தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு? - ஆணையர் தலைமையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!

துப்புரவு பணியாளர்கள் சிலர் பாலியல் தொந்தரவு உள்ளதாக குற்றம்சாட்டிய நிலையில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு? - ஆணையர் தலைமையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

துப்புரவு பணியாளர்கள் சிலர் பாலியல் தொந்தரவு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதுகுறித்து ஆணையர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 12,000 ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது குறித்த ஆலோசனை கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் மா‌.வெங்கடேசன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் இணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பின்னர் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் மா‌.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பணி நீக்கம் செய்யப்பட்ட 12,000 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தூய்மை பணியாளர்கள் முன்வைத்ததாகவும், எங்கள் ஆணையம் சார்பில் அரசிற்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “துப்புரவு பணியாளர்கள் சிலர் பாலியல் தொந்தரவு உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதுகுறித்து ஆணையர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும், மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடக்கூடாது. அதைச் செய்யுமாறு யாரேனும் வற்புறுத்தினாலும் புகார் அளிக்க இலவச எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ள துப்புரவு பணியாளர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரியுள்ளோம். தூய்மைப் பணியாளர்களுக்கு தனி ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories