தமிழ்நாடு

“எனக்கு கிடைக்காதவ உயிரோடவே இருக்கக்கூடாது” - இளம்பெண்ணை ஈட்டியால் குத்திக் கொன்ற கொடூர இளைஞர் தற்கொலை!

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை குத்திக் கொலை செய்தவர், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“எனக்கு கிடைக்காதவ உயிரோடவே இருக்கக்கூடாது” - இளம்பெண்ணை ஈட்டியால் குத்திக் கொன்ற கொடூர இளைஞர் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஒருதலையாக காதலித்த இளம்பெண்ணை ஈட்டியால் குத்திக் கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் - மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு தனலட்சுமி (24) என்ற மகள் உள்ளார். இவர் பி.ஏ பட்டதாரி.

கொளப்பாடி கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு தனலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வகையில் தனலட்சுமி சென்று வரும்போது, அவரது பாட்டி வீட்டின் அருகே வசிக்கும் அண்ணாதுரை மகன் அருள்பாண்டியன் (30) என்பவர் தனலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

வெளிநாடு சென்று வேலைபார்த்துவிட்டு சொந்த ஊருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அருள்பாண்டியன், தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தன் காதலின் அடையாளமாக அருள்பாண்டியன் தனது கையில் தனலட்சுமியின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமி வீட்டிற்கு அருள்பாண்டியன் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். அருள்பாண்டியனுக்கு பெண் தர முருகேசன் மறுத்துள்ளார்.

தனக்கு கிடைக்காத பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், அருள்பாண்டியன் அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக நேரம் பார்த்து காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கொளப்பாடி கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு தனலட்சுமி வருவதை அறிந்த அருள்பாண்டியன், தனது கோழிப்பண்ணையில் பாம்பை குத்திக்கொல்வதற்காக வைத்திருந்த ஈட்டி போன்ற ஆயுதத்துடன் காத்திருந்துள்ளார்.

அல்லிநகரத்தில் இருந்து தனலெட்சுமி அவரது தந்தை முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, அருள்பாண்டியன் திடீரென தனலட்சுமியின் முதுகுப்பகுதியில் ஈட்டியால் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்தார். தனலட்சுமியை ஈட்டியால் குத்தி கொலை செய்த உடன் தப்பி ஓடிய அருள்பாண்டியன் தனது கோழிப் பண்ணை அருகே இருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலிஸார் 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருதலையாக காதலித்த பெண்ணை ஈட்டியால் குத்திக் கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories