி!

5000 ஆண்டுகாலம் மூளையில் பாசி பிடித்து உள்ளே ஏறிய கற்பனை நோய்தான் ஜாதி. அதற்கு எந்த விஞ்ஞான அடிப்படையோ, காரண காரிய விளக்கமோ இல்லை - மனுவும், ஆரியமும் இறக்குமதி செய்த சரக்கு. ‘பகவத் கீதை’ போன்ற நூல்களில் ‘நான்கு ஜாதிகளை நானே உருவாக்கினேன்’ என்று ‘பகவான் கண்ணனே’ கூறுவதாக, ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்‘ என்று எழுதி, இன்றும் ஏய்க்கும் நிலை - வர்ணப் பாதுகாப்பு நிலை!

வருகைப் பதிவேட்டில் ஜாதி குறியா? உடனே நீக்குக!

பள்ளிகளில் - அண்மைக்கால வருகைப் பதிவேட்டில், (Attendance Register) ‘எஸ்.சி. மாணவர்’ என்று பெயருக்குப் பக்கத்தில் அடையாளப்படுத்தி, சில பள்ளிகளில் எழுதி, ஆசிரியர்கள், மாணவர்களிடையே வேற்றுமை, வெறுப்புணர்வை விதைக்கும் அவலம்பற்றியும் கூறப்படுகின்றது.

பள்ளிக்கல்வித் துறை இதுபற்றி ஒரு சுற்றறிக்கையை அனுப்பிடுவது அவசியம்! தடுத்து நிறுத்துவது அவசர, அவசியமாகும்.

தமிழ்நாட்டில் முன்காலத்தில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப்போடுவது மரியாதை - பெருமை என்று கருதப்பட்டது. தந்தை பெரியாரால், சுயமரியாதை இயக்கத்தால் அது தகர்க்கப்பட்டு விட்டது.

எனவே, இப்போது பழைய தமிழறிஞர்கள், தலைவர்களின் பெயரை ஜாதி பின்னொட்டு இல்லாமல் குறிப்பிட்டாலும், அவர்களின் அடையாளம், புகழ் காக்கப்படும்.

தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப்புரட்சி!

இதனை ஒரு விவாதப் பொருளாக ஆக்கவேண்டாம் - நாட்டையே சமத்துவபுரமாக்க வேண்டுமென்ற திராவிட இயக்க லட்சிய அடிப்படையில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் - ஆரவாரமற்ற அமைதிப் புரட்சியில் இதுவும் ஒரு மைல்கல் என்பதை வரலாறு பதிவு செய்வது உறுதி! உறுதியிலும் உறுதி!"

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories