தமிழ்நாடு

“மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

“மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் ‘‘மக்கள் முதலமைச்சர்’’ மு.க.ஸ்டாலின்" என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இடிஅமீன்கள் போல பத்திரிகையாளர்கள் மீதும், தலைவர்கள் மீதும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ததன் மூலம் மக்களாட்சியின் மாண்பினை உணர்த்துகிறார் - உயர்த்துகிறார் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மக்களாட்சியின் போற்றத்தக்க முதல் அம்சமே கருத்துச் சுதந்திரத்தை அது அங்கிகரித்து, பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்குவதாகும் (அது நமது நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாகவே கொள்ளப்பட்ட நிலையில்). விமர்சிக்கப்படும் எழுத்துகள், பேச்சுகள், கருத்துகளுக்காக சட்டத்தை ஏவி, வழக்குகள் - அழிவழக்குகள் போடுவது - பாசிச, சர்வாதிகார ஆட்சிகளுக்கு அதிகார தோரணையில் வேண்டுமானால் தேவைப்படலாம். மக்களாட்சியில் அது ஏற்கப்படக் கூடிய ஜனநாயக முறையாக இருக்க முடியாது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த ஜனநாயகக் காற்று வீசாதபடி, ஆண்டவர்கள் தங்கள் சாளரங்களை இறுக மூடிக் கொண்டார்கள். நியாயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டபோது, அதனை செவிமடுக்காமல் - கருத்தைக் கருத்தால் விளக்கம் தந்து ஐயப்படுவோரை தம் பக்கம் ஈர்க்க முயலாதவர்களாகவும், முடியாதவர்களாகவும் இருந்தபடியால், காவல்துறை, அடக்குமுறை, அழிவழக்குகளில் ஈடுபட்டு, ஜனநாயகப் பறவையின் சிறகுகளை வெட்டினார்கள்.

அதனை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாகக் கண்டறிந்து, அந்த அழிவழக்குகளை தி.மு.க அரசு, அதன் மனிதாபிமானம் பொங்கும் மக்கள் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், உடனடியாக அவ்வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு ரத்து செய்து, மக்களாட்சி மாண்பை நிலை நிறுத்தியுள்ளார்!

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில், பத்திரிகையாளர்கள்மீது தொடுக்கப்பட்ட 90 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றி செலுத்தியுள்ளது!

அதுபோலவே, அரசியல் பிரமுகர்கள், நிர்வாகிகள்மீது போடப்பட்ட 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறவும், அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், நம் முதலமைச்சர் அவர்கள் நேற்று (30.7.2021) ஆணை பிறப்பித்துள்ளதும் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டியதாகும்.

அதுபோலவே, பலப்பல அடாவடி வழக்குகளை முந்தைய அ.தி.மு.க. அரசு போட்டதற்கும் எதிராக விடியலை ஏற்படுத்துகிறார், ‘‘விடியலைத் தருவார், விவேகமும், வேகமும் மிக்க எங்கள் ஸ்டாலின்’’ என்று தேர்தலுக்கு முன் முழங்கியது எவ்வளவு மகத்தான உண்மை என்பதை உலகம் கண்டு உவகை கொள்கிறது.

“மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!

இது மாதிரி அழிவழக்குகளை ரத்து செய்து, பொருட்செலவு, நேரச் செலவுக்கு விடை தந்து, நீதிமன்றங்கள், காவல்துறை, சட்ட வழக்குரைஞர்கள் பயனுறு வகையில் நேரத்தைச் செலவழிக்க அம்முடிவு துணை செய்யும் என்பதை எவரே மறுக்க முடியும்?

விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தில் ஆரோக்கியத்தை அளக்கும் கருவி.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்கள்பற்றி திருவள்ளுவர்

மன்னர் காலத்திற்குக்கூட இடித்துச் சொல்லும் மதிஉரைஞர்கள் தேவை என்பதை வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறாரே!

‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.’’ (குறள் 448)

மன்னர்களுக்கேகூட இடித்துச் சொல்லும் அறிவுரைஞர்கள் தேவை என்று கூறும்போது, மக்கள் நாயகத்திற்கு அது எத்தனை மடங்கு கூடுதலாக தேவைப்படும் நிலை என்பதை ஏனோ மறந்து - மக்களின் வாக்குகளைப் பெற்று பிறகு ‘மாமன்னர்களைப்போல்’ அச்சிம்மாசனம் நிரந்தரம் என்பதுபோல, ‘‘ஹிட்லர்களாகவும், இடிஅமீன்களாகவும்‘’ நடந்துகொள்வது ஏற்கத்தக்கதா? இல்லையே!

பசு மாட்டுச் சாணியும், மூத்திரமும் கொரோனாவைப் போக்கடிக்காது என்ற அறிவியல் அறிஞர்கள் கருத்தைப் பிரதிபலித்து எழுதியதற்காக, பத்திரிகையாளர்மீது கடுமையான செக்ஷனில் வழக்குப் பாய்கிறது -உ.பி.யில் நடைபெறும் சாமியார் முதலமைச்சரின் பா.ஜ.க ஆட்சியில்!

தி.மு.க ஆட்சி பதவியேற்று 100 நாள்கள்கூட ஆகாதநிலை - இந்தியாவின் சிறப்புமிகு முதலமைச்சர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து முன்னணி நாயகராக நமது முதலமைச்சர் விளங்குவது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றா? இல்லை - செயல்கள் பூத்து குலுங்கி, காய்த்து, கனிந்து உலகத்தை ஈர்த்து, அணிவகுத்து நிற்கின்றன!

மக்களாட்சியின் மாண்புச் செம்மையுடன் இந்த மாண்புமிகு, மானமிகு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பெருமைகளை நாளும் குவிப்பது, அவர் ஜனநாயகக் கடமைகளை வழுவாமல் நழுவாமல் சிறப்பாக விருப்பு, வெறுப்பின்றி தன்னடக்கத்தோடு செய்வதனாலேயாகும்!

அவரது ஆட்சியில் இது முன்னுரைதான் - இனி முழுஉரை வெளிவரும்! தமிழ்நாட்டின் புதிய பொற்காலம் விடியலாகி வெளிச்சம் தரும்!

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories