தமிழ்நாடு

“வரலாற்றை செயற்கையாக உருவாக்க முடியாது” : 'கொங்கு நாடு' விவகாரம் குறித்து ஆய்வாளர் ராஜன் குறை கட்டுரை!

தமிழ்நாடு என்ற மாநிலம் எப்படி திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்வினால் பிணைக்கப்பட்டது என்பது இருநூறு ஆண்டுகால வரலாறு விரிவாக எழுதப்படும்போது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

“வரலாற்றை செயற்கையாக உருவாக்க முடியாது” : 'கொங்கு நாடு' விவகாரம் குறித்து ஆய்வாளர் ராஜன் குறை கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு என்பது திராவிட பண்பாட்டைச் சார்ந்தவர்களாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் தங்களை உணரும் வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதி வாழும் நிலப்பகுதி, மாநிலம். எந்தவொரு மக்கள் தொகுதியும் இவ்விதமான வரலாற்று தன்னுணர்வு கொள்ளும் வரலாறே அதன் மெய்யான வரலாறு. அதன் பிறகு வரலாற்று எழுதியல் மூலமாக அது தன் தொன்மையான வரலாற்றைத் தொகுத்து எழுதிக் கொள்கிறது. எந்த ஒரு நிலப்பகுதியின் தொன்மையான வரலாறும் அதில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வாழும் மக்கள் கொள்ளும் தன்னுணர்வுக்கு ஏற்ப அதன் வரலாறாக எழுதப்படும்.

உதாரணமாக காலனீய ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் என்ற ஒரு மக்கள் தொகுதி அரசியல் சொல்லாடலில் உருவானது. இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி நாடு முழுவதும் இருந்து பிரதிநிதிகளைத் திரட்டி அவர்கள் மூலமாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெறவும், பூரண சுதந்திரம் பெறவும் குரல் கொடுத்தது. அதன் விளைவாக இந்தியர்கள் என்ற ஒரு தன்னுணர்வு இந்திய நிலப்பகுதி முழுவதும் உருவானது. அதன் விளைவாக தமிழ்நாட்டின் தொன்மையான வரலாறும் இந்திய வரலாற்றின் பகுதியாகவும், தமிழ் பண்பாடும், திராவிட பண்பாடும் இந்திய மக்கள் தொகுதியின் அங்கங்களாகவும் கருதப்படுகிறது. சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது அவரை தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த பல்லவர் காலத்து துறைமுகமான மாமல்லபுரத்தில் சந்தித்து உரையாடுகிறார் இந்தியப் பிரதமர். தமிழக அரசும், அரசியல் இயக்கங்களும், மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியர்கள் என்ற மக்கள் தொகுதியில் இருப்பதால், திராவிட-தமிழ் மக்கள் என்ற வரலாற்று தன்னுணர்வு கரைந்து, கலைந்து போவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் தொகுதிகளில் தங்களை அங்கமாக வைத்துக் காண்பது மக்களுக்கு உலகம் முழுவதும் சாத்தியமாகிறது. ஐரோப்பிய பண்பாடு என்பது இதற்கு சிறந்த உதாரணம்.

பலவித தொகுப்புகளில் மக்கள் தொகுதிகள் இடம்பெறுவதன் காரணமாக தொன்மையான வரலாற்று தடயங்களை, தடங்களைப் பல்வேறு வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதிகள் தங்களுக்குரியதாக எண்ணுகின்றன. உதாரணமாக பண்டைய கிரேக்க தத்துவம், நகர குடியரசு போன்றவை ஐரோப்பிய நாகரிகத்தின் துவக்கமாகக் கூறப்படுகிறது. கிரீஸ் என்ற ஒரு தற்கால தேசத்து மக்கள் மட்டுமன்றி, மொத்த ஐரோப்பியர்கள் என்ற மக்கள் தொகுதியும் தங்கள் வரலாறு பண்டைய கிரேக்க பண்பாட்டில் துவங்குவதாக நினைக்கிறார்கள். ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் செல்வந்தர்கள், கல்வியாளர்கள் பன்னெடுங்காலமாக கிரேக்கமும், லத்தீனும் பயின்று வந்தார்கள். அதனால் கிரேக்க அரசுகளும், காவியங்களும், ரோம சாம்ராஜ்யமும், பின்னர் அங்கு நிலைபெற்ற வாடிகன் என்ற கத்தோலிக்க கிறிஸ்துவ புனித தலமும் மொத்த ஐரோப்பிய வரலாற்றுடனும் தொடர்பு கொண்டவை. அதே சமயம் நவீன கால வரலாற்றுத் தன்னுணர்வு என்று வரும்போது ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் தனித்துவம் குறித்த தன்னுணர்வுடனும், மொழி உணர்வுடனும் இருக்கிறார்கள். ஒரு ஃபிரெஞ்சுக்காரரைப் பார்த்து நீங்கள் ஃபிரெஞ்சுக்காரரா, ஐரோப்பியரா என்றால் அநேகமாக இரண்டும்தான் என்று சொல்வார். ஐரோப்பியர்கள் என்ற வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியினை ழாக் தெரிதா போன்ற புகழ்பெற்ற தத்துவவாதிகளும் ஆதரிக்கிறார்கள். தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களை பேணிக்கொண்டே, தங்கள் பொது வரலாற்றின் தனித்துவத்தையும், அது உலகின் பிற பகுதிகளிடமிருந்து வித்தியாசப்படுவதையும் குறித்து தன்னுணர்வு கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.

இன்னும் சொல்லப்போனால் உலகின் எந்த பண்பாடும் தனித்து இயங்கவில்லை; ஒன்றோடொன்று உறவும், பரிவர்த்தனையும் கொண்டிருந்தன என்பதையும் நாம் அறிவோம். எனவே மானுடப் பொதுமை என்பதையும் மக்கள் பண்பாடுகள் சிந்தித்தே வந்துள்ளன. பண்டைய காலத்திலும் சரி, நவீன வரலாற்று தன்னுணர்வுகள் தோன்றும் காலத்திலும் சரி, உலக பொதுமை குறித்த அவாவும், கோட்பாடுகளும் உருவாகி வந்துள்ளன. தனி உடமை கருத்தாளர்களும் உலக குடிமகன், உலகக் கூட்டாட்சி என்பதையெல்லாம் சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று கூறியதும், பொதுவுடமை அகிலங்கள் கட்டமைக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்வு என்பது தேசியமா?

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் மக்கள் தொகுதிகளின் தன்னுணர்வு என்றாலே தேசியம்தான் என்ற ஒரு மாயை உருவானது. உள்ளபடியே பார்த்தால் தேசியத்தை உருவாக்கி, உலகை தேசங்களாக பிரிப்பதில் முதலீட்டியத்திற்கு முக்கிய பங்கு இருந்தது. ஆனால், உலகின் பல பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த மக்கள் தன்னுணர்வு பெற்று விடுதலை கோரியதால், தேசியம் ஒரு முற்போக்கான கருத்தாக்கமாகப் பார்க்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் அது விரைவில் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கு வழிவகுப்பதாகவே மாறியது. பலவிதமான பிற்போக்குவாத, அடையாளவாத, பாசிச சிந்தனைகள் தேசியத்தினுள் புகுந்துகொள்வதை பார்த்த முற்போக்காளர்கள் பலரும் தேசியத்தை குறித்து எச்சரிக்கவே செய்தனர்.

வரலாற்று ரீதியாக தன்னுணர்வு பெரும் ஒரு மக்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்பின் அங்கமாகப் பார்க்க முடியும் என்று பார்த்தோம். தேசியத்தின் பிரச்சினை என்னவென்றால் அது தேசிய அடையாளத்தை மட்டும் முக்கியத்துவப்படுத்தி மற்ற அடையாளங்களை அதற்கு கீழ்படிந்ததாக மாற்ற வேண்டும் அல்லது துறக்க வேண்டும் என்று கூற தலைப்படுவது. அடுத்து தேசத்தின் பெரும்பான்மை அடையாளத்தையே அனைவரும் ஏற்பதுதான் தேசிய தன்னுணர்வை வலுப்படுத்தும் என்று கூறி, மற்றெல்லா வரலாற்றுத் தன்னுணர்வுகளையும் பிரிவினைவாதமாகப் பார்ப்பது.

உதாரணமாக திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்வை தமிழ் தேசியம், அது இந்திய தேசியத்தை மறுப்பது என்றெல்லாம் இந்திய தேசிய தீவிரவாதிகள் கருதுவதால் பிரிவினைவாதம் என்று பதறுகிறார்கள். இந்த அச்சத்திலிருந்து விடுபட ஒருவர் பல்வேறு விதமான மக்கள் தொகுதிகளின் அங்கமாக தன்னுணர்வு பெறுவதும், பல்வேறு வரலாறுகளுக்குப் பாத்திரங்களாக இருப்பதையும் அங்கீகரிக்க வேண்டும். தேசிய வரலாற்று எழுதியல் என்ற பெரிய டப்பாவுக்குள் எல்லா வரலாற்றையும் அடக்க வேண்டும் என்ற பதற்றம் மிகவும் தவறானது மட்டுமல்ல, சாத்தியமற்றதும் கூட.

மக்கள் தொகுதிகளின் சுயாட்சி உரிமை என்பது இறையாண்மை கோரிக்கையா?

மக்களாட்சி சிந்தனை என்பதன் அஸ்திவாரத்தில் தனிமனித சுதந்திரம் என்ற கருத்தாக்கமே வலுவாக இடப்பட்டுள்ளது. சுதந்திரமான தனி நபர்கள் குடி நபர்களாக இணைந்து தங்களை தாங்களே ஆண்டு கொள்கிறார்கள் என்பதே தத்துவம். அப்படி தங்களை தாங்களே ஆண்டு நிர்வகித்துக் கொள்வது என்பது தலமட்டத்தில், மாநில அளவில், தேசிய அளவில் பல அடுக்குகளாக அமைகிறது. இந்த ஒவ்வொரு மட்டத்திலும் சுயாட்சி உரிமைகள் சிறப்புற செயல்பட்டால்தான் அது மக்களாட்சியாகும்.

இறையாண்மை என்பது இப்படி தனி நபரிடமிருந்து ஊற்றெடுத்து தொடங்காமல், தேசிய அரசிடமிருந்து ஒழுகத் தொடங்கினால் அது ஏதோ தேசிய அரசு தன்னுடைய சொத்திலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் பிரித்து தருவதுபோல தோன்றுகிறது. இப்படி இறையாண்மையை தலைகீழாக மேலிருந்து கீழே வருவதாகப் பார்க்கும் பார்வைக்கு காரணம் பெரும்பாலும் தேசத்தின் எதிரிகள் அதாவது எதிரி நாடுகள். இல்லாவிட்டால் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இவற்றை காரணம் காட்டி தேசிய அரசுகள் தங்களிடம் அதிகாரத்தைக் குவித்துக்கொள்வதும், யார் தங்கள் உரிமையைக் கோரினாலும் இறையாண்மைக்கு ஆபத்து என்பதுமாக ஒரு மாய்மாலம் நடக்கிறது. முதலீட்டியக் குவிப்பிற்கு ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு தேவைப்படுவதும் முக்கிய காரணம்.

இந்தியாவில் நடந்தது என்ன?

காலனீய ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் வரலாற்று தன்னுணர்வு பெற்றபோது அது ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மக்கள் பேசும் மொழியிலேயே உருவானது. கட்டபொம்மன் குறித்தும், ஊமைத்துரை குறித்தும், கான் சாகிப் குறித்தும் கதைப்பாடல்களை உருவாக்கியது யார் என்பது தெரியாது. ஆனால், இந்தப் பாடல்கள் பரவலாக புழக்கத்தில் இருந்தன. அச்சில் வெளிவந்தன. நிகழ்கலை வடிவங்கள் பெற்றன. வரலாற்று தன்னுணர்வு இப்படித்தான் மெள்ள, மெள்ள மக்கள் பேசும் மொழியில் உருவாகியது. மதுரகவி பாஸ்கரதாஸ், நாமக்கல் இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதி என தமிழ் பாடல்கள், கவிதைகளில்தான் இந்திய தேசிய தன்னுணர்வும் வளர்ந்தது.

துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. வரலாற்று தன்னுணர்வின் களமே தாய்மொழிதான் என புரிந்துகொள்ளாமல் அவர்கள் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட இந்தி மொழியை அனைத்து இந்தியர்களையும் பயில வைத்து தேச ஒற்றுமையை உருவாக்கலாம் என நினைத்தார்கள். அந்த பித்து இன்றும் வட இந்தியர்களுக்கு போகவில்லை. ஆனால், இந்திய மக்கள் தொகுதிகளோ தமிழ், மலையாளம், கன்னடம். தெலுங்கு, ஒரியா, வங்காளம், அஸ்ஸாமி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி என செப்பு மொழி பதினெட்டில் சிந்தை ஒன்றுடன் தன்னுணர்வு பெற்றது. இதனால் இயல்பாகவே வரலாற்று தன்னுணர்வு என்பது தாய்மொழி பேசும் மக்கள் தொகுதியாகவும், இந்திய மக்கள் தொகுதியாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வரலாற்று தன்னுணர்வாகவே வளர்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூடுதலாக பார்ப்பனீய கருத்தியல் எதிர்ப்பு முக்கியமான வரலாற்று தன்னுணர்வாக சேர்ந்துகொண்டது. இது திராவிட பண்பாடு என்ற அடையாளத்தை வலியுறுத்தியது. பார்ப்பனீயத்தை, ஜாதீயத்தை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் இருந்ததால், அந்த மொழியே ஆரிய பார்ப்பனீய அடையாளத்தின் அடிப்படையாக இருந்ததால், தமிழை மூலமாகக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத மொழியிடமிருந்து திட்டவட்டமாக வேறுபட்ட வரலாற்று மூலத்தைக் கொண்டிருந்ததால், சாதீய எதிர்ப்பு என்பது திராவிட பண்பாட்டு அடையாளமாக கொள்ளப்பட்டு முற்போக்கு சமத்துவ நோக்கு திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்வின் அங்கமாக மாறியது.

இதனால் சாதிகள் உடனே மறைந்துவிடவில்லை என்றாலும், சாதீய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான மனோபாவமே அரசியலின் அடிப்படை என்ற எண்ணமாவது பரவலாக உருவாகியது. இது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டங்களில் உறுதிப்பட்டு திராவிட இயக்கங்களின் மூலமாக வேர்பிடித்து ஒரு தனித்துவமிக்க வரலாற்று தன்னுணர்வை திராவிட-தமிழ் மக்களிடையே உருவாக்கியது. அகண்ட கேரளம், விசால ஆந்திரா, மராத்தியம், குஜராத்தி, பஞ்சாபி என பல மொழி பேசும் மக்கள் தொகுதிகளின் வரலாற்று தன்னுணர்விலிருந்து சற்றே மாறுபட்ட வலுவான முற்போக்கு அரசியல் உள்ளடக்கம் திராவிட-தமிழ் வரலாற்று தன்னுணர்வுக்கு கிடைப்பதற்கு பார்ப்பனீய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு ஆகியவை அதன் வரலாற்று இடுபொருள்களாக அமைந்ததுதான் காரணம். அவற்றை வலுப்படுத்தக்கூடிய பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் உருவானதும் தமிழ் மக்களின் நற்பேறு என்று கூற வேண்டும். அதனால் தமிழ்நாடு இன்று இந்திய அரசமைப்பை முழுமையான கூட்டாட்சி தத்துவத்தை நோக்கி நகர்த்தும் வரலாற்று பாத்திரத்திற்கு தயாராக இருக்கிறது.

நாடு என்றால் என்ன?

நாடு என்ற வார்த்தை நிலத்தை, நிலப்பகுதியைக் குறிப்பது. ஒரு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதியும் நாடுதான், விவசாய நிலங்களுக்கு இடையிலுள்ள கிராமமும் நாடுதான். அதனால்தான் நாட்டுப்புறம், நாட்டுப்புறத்தான், “நாட்டுகட்டை” என்றெல்லாம் சொல்கிறோம். ஆங்கிலத்திலும் அப்படித்தான். Country என்பது அரசுக்கு உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும். Country Side என்றால் கிராமப்புற பகுதி என்று தரும். நாசூக்கு, நாகரிகம் தெரியாதவரை Country Brute எனச் செல்வாக்கான ஆங்கிலம் படித்த தமிழ் மக்கள் இகழ்வதையும் கேட்டுள்ளேன்.

“வரலாற்றை செயற்கையாக உருவாக்க முடியாது” : 'கொங்கு நாடு' விவகாரம் குறித்து ஆய்வாளர் ராஜன் குறை கட்டுரை!

அதனால் தமிழ்நாடு என்ற அரசுக்கு உட்பட்ட நிலப்பகுதிக்குள், மாநிலத்திற்குள் பல நாடுகள் இருப்பது இயற்கை. நாஞ்சில் நாடு, கொங்கு நாடு போன்றவை பிரபலமான பெயர்கள். இதைத்தவிர இவற்றுக்குள்ளாகவே நிறைய நாடுகள் உள்ளன. ஆறு நாட்டு வேளாளர் என்றொரு சாதியே உள்ளது. என்னுடைய மானுடவியல் ஆசிரியர் வாலண்டைன் டானியலின் Fluid Signs: Being a Person in a Tamil Way என்ற நூல் இந்த ஆறு நாட்டு வேளாளர்களை குறித்ததுதான். புலம்பெயர்ந்து வந்த கவுண்டர் இன மக்கள் திருச்சி-நாமக்கல் மாவட்டத்தில் ஆறு நாடுகளில் குடியேறியதால் இந்த ஆறு நாட்டு வேளாளர் என்ற பெயர்.

கொங்கு நாடு என்ற பகுதி சில தனித்துவமான பண்பாட்டு கூறுகள் உள்ளதாக இருப்பது இயல்பு. அந்த வித்தியாசம் என்பது தனித்த வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியாக மாறுவதும், அது இருநூறாண்டுகளில் பல்வேறு வரலாற்று உந்துவிசைகளில் உருவான திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்விலிருந்து விலக்கம் கொள்வதும் சாத்தியமற்றது. வரலாறு என்பது ஒரு ஆற்றினைப் போல தன் போக்கில் ஊற்றெடுத்துப் பெருகுவது. செயற்கையாக போர்வெல் துளைபோட்டு ஒரு ஆற்றினை உருவாக்க முடியாது. தமிழ்நாடு என்ற மாநிலம் எப்படி திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் வரலாற்று தன்னுணர்வினால் பிணைக்கப்பட்டது என்பது அந்த தன்னுணர்வு உருவாக்கத்தின் இருநூறு ஆண்டுக் கால வரலாறு விரிவாக எழுதப்படும்போது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். இதனுள் இடம்பெறும் எந்த தொகுதியின் வரலாறும் முரணற்ற வித்தியாசமாகவே இதனுள் தனித்தியங்கும் அளவு திராவிட-தமிழ் தன்னுணர்வின் வரலாறு என்பது ஒரு பன்னெடுங்கால பண்பாட்டு நீரூற்றிலிருந்து பிறந்து பெருகியது.

கட்டுரையாளர்:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி.

நன்றி: மின்னம்பலம்

banner

Related Stories

Related Stories